இலங்கையில் “கறுப்பு ஜூலை”  பல்சமயக் கூட்டம் இலங்கையில் “கறுப்பு ஜூலை” பல்சமயக் கூட்டம்  

இலங்கையில் ஒப்புரவு எட்டாக்கனியாக உள்ளது

இந்தியாவில் 107 புலம்பெயர்ந்தோர் முகாம்களில், 58,000 இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில், 1983ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில், தமிழ் மக்களுக்கு எதிராக கடுமையான வன்முறை தொடங்கப்பட்டு, உள்நாட்டுப் போர் ஆரம்பமானதை நினைவுகூரும் விதமாக, அந்நாட்டில், “கறுப்பு ஜூலை” என்ற ஒரு நிகழ்வு ஒவ்வோர் ஆண்டும், ஜூலை மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வையொட்டி, ஜூலை 20, இச்செவ்வாயன்று, கொழும்பு நகரின் Maradana மையத்தில் பல்சமயக் கூட்டம் ஒன்றை நடத்திய கிறிஸ்தவ தோழமை இயக்கம், இலங்கையில், உள்நாட்டுப் போர் தொடங்கி, 38 ஆண்டுகள் ஆகியும், இன்னும் அந்நாட்டில் இனப் பதட்டநிலைகள் நிலவுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.    

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய புத்தமத துறவி Udawala Nanda Thero அவர்கள், தமிழர்கள் எதிர்கொண்ட கொடுந்துன்பங்களுக்கு உண்மையான காரணம் எதுவென்று கண்டுபிடிக்கப்பட்டு, அக்காரணம் இதுவரை களையப்படவில்லை என்றும், சட்டங்கள் இயற்றப்பட்டாலும், உண்மையான தீர்வுகள் காணப்படவில்லை என்றும் கூறினார்.  

மதத்தவர் என்ற முறையில், நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம், இன்றைய இலங்கையில், பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அல்லது, மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் அடிச்சுவடுகளை உண்மையிலேயே நாம் பின்பற்றுகிறோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே நேர்மையோடு கேட்கவேண்டும் எனவும், Udawala Nanda Thero அவர்கள் கூறினார்.

பெரும்பான்மையினரிலிருந்து சிறுபான்மையினரைப் பிரிக்கும் ஒரு கருத்தியலை நாம் பின்பற்றிவருகிறோம், இதற்கு மாறாக, தமிழர், சிங்களவர், மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்து ஒன்றிணைந்து வாழ்வதற்கு, நமக்கு பொதுவான ஒரு மொழியும், கல்வி முறையும் அவசியம் என்றும், புத்தமதத் துறவி கூறினார்.

ஆங்லிக்கன் சபையின் அருள்பணி Marimuttu Sathivel அவர்கள் பேசுகையில், இந்தியாவில் 107 புலம்பெயர்ந்தோர் முகாம்களில், 58,000 இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இந்தியா, அல்லது இலங்கையின் குடியுரிமை இன்றி உள்ளனர் என்று கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2021, 14:53