தூய கன்னி மரியாவின் விண்ணேற்பும், இந்திய விடுதலை நாளும்.... தூய கன்னி மரியாவின் விண்ணேற்பும், இந்திய விடுதலை நாளும்.... 

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா: ஞாயிறு சிந்தனை

மேலெழுந்து செல்லும் விடுதலைக்கு உயர்ந்ததோர் அடையாளமாக விளங்கும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, இந்திய நாடும், உலகின் அனைத்து நாடுகளும், உண்மையான விடுதலையடைய வேண்டுவோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா சிந்தனை

1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 14 நள்ளிரவு 12 மணிக்கு, அதாவது, ஆகஸ்ட் 15 புலர்ந்த அந்த முதல் மணித்துளிகளில், இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இவ்வாண்டு, இந்தியா, தன் 75வது விடுதலை நாளைச் சிறப்பிக்கிறது. 1950, சனவரி 26ம் தேதி, இந்தியாவை இனி ஆளப்போவது மக்களே, என்று உலகறியச் சொன்னோம். இந்தியா, மக்களாட்சியை, உலகறியச் செய்த அதே 1950ம் ஆண்டு, நவம்பர் முதல் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இறைவனின் அன்னையான மரியா, உடலோடும், ஆன்மாவோடும், விண்ணகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்ற உண்மையை, மறுக்கமுடியாத ஒரு கோட்பாடாக அறிவித்தார். இலத்தீன் மொழியில், "Munificentissimus Deus" அதாவது, "பேரளவில் வாரிவழங்கும் கடவுள்" என்ற சொற்களுடன், ஆரம்பமாகும் இந்த கோட்பாடே, திருஅவை வரலாற்றில், இன்றளவும், இறுதியாக வெளிவந்த கோட்பாடாக அமைந்துள்ளது.

கன்னி மரியா விண்ணேற்பு அடைந்தார் என்ற  அறிக்கை வந்து 71 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவை, கிறிஸ்தவர்கள், 8 அல்லது 9ம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடிவருகின்றனர். மரியாவை, அன்னையாக, கன்னியாக சிறப்பிக்க, ஆண்டுதோறும் பல விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றில், 19 திருவிழாக்கள், கத்தோலிக்க உலகம் அனைத்திற்கும் பொதுவான திருவிழாக்கள். இவையன்றி, திருத்தலங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் உண்டு. வேளாங்கண்ணி, பாத்திமா, லூர்து, குவாதலூப்பே, என்று, உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அன்னையின் திருத்தலங்களில், ஆண்டு முழுவதும் அன்னையின் பக்திக்குச் சான்று பகரும் பல நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது, கத்தோலிக்கர்கள் நடுவில் மட்டுமல்லாமல், பிறமதத்தவரின் வாழ்விலும், அன்னை மரியா மிக உயர்ந்ததோர் இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம். மரியன்னைக்கென நாம் கொண்டாடும் அனைத்து திருநாள்களின் மகுடமாக அமைவது, இன்று, ஆகஸ்ட் 15ம் தேதி, நாம் கொண்டாடும் விண்ணேற்புப் பெருவிழா.

ஒவ்வொரு முறையும் மரியன்னையின் திருவிழாவைக் கொண்டாடும்போது, நம் உள்ளங்களில் சில கேள்விகள் எழும். இன்றும் எழுகின்றன. மரியன்னைக்கு நாம் இன்று காட்டும் இந்த அளவு மரியாதை, புகழ், வணக்கம் எல்லாம், நாசரேத்து கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் மரியாவுக்கு, அவர் வாழ்ந்த காலத்தில் கிடைத்தனவா? மரியா வாழ்ந்த காலத்தில் அவர் அடைந்த கொடுமைகளை மறந்துவிட்டு, மறுத்துவிட்டு, அல்லது மறைத்துவிட்டு, மரியன்னையை, பீடங்களிலும், கோபுரங்களிலும் ஏற்றிவைக்கும் நம் பக்தியை அவர் விரும்புவாரா? அல்லது, இந்த அளவு அவர் உயர்ந்ததற்குக் காரணமாய் இருந்த அவர் வாழ்வுப் பாடங்களை நாம் மீண்டும் கற்றுக்கொள்வது அவருக்கு அதிகம் பிடிக்குமா? இவை நம் உள்ளங்களில் எழும் சில சங்கடமானக் கேள்விகள்.

