இளம் கிறிஸ்தவ காலநிலை கூட்டமைப்பின் நடைப்பயணம் இளம் கிறிஸ்தவ காலநிலை கூட்டமைப்பின் நடைப்பயணம்  

இளம் கிறிஸ்தவ காலநிலை கூட்டமைப்பின் நடைப்பயணம்

காலநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிநிலைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் 750 மைல் நடைப்பயணம் பர்மிங்காமிலிருந்து கிளாஸ்கோ வரை இடம்பெறுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு நவம்பர் மாதத்தில், பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும்   COP 26 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த, 26வது உலக உச்சி மாநாட்டை முன்னிட்டு, இளம் கிறிஸ்தவ காலநிலை கூட்டமைப்பைச் (YCCN) சேர்ந்தவர்கள், 750 மைல் நடைப்பயணம் ஒன்றைத் துவக்குகின்றனர்.

கோவென்ட்ரி, மற்றும், பர்மிங்காம் ஆகிய இரு நகரங்களிலுள்ள திருப்பாடுகளின் துறவு சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைப்பயணம், ஆகஸ்ட் 21, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.

காலநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிநிலைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் இடம்பெறும் இந்த நடைப்பயணத்தில் பங்குபெறுவோர், பத்து நகரங்கள் வழியே சென்று, இறுதியில், கிளாஸ்கோ நகரைச் சென்றடைவர்.

இவர்கள் செல்லும் வழியில் உள்ள பங்குத்தளங்கள், இளையோர் அமைப்புகள், மற்றும், அனைத்து வயதினரும் நடைப்பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும், அப்பயணத்தின்போது, காலநிலை மாற்றம் குறித்த விவகாரங்கள் பற்றி கலந்துரையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைப்பதற்கு, தனிநபரின் பங்கு என்ன என்பது குறித்தும், இந்நடைப்பயணத்தில் ஆலோசனைகள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2021, 15:32