Vatican News
என்றும் நம் நினைவுகளில் அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. என்றும் நம் நினைவுகளில் அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

பொதுக்காலம் 15ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இந்த ஞாயிறன்று, நாம், அருள்பணி ஸ்டான் அவர்களின் வாழ்வையும், மரணத்தையும், இறைவாக்கினர் ஒருவரின் வாழ்வோடும், மரணத்தோடும் ஒப்பிட்டு சிந்திக்க முயல்வோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 15ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஸ்டான் சுவாமி அவர்கள் செய்த குற்றம் என்ன என்பதை நிரூபிக்காமல், வழக்கு எதையும் நடத்தாமல், அவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது ஆன்மா உண்மையிலேயே அமைதி அடையுமா என்று தெரியவில்லை. அது அமைதி அடையும் என்று நம்புகிறேன். இவ்வேளையில் சொல்லக்கூடியது எல்லாம் இதுதான்: "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னெவென்று இவர்களுக்குத் தெரியவில்லை."

ஜூலை 5, கடந்த திங்களன்று இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி (ஸ்தனிஸ்லாஸ் லூர்துசுவாமி சே.ச.) அவர்கள், மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் இறையடி சேர்ந்த அதே நாள், செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையில், இவ்வரிகள் இடம்பெற்றிருந்தன. இதை எழுதியவர் ஒரு செய்தியாளர் அல்ல, மாறாக, இவ்வரிகளை எழுதியவர், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, திருவாளர் மதன் லோகுர் (Madan Lokur) அவர்கள்.

இன்று, நடுவண் அரசையும், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மீதும், அவர்களுக்கு கைகட்டி, வாய்ப்பொத்தி, அடிமைப்பணி புரியும் தேசிய புலனாய்வுத் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை மீதும், முன்னாள் நீதிபதி லோகுர் அவர்கள், இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து உலகெங்கிலுமிருந்து கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, ஜூலை 5, கடந்த திங்களன்று, அவர் இறந்த செய்தி வெளியானதும், இந்த கருத்துக்கள் எரிமலையாக வெடித்துச் சிதறியவண்ணம் உள்ளன. ஸ்டான் அவர்கள் மரணமடையவில்லை, அவர் இந்திய நடுவண் அரசால், இந்திய நீதித்துறையால் கொல்லப்பட்டார் என்ற கருத்து மிக அதிகமாக ஓங்கி ஒலித்தது, ஒருபுறம். மற்றொருபுறம், அவர், ஓர் இறைவாக்கினராக, நீதியின் சாட்சியாக, இயேசுவின் உண்மைச் சீடராக வாழ்ந்தார், இறந்தார் என்ற கண்ணோட்டத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதோ, இவ்விரு கண்ணோட்டங்களின் எடுத்துக்காட்டுகள்:

இந்தியத் தலத்திருஅவையின் சார்பில் வெளியான கருத்துக்களில், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை, தயக்கம் ஏதுமின்றி, இந்திய அரசின் மீது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.

கிறித்தவத் துறவியொருவர் தன் பணிவாழ்வில் காட்டிய நேர்மையை, நீதியின்பால் காட்டிய உறுதியை, மானுட மாண்பைக் காக்கின்றவகையில் அரை நூற்றாண்டு உழைத்த ஒரு துறவியை, சமூக விரோதியாக, கலகக்காரராகச் சித்தரித்து, நாளும் துரத்திவந்த அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, பேராயர் பாப்புசாமி அவர்கள், இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

சனநாயக நாட்டில் மனித உரிமைகளைக் காக்க வாழ்ந்த ஒருவருக்கு சனநாயக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமானால், ஸ்டான் சுவாமியைப் பின்பற்றி, இனி எத்தனையோ சுவாமிகள் தோன்றி, மக்கள் விடுதலைப் பயணத்தில் பங்கேற்பர் என்பது உறுதி, என்ற உறுதிமொழியுடன், தமிழக ஆயர் பேரவையின் சார்பாக, பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை நிறைவடைகிறது.

அருள்பணியாளர் ஸ்டான் அவர்களின் அடக்கத் திருப்பலி, மும்பையில் நடைபெற்ற நாளான ஜூலை 6ம் தேதி, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், அநீதிகள் பெருகியிருக்கும் தெருக்களிலும், மலை முகடுகளிலும், தன் பலிபீடத்தை நிறுவி, அருள்பணித்துவத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தார் என்றும், பழங்குடியினரிடையே, மனிதமாண்பு, மற்றும், நீதி, ஆகிய நற்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்றும் கூறினார்.

காந்தியடிகளின் வன்முறையற்ற அகிம்சை வழியைப் பின்பற்றிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய புனிதர் என்பதையும் கர்தினால் போ அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணத்தையொட்டி எழுப்பப்பட்டுவரும் கண்டனக் குரல்கள், மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டம் என்ற இருவகையான பதிலிறுப்புக்களில், இந்த ஞாயிறன்று, நாம், அருள்பணி ஸ்டான் அவர்களின் வாழ்வையும், மரணத்தையும், இறைவாக்கினர் ஒருவரின் வாழ்வோடும், மரணத்தோடும் ஒப்பிட்டு சிந்திக்க முயல்வோம்.

சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் இறைவாக்கினர்களை மையப்படுத்திய வாசகங்கள் நம் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன. ஓர் இறைவாக்கினர் எவ்வாறு தன் சொந்த ஊரிலேயே துன்பங்களை எதிர்கொள்கிறார் என்பதை, ஜூலை 4, சென்ற ஞாயிறு வழிபாட்டில் நாம் சிந்தித்த வேளையில், மும்பை மருத்துவமனையில், அருள்பணி ஸ்டான் அவர்கள், மரணத்தின் நுழைவாயிலை நெருங்கிக்கொண்டிருந்தார். அதற்கடுத்த நாள், ஜூலை 5, திங்களன்று, இந்திய நேரம், பிற்பகல் 1.20 மணியளவில், அவர் தன் உயிரை இறைவனின் கரங்களில் ஒப்படைத்தார். சக்தியும், செல்வமும், சுயநலமும் மிகுந்தவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஓர் இறைவாக்கினராக, அதேவேளையில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக அவர், இவ்வுலகிலிருந்து விடுதலை பெற்றார்.

இறைவாக்கினர்கள் அனைவருமே, தங்களை முன்னிறுத்தாமல், இறைவனையும், அவர் தங்களுக்கு வழங்கிய செய்தியையும், முன்னிறுத்தி உழைத்தவர்கள். தங்களையே மறைத்து, அழித்து, இறைவனை மட்டுமே வெளிப்படுத்திய இறைவாக்கினர்களில் ஒருவரான ஆமோஸ், இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு அறிமுகமாகிறார்.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் அத்தனை இறைவாக்கினர்களும் தீப்பிழம்புகள். இவர்களில், இறைவாக்கினர் ஆமோஸ், மிக உக்கிரமாக எரிந்த ஒரு தீப்பிழம்பு. அவரது நூலில் நாம் கேட்பதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் விடுத்த எச்சரிக்கைகள்.

ஆமோஸ் கூறிவந்த கசப்பான உண்மைகளைக் கேட்க மறுத்த தலைமைக்குரு அமட்சியா, பெத்தேல் பகுதியைவிட்டு ஆமோசை ஓடிப்போகச் சொல்கிறார். "அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே, வேண்டுமெனில் யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்று அமட்சியா அறிவுரைத் தருகிறார்.

அமட்சியா சொல்வதை ஆழ்ந்து சிந்தித்தால், அவர், இறைவாக்கினர் என்ற வேடமணிந்த ஓர் அரசியல்வாதி என்பதைப் புரிந்துகொள்ளலாம்: "ஆமோஸ், பெத்தேலில் நாங்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம். அரசனுக்கும், மக்களுக்கும், நீ கூறும் எச்சரிக்கைகள், எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிடும். எனவே, எங்கள் பிழைப்பைக் கெடுக்காமல், நீ யூதேயாவுக்குப் போய், அங்கே இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்பதே, ஆமோசுக்கு, அமட்சியா கூறும் அறிவுரை. ஓர் இறைவாக்கினர் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதை, அமட்சியாவின் சொற்களில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆமோஸ் என்ற தீப்பிழம்பு, இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிகிறது. "இறைவாக்கு உரைப்பது ஒரு பிழைப்புக்கென்றால், நான் இறைவாக்கினன் அல்ல. அரசனுக்குத் துதிபாடும் இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல" என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். "நான் பிழைப்பு தேடிக்கொள்ள வேண்டுமெனில், ஆடு, மாடு மேய்த்து வாழமுடியும்" என்று சுட்டிக்காட்டுகிறார், ஆமோஸ்.

பிழைப்புக்காக இறைவாக்கு உரைப்பது, மந்திரம் சொல்வது, பலிகள் ஆற்றுவது, போதிப்பது என்று வாழ்ந்த போலி இறைவாக்கினர்கள் மத்தியில், ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு; வாழ்வை, குறிப்பாக, நிலைவாழ்வைத் தேடிக்கண்டடைவது வேறு, என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்வுப்பாதையைப் பிறருக்குக் காட்டிவரும் அருள்பணி ஸ்டான் போன்ற இறைவாக்கினர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கு அனுப்பிவைக்கும் இன்றைய நற்செய்திப் பகுதியும் ஒரு சில முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது.

முதல் பாடம்... இயேசு தன் சீடர்களை அனுப்பிய வேளையில், அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். எவ்வகை அதிகாரம்? இயேசுவின் சீடர்கள், மக்களுக்குப் பணிபுரியச் செல்கின்றனர். அம்மக்கள் மீது அதிகாரம் செலுத்த இயேசு அவர்களை அனுப்பவில்லை. மாறாக, அம்மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த தீய சக்திகள் மீது அதிகாரம் அளித்தார். மக்களுக்காகப் பணிபுரிந்த இயேசு, அவர்களை, தீய சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அதே பாடத்தை, தன் சீடர்களுக்கும் இயேசு சொல்லித்தந்தார். அதே சக்தியை, அவர்களுக்கும் வழங்கினார்.