அன்னை மரியாவை மையப்படுத்தி நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவன்றும், அவரது வாழ்வை, கொஞ்சமாகிலும் புரட்டிப்பார்க்க, அவரது வாழ்வு சொல்லித்தரும் பாடங்களை, சிறிதாகிலும் கற்றுக்கொள்ள, நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இருபது நூற்றாண்டுகளுக்குமுன், வரலாற்றில் வாழ்ந்த மரியாவை, இன்று சந்திக்க முயல்வோம். கலிலேயாவின் சின்னக் கிராமம் நாசரேத்தை கற்பனை செய்துகொள்வோம். அக்கிராமத்தில் வாழ்ந்த இளம்பெண் மரியா, மிக எளிய கிராமத்துப் பெண். இன்று, இவ்வளவு தூரம் பேரும் புகழும் தான் அடைவோம் என்பதை, அவர் கனவிலும் எண்ணியிருக்கமாட்டார்.

மரியா கண்டுவந்த கனவெல்லாம் ஒன்றுதான். தினம் தினம் செத்துப்பிழைக்கும் தானும், தன் மக்களும், உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதே, அந்தப் பெண்ணின் கனவாக, வேண்டுதலாக இருந்திருக்கவேண்டும். ஒரு நாட்டை, வேற்றுநாட்டவர் ஆக்ரமிக்கும்போது, அங்கு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள், ஏராளம். அரசியல், பொருளாதாரம், சமயம் என்ற துறைகளில், மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதைப்பற்றி, அந்நாட்டு வரலாறு பதிவுசெய்யும். ஆனால், அன்னியப் படைவீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில், சாதாரண மக்கள், ஒவ்வொரு நாளும் படும் சித்ரவதைகள், வரலாற்றில் எழுதப்படுவதில்லை. அவற்றைக்குறித்து நாம் அதிகம் சிந்திப்பதுமில்லை. ஒரு நாட்டைச்சேர்ந்த பெண்கள், முக்கியமாக, இளம் பெண்கள், அந்நாட்டை ஆக்ரமிக்கும் அன்னியப் படைவீரர்களின் பொழுதுபோக்காக, விளையாட்டுப் பொருள்களாக, மாறுவது, பலநாடுகளில், இன்றும் நடைபெறும் அக்கிரமம்தான்.

இந்நிலையில் வாழ்ந்தவர்தான் மரியா. உரோமைய வீரர்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைக்கண்ட அந்த  இளம்பெண், தனக்கும், தன் மக்களுக்கும் எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிவந்தார். அந்த விடுதலைக்காக இறைவனை அவர் வேண்டாத நாளே இல்லை. அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவர் ஏங்கிய விடுதலை வந்தது. ஆனால், எப்படி வந்தது? ஒரு பெரும் இடியென வந்திறங்கியது, அந்த விடுதலை.

மரியாவின் ஏக்கங்களுக்கு, அவர் தினமும் எழுப்பி வந்த செபங்களுக்கு, இறைவன் பதில் தந்தார். "உனக்கும், உன் மக்களுக்கும் விடுதலை வழங்க, என் மகனை அனுப்புகிறேன். ஆனால், என் மகனுக்கு நீ தாயாகவேண்டும்" என்று இறைவன் அனுப்பிய செய்தியைக் கேட்டு, மரியா, நிலைகொள்ளாமல், ஆடிப்பாடியிருக்கமாட்டார். நிலைகுலைந்து, நொறுங்கிப்போயிருப்பார்.

திருமணம் ஆகாமல் தாயாகும் ஒரு பெண்ணுக்கு யூத சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதை மரியா நேரில் பார்த்தவர். ஊருக்கு நடுவே, அந்தப் பெண் கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்படுவார். அதுவும், தங்கள் ஊர், உரோமைய வீரகளால் ஆக்கிரமிக்கப்பட்டபின், இந்தக் கல்லெறிக் கொலைகள் அடிக்கடி நடந்ததையும் பார்த்தவர் மரியா. அந்த வீரகளால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளான மரியாவின் தோழிகள் பலர், இதுபோல் கொல்லப்பட்டிருக்கலாம். அதைக்கண்டு, மரியா, பலநாட்கள், உண்ணவும், உறங்கவும் முடியாமல் துன்புற்றிருக்கவேண்டும்.

உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலைதாராயோ என்று இளம் பெண் மரியா இறைவனிடம் எழுப்பிவந்த வேண்டுதலுக்கு விடையாக வந்த விடுதலைச்செய்தி, மரணதண்டனைக்கு இட்டுச்செல்லும் ஓர் அழைப்பாக இருந்தது. அந்த அழைப்பு இறைவனிடமிருந்து வந்ததால், மரியா ‘ஆம்’ என்று சம்மதம் சொன்னார்.

இளம் பெண் மரியா, இறைவன்மீது கொண்டிருந்த ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை, அவர் தந்த அந்த முதல் சம்மதத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதைத்தொடர்ந்து, அவர் சந்தித்த ஒவ்வொரு நிகழ்விலும், அந்த நம்பிக்கை, மீண்டும், மீண்டும் தீயிலிடப்பட்டு, அவரது சம்மதத்தால், இன்னும் தூய்மையாக மிளிர்ந்தது.

  • கருவுற்ற தருணத்திலேயே, தன் உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க, அவர், கடினமான மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வே, இன்று நமக்கு நற்செய்தியாக (லூக்கா 1: 39-56) வழங்கப்பட்டுள்ளது.
  • குழந்தைப்பேறு நெருங்கிவந்த நேரத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்ந்ததால், தன் சொந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்குச் செல்ல மீண்டும், கடினமான ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
  • குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில், தன் சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல், வேறொரு நாட்டுக்கு, இரவோடிரவாக, ஓட வேண்டியிருந்தது.
  • எருசலேம் திருவிழாவில், தன் 12 வயது மகனை இழந்துவிட்டு, மூன்று நாள்கள் நரக வேதனை அடையவேண்டியிருந்தது.
  • தன் வாழ்க்கைத் துணையான யோசேப்பை இழந்தபின், மகன் தன்னைப் பேணிக்காப்பார் என்று நம்பியிருந்த வேளையில், அந்த மகன், ஊருக்காக உழைக்கக் கிளம்பியதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
  • தன் மகனின் பணிகளைப் பிடிக்காதவர்கள், தன் காதுபடவே அவரை, மதியிழந்தவன் என்று கூறுவதைக் கேட்கவேண்டியிருந்தது.

இறுதியில், தன் மகன் அநியாயமாக சிலுவையில் அறையப்பட்டபின், அவர் அடைந்த கொடிய வேதனைகளைக் கண்டும், அந்தச் சிலுவைக்கடியில், ஒன்றும் செய்யமுடியாமல், நிற்கவேண்டியிருந்தது.

தவிர்க்கமுடியாததாகத் தெரிந்த இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம், மனதுக்குள், அந்த அன்னையின் நம்பிக்கை குறையவில்லை. அந்த நம்பிக்கை, அந்த வீரம், அந்த அன்னையின் உடலோடு, பூமிக்குள் புதைந்துவிடக் கூடாதென்றுதான், அந்த அன்னை, இறந்ததும், அவரை, உடலோடும், ஆன்மாவோடும், இறைவன் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார். அந்த அற்புதத்தைத்தான், இன்று, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

