பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் விண்கோள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் விண்கோள் 

வத்திக்கான் ஆய்வாளர்: விண்வெளி பராமரிக்கப்படவேண்டும்

விண்வெளிப் பயணங்களுக்கு புதிய எல்லைகளும், விண்வெளியைப் பராமரிப்பது குறித்த புதிய விதிமுறைகளும் வகுக்கப்படவேண்டும் - அருள்சகோதரர் Consolmagno

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தின் பராமரிப்பு பற்றிய நம் உரையாடல்களில், வான்வெளியில் அமைந்துள்ள கடவுளின் படைப்புக்கள் பற்றிய சிந்தனையும் இடம்பெறவேண்டும் என்று, வத்திக்கான் வானிலை ஆய்வகத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்கள் கூறினார்.

இக்காலத்தில், விண்வெளி சுற்றுலா, விண்வெளி ஆய்வு போன்ற நடவடிக்கைகள் அதிரித்துவருவது பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்துள்ள, அருள்சகோதரர் Consolmagno அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பைப் பாதுகாப்பது குறித்த, தனது Laudato si’ திருமடலில் கூறியிருப்பதுபோன்று, விண்வெளி பராமரிப்புக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

விண்வெளிப் பயணங்கள் அதிகரித்துவரும் இவ்வேளையில், அதன் பல்வேறு அம்சங்கள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை எனவும், விண்வெளிப் பயணங்களுக்கு புதிய எல்லைகளும், விண்வெளியைப் பராமரிப்பது குறித்த புதிய விதிமுறைகளும் வகுக்கப்படவேண்டும் என்றும், அருள்சகோதரர் Consolmagno அவர்கள் பரிந்துரைத்தார்.

விண்வெளி, புதிய கண்டுபிடிப்புக்களின் களமாக மாறியுள்ள இக்காலத்தில், இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்படுவதால், துணைக்கோள்கள் ஒன்றையொன்று மோதாமலும், மனிதருக்கு சேதம் விளைவிக்காமலும் காக்கமுடியும் என்றும், அச்சகோதரர் குறிப்பிட்டார்.

புதிய கண்டுபிடிப்புக்கள்

விண்வெளியிலிருந்து பூமியின் மேற்பரப்பை அடையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, விண்கற்களை, தான் சேகரித்து வைத்துள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறிய அருள்சகோதரர் Consolmagno அவர்கள், இவற்றையும், விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டு திரும்புவோர் கொண்டுவரும் பொருள்களையும்   ஆய்வுசெய்யும்போது வியப்பே மிஞ்சுகின்றது என்றும், கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிவியலாளர்களின் ஒத்துழைப்போடு, காஸ்தெல் கந்தோல்போவிலுள்ள வத்திக்கான் வானியல் ஆய்வகத்தில், இப்பொருள்களில் சிலவற்றை ஆய்வுசெய்ய முடிகின்றது என்றும், இந்த விண்கற்கள், விண்வெளியில் காலப்போக்கில் எவ்வாறு வளர்ந்து மாற்றம் அடைகின்றன என்பதை அறிய முடிகின்றது என்றும், அருள்சகோதரர் Consolmagno அவர்கள் எடுத்துரைத்தார்.

இம்மாதத்தில் 'யூனிட்டி - 22' என்ற விண்வெளி வானூர்தியில், பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட  சிரிஷா பண்ட்லா உட்பட, ஆறு பேர் பயணம் மேற்கொண்டனர். 2022ம் ஆண்டில் விண்வெளி சுற்றுலாக்களை மேற்கொள்ள, ஏறத்தாழ 600 பயணச்சீட்டுகள் இதுவரை விற்கப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. மேலும், 'அமேசான்' நிறுவன அதிபர் Jeff Bezos அவர்களின், 'புளூ ஆரிஜின்' நிறுவனத்தின் முதல் விண்வெளி பயணம், இம்மாதம் 20ம் தேதி நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2021, 14:05