2019.12.13 cattedrale di Sant'Orso e San Vittore a Solothurn, Svizzera 2019.12.13 cattedrale di Sant'Orso e San Vittore a Solothurn, Svizzera 

மகிழ்வின் மந்திரம்: பிள்ளைகளின் நன்னெறி வளர்ச்சியில் பெற்றோர்

பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர் என்ற முறையில், அவர்கள், தங்களின் பாசம், மற்றும், முன்மாதிரிகையால், பிள்ளைகளில், நம்பிக்கை மற்றும், அன்புடன்கூடிய மதிப்பை வளர்ப்பதற்கு, பொறுப்பைக் கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

பிள்ளைகளை நன்னெறிகளில் உருவாக்குவது, மற்றும், அவர்களின் விருப்பத்தை வடிவமைப்பது, முதலில் பெற்றோரைச் சார்ந்தது என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 7ம் பிரிவின்கீழ், பிள்ளைகளின் நன்னெறி உருவாக்கம் என்ற தலைப்பில், 263, 264ம் பத்திகளில் எடுத்துரைத்துள்ளார். இப்பத்திகளில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள சிந்தனைகளின் சுருக்கம் இதோ...

பிள்ளைகள், அடிப்படையான நன்னெறிகளில் உருவாக்கப்படுவதற்கு பொதுவாக, பெற்றோர், கல்வி நிறுவனங்களையே சார்ந்து உள்ளனர். ஆனால், ஒரு மனிதர், உணர்ச்சியளவிலும், நன்னெறியிலும் வளருவதற்கு, இறுதியில், தன் பெற்றோரையே நம்பியிருக்கின்றார் என்பதால், பெற்றோர், பிள்ளைகளின் நன்னெறி உருவாக்கத்திற்கு, ஒருபோதும் மற்றவரை முழுமையாகச் சார்ந்து இருக்கக்கூடாது. பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர் என்ற முறையில், அவர்கள், தங்களின் பாசம், மற்றும், முன்மாதிரிகையால், பிள்ளைகளில் நம்பிக்கை மற்றும், அன்புடன்கூடிய மதிப்பை வளர்ப்பதற்கு, பொறுப்பைக் கொண்டுள்ளனர். தங்களின் அனைத்துத் தவறுகளுக்கு மத்தியில், தாங்கள் பெற்றோருக்கு முக்கியமானவர்கள், மற்றும், அவர்கள் தங்கள் மீது உண்மையிலேயே அக்கறையாய் உள்ளனர் என்பதை, பிள்ளைகள் உணரும்போது, அது முதிர்ச்சியடைந்த பக்குவமான பாதையில் செல்ல அவர்களுக்கு உதவுகின்றது. மேலும், நல்ல பழக்கவழக்கங்கள், மற்றும், நன்மைத்தனத்தின் மீது இயல்பான பற்று ஆகியவற்றை, பிள்ளைகளில் வளர்ப்பதன் வழியாக, பெற்றோர், அவர்களின் விருப்பத்தை வடிவமைப்பதற்குப் பொறுப்பேற்கின்றனர். இது, படிப்படியான வளர்ச்சியின் ஒரு பகுதியாக, விரும்பத்தக்க, மற்றும், பயனுள்ள முறையில் சிந்திக்கும் சில வழிகளை வழங்குவதாக உள்ளது. சமுதாயத்தில், தன்னைத் தகுதியுடையவராக இணைக்க முயற்சிப்பதே, ஒரு விழுமியம்தான். அது, மிகப்பெரும் விழுமியங்களுக்குத் திறந்தமனதாய் இருக்கத் தூண்டக்கூடும். பிள்ளைகளின் நன்னெறி உருவாக்கம், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்துவதன் வழியாக, எப்போதும் உரையாடல் முறையில் இடம்பெறவேண்டும். இந்த உருவாக்கம், புரிந்துகொள்ள இயலாத, மற்றும், கேள்விக்கு உட்படாத உண்மைகளைப் புகுத்துவதில் அல்ல, மாறாக, உண்மையான நிகழ்வுகள், கருத்துருக்கள் போன்றவற்றை எடுத்துரைப்பதன் வழியாக இடம்பெறவேண்டும். அப்போது, சில விழுமியங்கள், கொள்கைகள், நெறிமுறைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை, பிள்ளைகள், தாங்களே கற்றுக்கொள்வார்கள். (அன்பின் மகிழ்வு 263,264)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2021, 14:07