அன்னை மரியாவின் நம்பிக்கையை, வீரத்தை, இறைவன், இவ்வாறு, சாவின்றி வாழவைத்ததனால், இன்றும், உலகில், எத்தனையோ அன்னையர், அதுவும், சமுதாய விளிம்புகளில், வறுமையின் கோரப்பிடியில் தினமும் போராடும் அன்னையர், தங்களைச் சுற்றி நம்பிக்கையைக் குலைக்கும்வண்ணம் உருவாகும் எத்தனையோ சூழல்களில், அன்னை மரியாவைப்போல், தங்கள் வீரத்தை, நம்பிக்கையை, இழந்துவிடாமல் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தப் பெருந்தொற்று காலத்தில், பெண்கள், காட்டிவரும் துணிவும், உறுதியும் வியப்பிற்குரியன. உலகெங்கும், நலவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருப்போரில், 70 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், இவர்களே, இந்த பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, உயிர்களைக் காத்துவந்துள்ளனர் என்றும், உலக நலவாழ்வு நிறுவனமான WHO (World Health Organisation) கூறியுள்ளது. பாதுகாப்பு வழங்கும் பணிகளில், ஆண்களைவிட பெண்கள் 10 மடங்கு கூடுதலாகப் பணியாற்றுகின்றனர் என்று, OECD (The Organisation for Economic Co-operation and Development) எனப்படும் உலகளாவிய ஒரு நிறுவனம் கூறியுள்ளது. நம்பிக்கையை இழக்காமல், பெண்கள் காட்டும் வீரமும், உறுதியும், இந்த விழாவிற்கு கூடுதலான அழகையும், பொருளையும் வழங்குகின்றன.

பீடங்களில் ஏற்றி, புகழ் மாலை பாடி, திருநாட்கள் கொண்டாடி, அன்னை மரியாவைப் பெருமைப்படுத்துவது, ஒரு புறம் இருந்தாலும், அவரைப்போல், பல வழிகளிலும், வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்தித்துவரும், கோடான கோடி அன்னையருக்கு, இன்றும் ஒரு பாடமாக, அவர்களை ஊக்குவிக்கும் ஒரு உந்துசக்தியாக, தான் இருக்கிறோம் என்ற எண்ணமே, அந்த விண்ணகத்தாய்க்கு இன்னும் அதிக மகிழ்ச்சியூட்டும் என்பது உறுதி. அன்னை மரியாவோடு நாமும் சேர்ந்து, பெண்கள் இவ்வுலகிற்குப் பறைசாற்றும் நம்பிக்கையை இன்று கொண்டாடுவோம்.

இறுதியாக, ஒரு சிந்தனை....

ஆகஸ்ட் 15, ஆஙகிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற நாள். இந்த நாள் இந்தியாவுக்கு மட்டும் விடுதலை நாள் அல்ல. லிபேரியா, தென் கொரியா, காங்கோ குடியரசு உட்பட பல நாடுகள் விடுதலை உணர்வுகளில், எண்ணங்களில் ஊறித் திளைக்கும் ஒரு நாள், ஆகஸ்ட் 15. இவ்வேளையில், உண்மையான விடுதலையைக் குறித்து சான்றோர் கூறிய சில எண்ணங்களை நினைவில் கொள்வோம்:

  • அடிமை ஒருவர், இனி, தான் அடிமையாக வாழப்போவதில்லை என்று தீர்மானிக்கும்போது, அவரது விலங்குகள் அறுந்துவிழுகின்றன. விடுதலை, அடிமைத்தனம் இரண்டும் மனநிலைகளே. இதைச் சொன்னவர், மகாத்மா காந்தி (Mahatma Gandhi).
  • தங்களைச் சிறைபடுத்தும் சங்கிலிகளை வணங்கும் முட்டாள்களுக்கு விடுதலை அளிப்பது கடினம் என்ற எச்சரிக்கையை விடுத்தவர் வோல்ட்டேர் (Voltaire).

விடுதலை என்பது மனிதர்கள் மேல் இறங்கி வராது, மனிதர்கள்தான் விடுதலையை நோக்கி மேலெழுந்து செல்லவேண்டும் என்று சொன்னவர், சார்ல்ஸ் கேலப் கோல்ட்டன் (Charles Caleb Colton).

மேலெழுந்து செல்லும் விடுதலைக்கு உயர்ந்ததோர் அடையாளமாக விளங்கும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, இந்திய நாடும், இன்னும், உலகின் அனைத்து நாடுகளும், உண்மையான விடுதலையை நோக்கி உள்ளங்களை உயர்த்தும் அறிவையும், ஆற்றலையும், பெறவேண்டும் என்ற வேண்டுதலை, அன்னைமரியாவின் பரிந்துரையோடு மேற்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2021, 15:14