மியான்மார் இராணுவ அரசுக்கு எதிரான போராட்டங்கள் மியான்மார் இராணுவ அரசுக்கு எதிரான போராட்டங்கள் 

மக்களுக்கு, கண்ணீர் சிந்தும் இரவுகளைக் கொணர்ந்த நிர்வாகம்

கர்தினால் போ : மியான்மார் தலைவர்கள், சட்டத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் தலைக்கும், அன்பிற்கு முதலிடம் கொடுக்கும் இதயத்திற்கும் இடையே இணைக்கத்தைக் காண முன்வரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில், கடந்த ஏழு மாதங்களின் உயிரிழப்புகளும், மக்களின் விரக்தியும், அன்பின் இருப்பிடமான இதயத்தை பயன்படுத்தாமல் சிலர் வகுத்த சட்டங்களால் நேர்ந்தவை என, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் சார்ல்ஸ் போ.

மியான்மார் நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் மரணத்தையும் விரக்தியையும் விதைத்துள்ள தலைவர்கள், தங்கள் தலைமைத்துவப் பண்பிலும், பொறுப்புகளிலும் தவறியுள்ளனர் என தன் ஞாயிறு மறையுரையில் குற்றஞ்சாட்டிய கர்தினால் போ அவர்கள், தலைகளால் வகுக்கப்பட்ட திட்டங்களைக் கொண்டு, மக்களின் இதயங்களோடு அரசுத்தலைவர்கள் மோதுகிறார்கள் என்றார்.

18 மாதங்களாகத் தொடர்ந்துவரும் தொற்றுநோய் மரணங்களும், வாழ்வாதார இழப்புகளும், மற்றும், கடந்த ஏழு மாத சமுதாயப் போராட்டங்களும், ஏமாற்றங்களும், மரணங்களும், விரக்திகளும் மியான்மார் மக்களுக்கு கண்ணீர் சிந்தும் இரவுகளைக் கொணர்ந்துள்ளன என உரைத்த கர்தினால் போ அவர்கள், நன்னெறிகளையும் தாராள மனப்பான்மைகளையும் கவசமாகக் கொண்டிருக்கும் மியான்மார் மக்களுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

கிறிஸ்தவர்கள் என்பவர்கள், இறைவார்த்தையைக் கேட்பவர்கள் மட்டுமல்ல, இறைவார்த்தையின்படி நடப்பவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் போ அவர்கள், அன்பு, மற்றும் இரக்கத்தின் கட்டளைகளுக்கு எதிராக, சட்டத்தை, சட்டரீதியாக கடைபிடிப்பதை, இயேசு கண்டித்ததையும் எடுத்துரைத்தார்.

இன்றைய மியான்மார் தலைவர்கள், சட்டத்தை மட்டுமே உயர்த்திப்பிடிக்கும் தலைக்கும், அன்பிற்கு முதலிடம் கொடுக்கும் இதயத்திற்கும் இடையே இணக்கத்தைக் காண முன்வரவேண்டும் என்ற அழைப்பும், மியான்மார் கர்தினாலால் விடப்பட்டது.

இதயத்தைக் கைவிட்டு, தலைகளால் மட்டும் ஆள்வது, மக்களுக்கு பெருந்துயர்களைக் கொணர்ந்துள்ளது என்று கவலையை வெளியிட்ட கர்தினால் போ அவர்கள், தங்கள் ஆட்சியைக் கட்டிக்காக்க பல்வேறு நாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் மியான்மார் அரசின் செயலையும் வன்மையாகக் கண்டித்ததுடன், ஒருவர் ஒருவர் மீதுள்ள அன்பெனும் ஆயுதத்தால் நம்மை நிறைப்போம் என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2021, 11:41