வத்திக்கான் பெருங்கோவிலில் புனித பேதுரு திருவுருவம் வத்திக்கான் பெருங்கோவிலில் புனித பேதுரு திருவுருவம் 

திருத்தந்தையர் வரலாறு – ஒரே நேரத்தில் 4 திருத்தந்தையர்கள்

திருத்தந்தைக்குரிய பதவிப் போட்டியில் 3 திருத்தந்தையர்கள் ஈடுபட்டதால், மன்னர் தலையிட்டு நான்காவதாக ஒருவரை நியமித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  

1012ம் ஆண்டு திருத்தந்தை 4ம் செர்ஜியுஸ் மரணமடைய, அடுத்து திருத்தந்தையானவர் திருத்தந்தை எட்டாம் பெனடிக்ட். இவர் Tusculum  பிரபு குடும்பத்து Gregoryயின் மகன், மற்றும் ,அடுத்த திருத்தந்தை 19ம் யோவானின் சகோதரர். பொது நிலையினராக, அதாவது அருள்பணியாளராகக்கூட இல்லாத இவரை கட்டாயப்படுத்தித்தான் மே மாதம் 18ம் தேதி திருத்தந்தை நாற்காலியில் உட்கார வைத்தார்கள் என வரலாறு கூறுகிறது. கட்டாயப்படுத்தப்பட்டு திருத்தந்தையாக்கப்பட்டாலும் இவர் நேர்மையானவராக, உறுதியானவராக இருந்தார். 1014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஜெர்மன் அரசர் 2ம் ஹென்றியை பேரரசராக முடிசூட்டியவரும் இவரே. அக்கால திருத்தந்தையர்களின் நிர்வாகத்தில் அதிகமாக தலையிட்டு ஆட்சி நடத்தி வந்த Crescentius குடும்பத்தைக் கட்டுப்படுத்தி ஓரளவு  தனக்குக்கீழ் கொண்டு வந்ததன் வழியாக இத்தாலியில் அமைதி நிலவ உதவினார்  இத்திருத்தந்தை. இவர் ஜெர்மனிக்கு பயணம் செய்து, Bamberg பேராலயத்தை திருநிலைப்படுத்தியதுடன், Fulda துறவு மடத்தையும் சந்தித்தார். குளினி துறவுசபையினர் கொணர்ந்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பேரரசருடன் இணைந்து Paviaவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆயர் பேரவையைக் கூட்டியவரும் திருத்தந்தை எட்டாம் பெனடிக்டே. குளினி துறவுசபை அதிபர், புனித Odiloவின் சிறந்த நண்பரான இத்திருத்தந்தை, உரோமில் அதிகாரமிக்கவராகவும், வெளியுலகில் மிகவும் தெரியப்பட்டவராகவும் இருந்தார்.

      நாம் ஏற்கனவே பார்த்தோம், Crescentius குடும்பம் ஒடுக்கப்பட்டு, Tusculum பகுதி பிரபுக்கள் உரோமைய அதிகாரத்தைக் கொண்டனர் என்று. திருத்தந்தை எட்டாம் பெனடிக்டும் அப்பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரே. இவர் திருத்தந்தையாக பொறுப்பிலிருந்தபோது, இவரின் சகோதரர் ரொமானுஸ் உரோம் நகரின் செனட்டராகவும் உயர்அதிகாரியாகவும் இருந்தார். திருத்தந்தை எட்டாம் Benedict 1024ல் ஏப்ரல் மாதம் 9ந் தேதி உயிரிழந்தபோது, உடனே அவரின் சகோதரரான உரோம் செனட் அங்கத்தினர் ரொமானுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் பொது நிலையினராக இருந்ததால் உடனடியாக அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். 19ம் யோவான் என்ற புதுப்பெயரை எடுத்துக்கொண்டு, திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். 1027ம் ஆண்டு இவர் புனித பேதுரு பெருங்கோவிலில் வைத்து மன்னர் இரண்டாம் Conradஐ பேரரசராக முடிசூட்டினார். ஆனால், பேரரசருக்கும் திருத்தந்தைக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில், இதுவரை திருத்தந்தையர்களுக்கென கொடுக்கப்பட்ட பல சலுகைகள் பேரரசரால் பறிக்கப்பட்டன. நிதித் தொடர்புடையவைகளில் இவர் நேர்மையாக இருக்கவில்லை என குற்றச்சாட்டுகள் உள்ளன. மன்னர்களிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று, அவர்கள் சார்பாக திருஅவை முதுபெரும்தந்தையர்களை  நியமிக்கவும், அவர்களின் அதிகாரங்களை அதிகரிக்கவும் முயன்றார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1032ம் ஆண்டு அக்டோபர் 20ந் தேதி இவர் உயிரிழந்தார்.