மக்களுக்குப் பணியாற்றுவதாக மேடைகளில் முழங்கி, வாக்குகளைப் பெற்று, ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள், மக்களை வதைக்கும் தீய சக்திகளுடன் கரம்கோர்த்து, மக்களை நசுக்குவது, உலகெங்கும் நிகழ்கிறது. இத்தகைய போலியான மக்கள் பணியாளர்கள், அருள்பணி ஸ்டான் போன்ற உண்மையான மக்கள் பணியாளர்களைச் சந்திக்கும் வேளையில், தங்கள் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சத்தில், உண்மைப் பணியாளர்களை இவ்வுலகினின்றே அகற்றிவிடுவதை நாம் மீண்டும், மீண்டும் கண்டுவருகிறோம்.

பணியாளர், வார்த்தைகளால் மட்டும் போதிப்பது பயனளிக்காது, அவரது வாழ்வாலும் போதிக்கவேண்டும் என்பது, இயேசு சொல்லித்தரும் இரண்டாவது பாடம். பணியாளரின் வாழ்வு, மிக எளிமையான வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தி வார்த்தைகள் தெளிவாக்குகின்றன.

அருள்பணி ஸ்டான் அவர்கள் வாழ்ந்த மிக எளிமையான வாழ்வுக்கு பல நூறுபேர் சாட்சிகள். தன் பணியின் இலக்குமக்களென அவர் தெரிவுசெய்த பழங்குடியினர், மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் வாழ்வு முறை, அவரது வாழ்வு முறையாக மாறியது.

"உங்களை வரவேற்பவருடன் தங்கி இருங்கள், வரவேற்க மறுப்பவர்களிடமிருந்து விரைவில் விலகிச்செல்லுங்கள்" என்பது, இயேசு நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம். வரவேற்பு இல்லாத இடங்களிலிருந்து செல்லும்போது, “உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்” என்பதை இயேசு குறிப்பிட்டுச் சொல்கிறார்.

கால் தூசியை உதறிவிடுவதை, நாம் வழக்கமாக, ஒரு கோபச்செயலாக, நம்மை வரவேற்காதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையாகவே சிந்தித்துள்ளோம். இச்சொற்களை மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம். பணிசெய்ய செல்லுமிடத்தில், சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்த கசப்பான எண்ணங்களைச் சுமந்துகொண்டு, அடுத்த இடம் செல்லவேண்டாம். அந்த கசப்பை அங்கேயே விட்டுவிடுங்கள். காலில் படிந்த தூசியைத் தட்டுவதுபோல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களை தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக நாம் எண்ணிப்பார்க்கலாம். நம் உறவுகள், அல்லது, நண்பர்கள் நடுவே சரியான வரவேற்பு நமக்குக் கிடைக்கவில்லையென்ற கசப்பான எண்ணங்களை நம்மில் எத்தனை பேர் சுமந்து வருந்துகிறோம். பலவேளைகளில், இந்தக் கசப்புணர்வுகள், காலில் படிந்த தூசியாக இல்லாமல், கண்களில் விழுந்த தூசியாக உறுத்திக்கொண்டே இருக்கும். எந்த ஒரு கசப்பான நினைவையும், எண்ணத்தையும் கால் தூசியெனக் கருதி உதறிவிடுவதும், கண் தூசியாக சுமந்து வருந்துவதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம்.

இத்தகையச் சுதந்திரத்தை தகுந்தமுறையில் பயன்படுத்தியவர், அருள்பணி ஸ்டான் என்பது நிச்சயம். ‘பார்க்கின்சன்ஸ்’ என்ற நரம்புத்தளர்ச்சி நோயாலும், முதிர்ந்த வயதுக்கே உரிய உடல்நலக் குறைவுகளாலும் துன்புற்ற ஸ்டான் அவர்களுக்கு, சிறை அதிகாரிகள், அடிப்படை தேவைகளையும் மறுத்தனர் என்பதைக் கேள்விப்பட்ட நாம், ஆத்திரம் அடைந்தோம். ஆனால், அவரோ, தனக்குக் கிடைக்காதவற்றை கால் தூசியாகத் தட்டிவிட்டுவிட்டு, தனக்கு உதவிகள் செய்த உடன் சிறைக்கைதிகளைப் பற்றியே பேசிவந்தார் என்பது, அவர் பெற்றிருந்த உள்மனச் சுதந்திரத்தை உலகறியச் செய்தது.

இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்களை, இன்றைய வாசகங்கள் வழியே, அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற இறைவாக்கினர்கள் வழியே, நமக்குச் சொல்லித்தந்த இறைவனுக்கு, நன்றி பகர்வோம்.

10 July 2021, 14:38