குடும்ப வாழ்வில் வெளிப்படும் வன்முறை குடும்ப வாழ்வில் வெளிப்படும் வன்முறை 

மகிழ்வின் மந்திரம் : குடும்ப வாழ்வில் நிலவும் சிக்கல்கள்

அநீதியான பாகுபாடு அனைத்தும், கவனமுடன் தவிர்க்கப்படுவதையும், குறிப்பாக, வன்முறை, அறவே தடுக்கப்படுவதையும் வலியுறுத்துகிறோம். (அன்பின் மகிழ்வு – 250)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் உருவாகக்கூடிய சில சிக்கல்களை, தலத்திருஅவையின் பணியாளர்கள் எவ்வாறு தீர்த்துவைக்கக்கூடும், அல்லது, தீர்த்துவைக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 6ம் பிரிவில் கூறியுள்ளார். இச்சிக்கல்களில், திருமண ஒப்பந்தம் செய்துகொண்டபின், திருமுழுக்கு பெறவிழைவோருக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்து, 249ம் பத்தியில் திருத்தந்தை பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, குடும்பங்களில் உருவாகும் சிக்கல்களில், வெளிப்படையாக பேசமுடியாத சிக்கலான, ஒரே பாலின ஈர்ப்பைக் குறித்தும், அத்தகைய ஈர்ப்பு கொண்டோருக்கு ஆற்றக்கூடிய பணிகள் குறித்தும், இப்பிரிவின் 250ம் பத்தியில் திருத்தந்தை கூறியுள்ளார். இதோ, இவ்விரு பத்திகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம்:

"சிக்கலான திருமணச்சூழலில் இருப்போர், திருமுழுக்கு பெற விழையும்போது, குறிப்பிட்ட பிரச்சனைகள் எழுகின்றன. தம்பதியரில், குறைந்தது ஒருவர், கிறிஸ்தவ நம்பிக்கையை அறிந்திராதபோது, அவ்விருவரும் நிலையான திருமண ஒப்பந்தம் செய்துகொண்டனர். இத்தகைய விடயங்களில், அவர்களது ஆன்ம நலனுக்கு உகந்ததுபோல், ஆயர்கள், மேய்ப்புப்பணி சார்ந்த தெளிந்து தேர்தலை செயல்படுத்த அழைக்கப்படுகின்றனர்." (249)

"எவ்வித பாகுபாடும் இன்றி, ஒவ்வொருவருக்கும் தன் எல்லையற்ற அன்பை வழங்கும் இயேசுவின் மனநிலையை, திருஅவை, தனக்கே உரியதாக்குகிறது. ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் வாழும் குடும்பத்தில் உருவாகும் நிலையைப்பற்றி, ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துபேசினோம். குடும்பத்தில் உருவாகும் இச்சூழல், பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ, எளிதானது அல்ல. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், அவர் எத்தகைய பாலியல் நிலையைச் சார்ந்துள்ளார் என்பதை வைத்து தீர்ப்பிடாமல், தனிப்பட்ட மாண்புடனும், புரிதலுடனும் நடத்தப்படவேண்டும். இதை, அனைத்திற்கும் முன்னதாக வலியுறுத்த விழைகிறோம். அநீதியான பாகுபாடு அனைத்தும், கவனமுடன் தவிர்க்கப்படுவதையும், குறிப்பாக, வன்முறை, அறவே தடுக்கப்படுவதையும் வலியுறுத்துகிறோம். இத்தகையக் குடும்பங்களுக்கு, மதிப்புடன்கூடிய வழிகாட்டுதல் வழங்கப்படுவது அவசியம். இவ்வாறு, ஒரே பாலின ஈர்ப்பு கொண்டோர், தங்கள் வாழ்வில், இறைவனின் திருவுளம் என்ன என்பதை உணர, உதவிகள் வழங்கப்படவேண்டும்." (அன்பின் மகிழ்வு – 249,250)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2021, 14:40