திருத்தந்தை 5ம் கிரகரி திருத்தந்தை 5ம் கிரகரி 

திருத்தந்தையர் வரலாறு : மோதல்களும் அமைதியும்

திருத்தந்தையின் பெயரை முன்மொழியும் முழு அதிகாரமும் மன்னரிடம் இருந்ததால், தன் உறவினர் பெயரை முன்மொழிந்தார் மன்னர் Otto

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை 14ம் யோவான் Castle Sant'Angelo இருட்டறைகளில் சிறைவைக்கப்பட்டு உயிரிழந்தபின், 11 மாதங்கள் அநீதியான முறையில் அப்பதவியைக் கொண்டிருந்த ஏழாம் போனிபாஸ், 985ம் ஆண்டு ஜுலை மாதம் காலமானதுவரை கடந்த வாரம் கண்டோம்.

985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அல்லது, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பொறுப்பேற்ற திருத்தந்தை 15ம் யோவானையும், பிரபு Crescentiusன் மகன் John  Crescentius விடவில்லை. தற்போது தன் ஆதரவாளர்களுடன் இத்திருத்தந்தை 15ம் யோவானுக்கு எதிராக எழும்பினார். உரோம் நகரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய Crescentius, திருத்தந்தை உரோம் நகரில் தன் ஆன்மீகப் பணிகளை நிறைவேற்றவே கட்டுப்பாடுகளை விதித்தார். இதனைத் தாக்குப்பிடிக்க முடியாத திருத்தந்தை யோவான் டஸ்கனிக்குத் தப்பிச்சென்று பேரரசர் இரண்டாம் Ottoவின் விதவையான பேரரசி Theophanoவிடம் உதவிகேட்டார். ஆனால், Crescentiusயோ பல பொய்யான உறுதிமொழிகளை வழங்கி திருத்தந்தை 15ம் யோவானை உரோமுக்கு திரும்ப அழைத்தார். இத்திருத்தந்தை தன் ஆட்சிக்காலம் முழுவதும், Crescentiusன் ஆதரவாளர்களின் ஆதிக்கத்தின் கீழேயே இருக்கவேண்டியிருந்தது. இருப்பினும் முன்னாள் பேரரசர்கள் முதல் Ottoவின் விதவை Adelaide, அவர் மகன் இரண்டாம் Ottoவின் விதவை Theophano ஆகியோருடன் நல்ல தொடர்பிலும் இருந்தார். 

இத்திருத்தந்தை 15ம் யோவானின் காலத்தில் பிரான்சின் Reims நகர் திருஅவையில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. அந்நகர் பேராயரை நியமிப்பதில் அரசியல் தலையீடு, பேராயரின் கைது போன்ற குழப்பங்கள் தொடர்ந்தன. இவை மட்டுமல்ல, திருத்தந்தையின் ஆணைக்கும் அடிபணிய சில பிரெஞ்ச் ஆயர்கள் மறுத்தனர். இருப்பினும், தன் பிரதிநிதிகளின் உதவியுடன் இவைகளுக்கெல்லாம் தீர்வு கண்டார் திருத்தந்தை 15ம் யோவான். இத்திருத்தந்தையின் காலத்தில் திருஅவை வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வு இடம்பெற்றது. அதாவது, முதன் முறையாக திருத்தந்தை ஒருவரால், இறையடியார் ஒருவர் புனிதராக அதிகாரப்பூர்வமாக சடங்கு முறையில் அறிவிக்கப்பட்டார். அதாவது, 993ம் ஆண்டு சனவரி மாதம் 31ம்தேதி இலாத்தரனில் நடத்தப்பட்ட உரோமை ஆயர் பேரவையின்போது, Augsburg ஆயர் Ulrich அவர்கள், திருத்தந்தையால் புனிதராக அறிவிக்கப்பட்டார். இத்திருத்தந்தை 15ம் யோவான், கோவில்களுக்கும், துறவு மடங்களுக்கும் பல சலுகைகளை வழங்கியுள்ளார். Cluny துறவிகளின் பாதுகாவலராகவும், பெரும் ஆதரவாளராகவும் செயல்பட்டார் திருத்தந்தை 15ம் யோவான். இந்த நேரத்தில், அதாவது 996ம் ஆண்டு, புதிய பேரரசர் மூன்றாம் Otto திருத்தந்தையின் கைகளால் முடிசூட்டப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் இத்தாலிக்குப் பயணமானார். அவர் உரோம் நகர் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது, அதே ஆண்டு, அதாவது 996ம் ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் காலமானார் திருத்தந்தை 15ம் யோவான். இதனால் அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை இத்தாலியிலேயே காத்திருந்தார் பேரரசர் Otto. அவ்வாண்டின் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவையும் Pavia பகுதியிலேயே கொண்டாடினார் பேரரசர்.

996ம் ஆண்டு திருத்தந்தை 15ம் யோவான் மரணமடைந்தபோது, உரோமையர்கள் தங்கள் பிரதிநிதிகளை மூன்றாம் Otto மன்னரிடம் அனுப்பி, அடுத்து யாரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க அவர் விரும்புகிறார் என கேட்டனர். திருத்தந்தைக்கான பெயரை முன்மொழியும் முழு அதிகாரமும் மன்னருக்குக் கொடுக்கப்பட்டிருந்த காலம் அது. அவரும் தன் உறவினரும், ஆன்மீக வழிகாட்டியுமாக இருந்த அருள்பணி புருனோவின் பெயரை அறிவித்தார். இவர்தான் திருஅவையின் முதல் ஜெர்மன் திருத்தந்தை.