திருத்தந்தை 9ம் பெனடிக்ட்

   இரு சகோதர திருத்தந்தையர்களின் ஆட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர் திருத்தந்தை 9ம் பெனடிக்ட். இவரும் Tusculum பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, முந்தைய இரு திருத்தந்தையர்களின் நெருங்கிய உறவினர். இத்திருத்தந்தை 9ம் பெனடிக்ட், தன் தந்தை Albericன் தலையீட்டின்பேரில் பதவிக்கு வந்தபோது இவரின் வயது 12. ஆனால், சில வரலாற்று ஆசிரியர்கள் இவரின் வயது அப்போது 20 என்றும் கூறுகின்றனர். இவரின் இளவயது வாழ்வு அவ்வளவு ஏற்புடையதாக இல்லாமல் இருந்ததால், உரோம் நகர மக்களுள் ஒரு பிரிவினர் இவரை திருத்தந்தை பொறுப்பிலிருந்து விரட்டிவிட்டு, மூன்றாம் சில்வெஸ்டர் என்பவரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இவரின் தேர்வு முறையானதா, இல்லையா, இவர் முறையான திருத்தந்தையா அல்லது எதிர் திருத்தந்தையா என்ற கேள்விக்கு இன்றும் விடையில்லை. மேலும், இவர் சிறிது காலமே, அதாவது, இரண்டு மாதங்கள் போல்தான் பதவியிலிருந்தார். Tusculum குடும்பத்தால் வீழ்த்தப்பட்ட, Crsecentius குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் இத்திருத்தந்தை. மூன்றாம் சில்வெஸ்டர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை கேள்விப்பட்ட உடனேயே, அவரை திருஅவையிலிருந்து நீக்கி வைத்தார், விரட்டப்பட்ட திருத்தந்தை 9ம் பெனடிக்ட். திருத்தந்தை சில்வெஸ்டரும் தன் பழைய இடமான Sabina ஆயர் பதவிக்கு திரும்பினார். 1062ம் ஆண்டுவரை அப்பதவியை வகித்து அங்கேயே மரணமடைந்தார்.

   மூன்றாம் சில்வெஸ்டர் இரண்டு மாதங்களே பதவி வகித்து வெளியேற்றப்பட்ட நிலையில், உரோம் நகருக்கு மீண்டும் திரும்பிய திருத்தந்தை 9ம் பெனடிக்ட் இரண்டே மாதங்களில் தன் பதவியை தனக்கு ஆதரவாயிருந்த John Gratianக்கு விட்டுக் கொடுத்தார். பதவியை விட்டுக்கொடுத்தாரா அல்லது, விற்றாரா என்பது கேள்விக்குறியே. John Gratianக்கும் திருத்தந்தை 6ம் கிறகரிக்கும் இடையே 1045ம் ஆண்டு மே மாதம், பதவிப்போட்டி தலைதூக்கியது. இந்த பிரச்சனையில் மன்னர் மூன்றாம் Henry தலையிட வேண்டியதாகியது. ஒரே நெரத்தில் மூன்று திருத்தந்தையர்களையும் அழைத்தார் மன்னர். அதாவது ஒன்பதாம் Benedict, மூன்றாம் Sylvester, 6ம் கிறகரி  என மூவரும் மன்னர் முன் Sutri பொதுச்சங்கத்தில் 1046ம் ஆண்டு நிறுத்தப்பட்டனர். மூவரையும் பதவி விலக்குவதாக அறிவித்த மன்னர், ஜெர்மனியின் Bamberg ஆயர் Sudigerஐ திருத்தந்தையாக நியமித்தார். இவரும் இரண்டாம் Clement என்ற பெயரை எடுத்துக்கொண்டு பதவியேற்றார். ஒரே நேரத்தில் 4 திருத்தந்தையர்கள் உயிரோடு இருந்த காலம் இது. புதிதாக பதவியேற்ற திருத்தந்தை இரண்டாம் Clement எட்டே மாதங்களில் திடீரென உயிரிழக்க, உரோமை மக்களுள் ஒரு பிரிவினரோ, பழைய திருத்தந்தை 9ம் பெனடிக்ட் அப்பதவிக்கு மீண்டும் வரவேண்டுமென கொடி தூக்கினர். இவர்கள் திருத்தந்தையால் விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கலாம் என சில வரலாற்று ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

  மீண்டும் பதவிக்கு வந்த 9ம் பெனடிக்ட்டுக்கு என்ன நிகழ்ந்தது என வரும் வாரம் காண்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2021, 13:18