நன்னெறி உருவாக்கம் - குழந்தைகளின் மனச்சான்றில் நிகழும் போராட்டம் நன்னெறி உருவாக்கம் - குழந்தைகளின் மனச்சான்றில் நிகழும் போராட்டம் 

மகிழ்வின் மந்திரம் : தன்னிலே நல்லது, 'நமக்கும்' நல்லது

நன்னெறி சார்ந்த ஒரு தெளிவான முடிவை, நம் மனசாட்சி கட்டளையிடும் வேளையில், வேறுபல காரணிகள், சக்தி நிறைந்ததாக, கவர்ச்சி மிக்கதாகத் தெரிகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு குழந்தையின் அறிவை வளர்க்க, பல நூறு கல்விக்கூடங்கள் உதவிசெய்யலாம். ஆனால், அக்குழந்தை, நன்னெறியில் வளர்வதை உறுதி செய்வதில், குடும்பம் என்ற கல்விக்கூடத்திற்கே முக்கிய பங்கு உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. இதை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தில் வழங்கப்படும் நன்னெறி கல்வியைப்பற்றி, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், குழந்தைகளின் நன்னெறி உருவாக்கம் என்ற பகுதியில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இப்பகுதியில், 265ம் பத்தியில் அவர் பதிவுசெய்துள்ள எண்ணங்களின் தொகுப்பு இதோ:

"சிறந்ததுபோல் தெரிவதைக்குறித்து தீர்மானிப்பதோ, செய்யவேண்டியது இதுதான் என்பதை அறிந்துகொள்வதோ முக்கியம் என்றாலும், அவற்றைவிட, சரியானதைச் செய்வது, மிகவும் முக்கியமானது. நமக்குத் தெளிவாகத் தெரியும் கோட்பாடுகளைப் பின்பற்றும் உறுதியிலிருந்து நாம் முரண்படுவதை, அடிக்கடி உணர்கிறோம். நன்னெறி சார்ந்த ஒரு தெளிவான முடிவை, நம் மனசாட்சி கட்டளையிடும் வேளையில், வேறுபல காரணிகள், சக்தி நிறைந்ததாக, கவர்ச்சி மிக்கதாகத் தெரிகின்றன."

நம் மனசாட்சி சரியென்று நம்புவதைத் தாண்டி, ஏனைய சக்திகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ள இக்கூற்று, திருத்தூதரான புனித பவுல், உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் 7ம் பிரிவில் கூறியுள்ள புகழ்பெற்ற ஒரு கூற்றை நினைவுறுத்துகிறது: நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. (உரோமையர் 7:19-20)

265ம் பத்தியில் திருத்தந்தை தொடர்ந்து கூறுவது இதோ: "நன்மை என்று நம் அறிவு புரிந்துகொள்வது, நமக்குள் ஆழமாக வேரூன்றவேண்டும். அப்போது, ஏனைய கவர்ச்சிகளைத் தாண்டி, தன்னிலே நல்லது என்பது, 'நமக்கும்' நல்லது என்பதை, நம்மால் தீர்மானிக்கமுடியும். சரியானதைச் செய்வது, ஒருவரின் நன்மைக்காகத்தான் என்பதை, தகுந்த முறையில் உணர்த்துவதே, சிறந்த நன்னெறிக் கல்வி. நல்லதைச் செய்வதால் வரும் ஆதாயத்தை, தெளிவாகச் சுட்டிக்காட்டாமல், முயற்சி, தியாகம் ஆகியவற்றை மேற்கொள்ளச் சொல்லும்போது, அது, இன்றைய காலத்தில், குறைவான தாக்கத்தையே உருவாக்குகிறது." (அன்பின் மகிழ்வு 265)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2021, 13:53