டோக்கியோவின் பேராயர் Tarcisius Isao Kikuchi டோக்கியோவின் பேராயர் Tarcisius Isao Kikuchi 

மியான்மார் அமைதிக்காக டோக்கியோ பேராயரின் திருப்பலி

ஜப்பான் தலத்திருஅவை சிறப்பிக்கும் 'அமைதிக்காக பத்து நாள்கள்' இறைவேண்டல் நாள்களில், இவ்வாண்டு, மியான்மார் நாட்டின் அமைதிக்காக, டோக்கியோ உயர் மறைமாவட்டம், இறைவேண்டலையும், திருப்பலியையும் மேற்கொண்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி முடிய, 'அமைதிக்காக பத்து நாள்கள்' என்ற மையக்கருத்துடன் ஜப்பான் தலத்திருஅவை சிறப்பிக்கும் சிறப்பு இறைவேண்டல் நாள்களில், இவ்வாண்டு, மியான்மார் நாட்டின் அமைதிக்காக, டோக்கியோ உயர் மறைமாவட்டம், இறைவேண்டலையும், திருப்பலியையும் மேற்கொண்டது.

ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய இருநாள்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளை வீசியதை நினைவுகூரும் வண்ணம் ஆகஸ்ட் 6 முதல் 15 முடிய பத்து நாள்களை, அமைதிக்காக செபிக்கும் நாள்களாக ஜப்பான் தலத்திருஅவை கடைப்பிடித்து வருகிறது.

இவ்வாண்டு கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த பத்து நாள்களில், டோக்கியோவின் கண்காணிப்பில் இணைக்கப்பட்டுள்ள மியான்மார் திருஅவைக்காக, ஆகஸ்ட் 8ம் தேதி சிறப்பான திருப்பலியை, டோக்கியோவின் பேராயர் Tarcisius Isao Kikuchi அவர்கள் நிறைவேற்றினார்.

இத்திருப்பலியில் மறையுரை வழங்கிய பேராயர் Kikuchi அவர்கள், அமைதி இயலக்கூடியது என்பதையும், அமைதி மட்டுமே மியான்மார் நாட்டுக்கு முன்னிருக்கும் ஒரே வழி என்பதையும் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

1982ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் ஜப்பான் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஆயர் பேரவை, ஒவ்வோர் ஆண்டும் 'அமைதிக்காக பத்து நாள்கள்' இறைவேண்டல் முயற்சியைத் துவக்கியுள்ளது.

2019ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பான் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், "அனைத்து உயிரையும் காப்பதற்கு" என்பதை அப்பயணத்தின் விருதுவாக்காக கொண்டிருந்ததையடுத்து, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 'அமைதிக்காக பத்து நாள்கள்' முயற்சிக்கு, "அனைத்து உயிர்களையும் காப்பது, அமைதியை உருவாக்குகிறது" என்பது மையக்கருத்தாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2021, 14:11