ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாலியின் உரோம் நகரில் ஆகஸ்ட் 19ம் தேதி வந்திறங்கிய பயணிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாலியின் உரோம் நகரில் ஆகஸ்ட் 19ம் தேதி வந்திறங்கிய பயணிகள் 

ஆப்கான் மக்களுக்கு புகலிடம் - அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் உருவாகிவரும் மனிதாபிமான நெருக்கடிநிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாடு, தங்கள் நாட்டில் குடியேற விழையும் அந்நாட்டு மக்களுக்கு சிறப்பான குடியேற்ற அனுமதியை துரிதகாலத்தில் வழங்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உருவாகிவரும் மனிதாபிமான நெருக்கடிநிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தங்கள் நாட்டில் குடியேற விழையும் அந்நாட்டு மக்களுக்கு, சிறப்பான குடியேற்ற அனுமதியை, துரிதகாலத்தில் வழங்குமாறு, அந்நாட்டு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைவீரர்கள் மீண்டும் தாயகம் திரும்ப, அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்நாட்டை, தாலிபான் அமைப்பு கைப்பற்றியதையடுத்து, அங்கிருந்து வெளியேறி, அமெரிக்க  ஐக்கிய நாட்டில் தஞ்சம் புகுவதற்கு அனுமதி கோரிய, 30,000 பேருக்கு, குடியேற்ற அனுமதி விசாக்களை வழங்க, அமெரிக்க அரசு முன்வந்துள்ளது.

30,000 பேருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்குவது மிகப்பெரும் வேலை என்பதை அறிகிறோம் என்று கூறிய அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் Mario Dorsonville மற்றும், David Malloy ஆகிய இரு ஆயர்கள், எனினும், அங்கு உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடியை மனதில்கொண்டு, இந்தப் பணியை, அரசு, மிக விரைவில் செய்யுமாறு விண்ணப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிவரும் செய்திகளும், காணொளித் தொகுப்புகளும் வேதனையை உருவாக்குகின்றன என்று கூறிய ஆயர்கள், குறிப்பாக, அந்நாட்டில், கடந்த 20 ஆண்டுகளாக, பெண்களும், சிறுமிகளும் அடைந்துவந்த முன்னேற்றம், பெருமளவில் பாதிக்கப்படும் என்பதால், குடியுரிமை பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள் இதுநாள் வரை செய்துவந்த உதவிகளை இனியும் தொடரும் என்று உறுதி அளித்துள்ள ஆயர்கள், மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் அனைத்து வழிகளையும் உறுதி செய்வது, தற்போது, இவ்வமைப்புக்களின் தலையாய கடமையாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆயுதங்களின் ஓசை நின்று, உரையாடல் வழியே இணைக்க வாழ்வை உருவாக்கும் வழிகளை அனைவரும் இணைந்து கண்டுபிடிக்க இறைவேண்டல் செய்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், தங்கள் குரலையும் இணைத்துள்ளனர். (CNS/UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2021, 13:50