பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம் - திருப்பாடல் 16:3 பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம் - திருப்பாடல் 16:3 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 2

16ம் திருப்பாடலில் பதிவாகியுள்ள ஒவ்வொரு இறைவாக்கியத்தையும் ஆழ்ந்து சிந்தித்தால், நமக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 2

ஜூலை 31, கடந்த சனிக்கிழமை, லொயோலாவின் புனித இக்னேசியஸ் திருநாள் சிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு, உலகெங்கும் பணியாற்றும் இயேசு சபையினர், புனித இக்னேசியஸ் மனமாற்றம் பெற்றதன் 500ம் ஆண்டை சிறப்பித்து வருகின்றனர். 1521ம் ஆண்டு, பாம்பலோனா கோட்டையைக் காக்க, இளம் வீரர் இக்னேசியஸ், போரில் ஈடுபட்டிருந்த வேளையில், மே 20ம் தேதி, அவரது காலை பீரங்கி குண்டு தாக்கியது. அந்நிகழ்வு, இக்னேசியஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்ததால், அந்நிகழ்வின் 500ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுகிறது. இத்தருணத்தில், மற்றொரு பீரங்கி குண்டு, உலக இயேசு சபையினரை, குறிப்பாக, இந்திய இயேசு சபையினரை தாக்கி, அவர்களை, இன்னும் ஆழ்ந்ததொரு மனமாற்றத்திற்கும், அர்ப்பணத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆம், இவ்வாண்டு, ஜூலை 5ம் தேதி, மும்பை மருத்துவமனையில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மரணமடைந்த செய்தி, ஒரு பீரங்கி குண்டுபோல தாக்கியது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர பணியாற்றிவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்திய நடுவண் அரசின் ஆத்திரத்திற்கு உட்பட்டார். அவர் தொடுத்துவந்த அறப்போராட்டத்தை வெல்ல வழியேதும் இல்லாமல் திண்டாடிய நடுவண் அரசு, இறுதியில், தன் அரக்கத்தனமான அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்மீது பொய்க்குற்றங்களைச் சுமத்தி, அவரது முதிர்வயது, உடல்நலக் குறைவு ஆகியவற்றை சிறிதும் கருத்தில்கொள்ளாது, அவரை சிறைப்படுத்திக் கொன்றது.

தான் மேற்கொண்ட அறப்போரின் காரணமாகக் கொலையுண்ட 84வயது நிறைந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல், தகனம் செய்யப்பட்டபின், அவரது சாம்பல் அடங்கிய பேழை, ஏறத்தாழ, தமிழகத்தின் அனைத்து மறைமாவட்டங்களிலும் மக்களின் வணக்கத்தைப் பெற்றது. இறுதியாக, ஆகஸ்ட் 2, இத்திங்களன்று, அவர் பிறந்து வளர்ந்த விரகாலூரிலும், ஆகஸ்ட் 3, இச்செவ்வாயன்று திருச்சியில் அவர் கல்வி பயின்ற புனித யோசேப்பு கல்வி நிறுவனத்திலும் மக்களின் மரியாதையைப் பெற்றது.

ஜூலை 18ம் தேதி முதல், ஆகஸ்ட் 3ம் தேதி முடிய, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும், கொண்டுசெல்லப்பட்ட மனித உரிமைப்போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய பேழைக்குக் கிடைத்த மரியாதை, அறம்சார்ந்த அவரது வாழ்வுக்கும், பணிக்கும், மக்கள் மனமார வழங்கிய மரியாதையாக அமைந்தது. இந்தப் பயணத்தின்போது, அருள்பணி ஸ்டான் அவர்களின் வாழ்வைப்பற்றி வழங்கப்பட்டப் பகிர்வுகள், மக்கள் மத்தியில், குறிப்பாக, இளையோர் நடுவே, ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கும் என்பது உறுதி. இந்த அருள்நிறைந்த பயணத்தின் ஒரு தொடர்ச்சியாக, 16ம் திருப்பாடலில் இன்று நாம் மேற்கொள்ளும் விவிலியத்தேடல் வழியே, அருள்பணி ஸ்டான் சுவாமி என்ற நீதிமானின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை, மீண்டும் ஒருமுறை, பயிலமுயல்வோம்.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். (திருப்பாடல் 16:1) என்று 16ம் திருப்பாடலின் துவக்கத்தில் மன்னர் தாவீது எழுப்பும் வேண்டுதல், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உள்ளத்திலிருந்தும் அடிக்கடி எழுந்த இறைவேண்டலாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேபோல், 16ம் திருப்பாடலின் 11 இறைவாக்கியங்களில் பதிவாகியுள்ள பல கூற்றுகள், அடிக்கடி, நம் உள்ளங்களிலிருந்தும் எழுந்துள்ளன என்பது உறுதி. இவற்றில், பூவுலகில் உள்ள தூயோரோடு இருப்பதே எனக்குப் பேரின்பம் (காண்க. திபா 16:3) இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. (திபா 16:7) என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். (திபா 16:10) என்ற மூன்று இறைவாக்கியங்களை, தனிப்பட்ட முறையில் குறிப்பிடலாம்.

உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர் (திபா 16:10ஆ) என்று, 10ம் இறைவாக்கியத்தில் காணப்படும் கூற்று, திருத்தூதர் பணிகள் நூலில், இருமுறை இடம்பெற்றுள்ளது. தாவீது கூறியுள்ள இக்கூற்று, அவர், தன்னைப்பற்றி கூறிய சொற்கள் அல்ல, மாறாக, இயேசுவின் உயிர்ப்பைக் கூறும் அறிக்கையென்று, புனித பேதுருவும், புனித பவுலும் சுட்டிக்காட்டியுள்ளனர். பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு வழங்கிய அருளுரையில், 16ம் திருப்பாடலின் இறுதி நான்கு இறைவாக்கியங்களை மேற்கோளாக அவர் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்நது, புனித பேதுரு வழங்கும் விளக்கம் இதோ:

சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். (தி.பணிகள் 2:29-31)

அதேவண்ணம், அந்தியோக்கியா நகருக்கு, பவுலும், பர்னபாவும் சென்றவேளையில், அங்கிருந்த தொழுகைக்கூடத்தில் பேசிய பவுல், 16ம் திருப்பாடலின் 10ம் இறைவாக்கியத்தை மேற்கோளாகக் கூறி, இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து தாவீது இவ்வாறு எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். (காண்க. தி.பணிகள் 13:35-37)

திருத்தூதர்களின் கவனத்தை ஈர்த்த 16ம் திருப்பாடலில் பதிவாகியுள்ள ஒவ்வொரு இறைவாக்கியத்தையும் ஆழ்ந்து சிந்தித்தால், நமக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். நம் சிந்தனைகளை 2ம் இறைவாக்கியத்திலிருந்து துவங்குவோம்.

நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன் (திருப்பாடல் 16:2) என்ற இறைவாக்கியத்தில், ‘உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’என்ற சொற்கள், ஆங்கிலப் பதிப்புகளில், "I have no good apart from thee" என்று பதிவாகியுள்ளன. தமிழில் கூறப்பட்டுள்ள 'செல்வம்' என்ற சொல்லுக்கு இணையாக, 'wealth' என்ற சொல்லை பயன்படுத்தாமல், 'good', அதாவது 'நல்லது' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'நல்லது' என்ற அந்தச் சொல்லைப் பயன்படுத்தி, 2ம் இறைவாக்கியத்தை, "உம்மையன்றி, வேறு நல்லது எனக்கு இல்லை" என்று வாசிக்கும்போது, அது, இன்னும் பொருள் நிறைந்ததாகத் தெரிகிறது.

இறைவனைத் தவிர, நம் வாழ்வில் நல்லது வேறெதுவும் இல்லை என்ற இந்த எண்ணத்தை, புனித பவுல் வேறொரு வழியில் கூறியுள்ளார். "உண்மையில், என்னைப் பொருத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்." (பிலிப்பியர் 3:8)

"உம்மையன்றி, வேறு நல்லது எனக்கு இல்லை", என்று அறிக்கையிடும் தாவீது, அதைத் தொடர்ந்து, 3வது இறைவாக்கியத்தில், தூயோரோடு இருப்பதே பேரின்பம் என்று குறிப்பிட்டுள்ளார். பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம் (திருப்பாடல் 16:3) என்று தாவீது கூறியுள்ள இச்சொற்கள், அருள்பணி ஸ்டான் அவர்களை மீண்டும் ஒருமுறை நம் நினைவுகளுக்குக் கொணர்கின்றன.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன் வாழ்வில் அதிக ஆண்டுகள், வறியோருடன் தன்னை ஒருங்கிணைத்து வாழ்ந்துவந்தார். அதையே, அவர் பேரின்பமாகக் கருதினார். இப்போது, அவர் விண்ணுலகிற்குச் சென்றுள்ள வேளையில், அங்கும், வறியோர், அவரைக் கட்டாயம் வரவேற்றிருப்பர். அவர்களுடன் இருப்பதே அவருக்குப் பேரின்பமாக இருக்கும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

தூயோருடன் இருப்பதை பேரின்பம் என்று கூறும் தாவீது, அடுத்த வரியில், அந்த பேரின்ப நிலைக்கு எதிர் துருவத்தில் இருப்போரைக் குறித்தும் பேசுகிறார். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்; அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன். (திருப்பாடல் 16:4)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் உரிமைச் சொத்தான நிலங்கள், கனிம வளங்கள் நிறைந்தவை என்பதை உணர்ந்த இந்திய நடுவண் அரசு, அவற்றை, அம்மக்களிடமிருந்து கொள்ளையடித்து, பெரும் செல்வந்தர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்துவருகிறது. இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியப் பிரதமரும், அவருக்குத் துதிபாடும் உள்துறை அமைச்சரும், ஏனைய அமைச்சர்களும், "பணம், பதவி என்ற வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்". இந்தப் பேராசை வெறியர்களின் இரத்தப்பலிகளில் கலந்துகொள்ள மறுத்ததோடு, பணம், பதவி என்ற வேற்று தெய்வங்களின் பெயரையும் உச்சரிக்க மறுத்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தற்போது, தூயோரின் கூட்டத்தில், பேரின்பத்தில் வாழ்கிறார் என்பது உறுதி.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே (திருப்பாடல் 16:5) என்று மன்னர் தாவீது அறிக்கையிடும் 16ம் திருப்பாடலின் 5ம் இறைவாக்கியம் முதல், இறுதி இறைவாக்கியமான 11ம் இறைவாக்கியம் முடிய உள்ள 7 இறைவாக்கியங்களில், நம் தேடல் பயணம், அடுத்தவாரம் தொடரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2021, 13:54