புரூண்டி மாணவர்களுடன் சலேசிய துறவு சபையினர் புரூண்டி மாணவர்களுடன் சலேசிய துறவு சபையினர் 

திருஅவையின் பணிகளைப் பாராட்டும் புரூண்டி அரசுத்தலைவர்

புரூண்டி நாட்டின் கல்வித்துறையிலும், ஒப்புரவுப் பணிகளிலும், சமுதாய முன்னேற்றப் பணிகளிலும் கத்தோலிக்கத் திருஅவை பாராட்டும் விதத்தில் சேவையாற்றி வருவதாக அரசின் பாராட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

புரூண்டி நாட்டின் வளர்ச்சியில் அந்நாட்டு கத்தோலிக்க திருஅவையின் பங்களிப்பு குறிப்பிடும்படியானது என தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு அரசுத் தலைவர்.

புரூண்டி அரசுத்தலைவர் Evariste Ndayishimiye அவர்களுக்கும், அந்நாட்டு ஆயர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த பாராட்டுக்களை வெளியிட்ட அரசுத்தலைவர், கல்வித்துறையிலும், ஒப்புரவுப் பணிகளிலும், சமுதாய முன்னேற்றப் பணிகளிலும் கத்தோலிக்கத் திருஅவை, பாராட்டும் விதத்தில் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

ஆயர்களின் அனைத்து முயற்சிகளும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுபவைகளாக உள்ளன என உரைத்த அரசுத்தலைவர் Ndayishimiye அவர்கள், சமுதாய சரிநிகர் நிலையை பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும், தன் அரசு தொடர்ந்து முயன்றுவருவதாக ஆயர்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளின் தல அரசு நிர்வாகங்களில் அதிகார அத்துமீறல்கள் இடம்பெறுகின்றபோதிலும், பொதுவாக புரூண்டி நாட்டில் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துவருவதைக் காணமுடிகின்றது என்ற ஆயர்கள், மக்களிடையே பொருள் உற்பத்தி ஒன்றியங்களைத் துவக்கும் முயற்சிகளை, திருஅவை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் வாழும் புரூண்டியின் புலம்பெயர் மக்கள் பெருமளவில் சொந்த நாட்டிற்கு திரும்பிவந்துகொண்டிருப்பதே, அந்நாட்டின் அமைதிச்சூழலை பறைசாற்றுவதாக உள்ளது என, அரசுத் தலைவரும், ஆயர்களும், தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2021, 14:48