திருத்தந்தை 5ம் கிரகரி

மன்னரின் உறவினர் என்பது மட்டும் அருள்பணி புருனோவின் தகுதியாக இருக்கவில்லை. இவர் பெரிய கல்விமானாகவும் இருந்தார். பேரரசர் முன்மொழிய, உரோமையர்களால் பாப்பிறையாக தேர்ந்துகொள்ளப்பட்ட இவர், 5ம் கிரகரி என்ற பெயருடன் பொறுப்பேற்றார். 996ம் ஆண்டு மே மாதம் 3ந்தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற இவர், முதலில் அதே மாதம் 21ந்தேதி, Ottoவை பேரரசராக முடிசூட்டினார். பேரரசரும் திருத்தந்தையும் உறவினர்கள் என்பதால், நிர்வாகம் மிகமிக சுமுகமாகச் சென்றது. இருவரும் இணைந்து ஆயர் பேரவையைக் கூட்டி பல முக்கிய முடிவுகளையும் எடுத்தனர். இத்திருத்தந்தை 5ம் கிரகரி நல்ல அறிவாளியாக இருந்தது மட்டுமல்ல, நல்ல மனிதாபிமானம் மிக்கவராகவும், மன்னிக்கும் குணம் படைத்தவராகவும் இருந்தார். உரோம் நகரில் கலகங்களை உருவாக்கிய Crescentiusயை நாடு கடத்த பேரரசர் முயன்றபோது, அவருக்காக வாதாடி அத்தண்டனையை நீக்க வைத்தார். இந்த நல்ல குணம் அவருக்கே தீங்கு விளைவிப்பதாக இருந்தது. அதாவது, மன்னர் Otto, உரோம் நகரை விட்டுச் சென்ற உடனேயே, Crescentius  தன் ஆதரவாளர்களுடன் உரோம் நகரில் மீண்டும் ஆயுதங்களைக் கைக்கொண்டதால், திருத்தந்தை கிரகரி வடக்குநோக்கி தப்பியோட வேண்டியதாகியது.

எதிர்திருத்தந்தை 16ம் ஜான்

உண்மையான திருத்தந்தை தப்பியோடிய பின்னரும் பிரபு Crescentius வாளாவிருக்கவில்லை. இன்னொருவரை தன் மனம்போன போக்கில் திருத்தந்தையாக நியமித்தார். இத்தாலிய கிரேக்க வம்சத்தைச் சேர்ந்த John  Philagathus என்பவர் திருத்தந்தையாக, Crescentiusஆல் அறிவிக்கப்பட்டார். இவரும் 16ம் யோவான் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு எதிர் திருத்தந்தையாகப் பதவியேற்றார். அதேவேளை, இத்தாலியின் வடபகுதிக்குத் தப்பியோடிய திருத்தந்தை 5ம் கிரகரி, பவியா (Pavia) எனுமிடத்தில் ஆயர் பேரவையைக் கூட்டி, திருஅவைக்குள் சில ஒழுங்கு முறைகளைப் புகுத்தினார். உண்மை திருத்தந்தை பவியாவிலும், போலி திருத்தந்தை உரோம் நகரிலும் இருக்க, தன்னால் நியமிக்கப்பட்ட திருத்தந்தைக்கு நேர்ந்த கதியை கேள்விப்பட்ட Otto மன்னர் கோபம் கொண்டு உரோம் நகர் நோக்கி படையெடுத்தார். ஆகவே, எதிர்திருத்தந்தை Philagathus  உரோம் நகரை விட்டே தப்பியோட, ஏற்கனவே ஒருமுறை மன்னித்துவிடப்பட்ட Crescentius  பிரபுவோ, Castle Sant Angelo மாளிகையில் போய் கதவுகளைத் தாழிட்டு உள்ளே அடைக்கலம் புகுந்தார்.  

உரோம் நகர் நோக்கி வந்த பேரரசரின் படைகள் முதலில், தப்பியோடிய எதிர்திருத்தந்தை Philagathusயைப் பிடித்து அவரின் மூக்கு, காது, கண்கள், மற்றும் நாக்கை வெட்டியபின், அவரை உரோம் நகருக்குக் கொணர்ந்தனர். திருத்தந்தை, மற்றும் பேரரசர் முன் அவர் நிறுத்தப்பட்டார். பேரரசரின் உத்தரவின்பேரில், Philagathus உரோம் வீதிகளில் கழுதையின் மீது இழுத்துச் செல்லப்பட்டு, ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் 1013ம் ஆண்டு Fulda துறவு மடத்தில் காலமானார் என நம்பப்படுகிறது. எதிர் திருத்தந்தை Philagathusயை ஜெர்மனிக்கு நாடு கடத்திவிட்டு, அடுத்ததாக, Castle Sant’Angelo நோக்கிச் சென்றன பேரரசரின் படைகள். அங்கு ஒளிந்திருந்த Crescentius பிரபுவுக்குத் தெரிந்துவிட்டது, தன் கடைசி காலம் நெருங்கிவிட்டது என்று. கோட்டையைச் சுற்றி வளைத்து அப்பிரபுவை கைதுசெய்த படைவீரர்கள், அக்கோட்டைச் சுவரிலேயே அவரை தூக்கிலிட்டுக் கொன்றனர்.

மீண்டும் திருத்தந்தை 5ம் கிரகரி

திருத்தந்தை 5ம் கிரகரி, தன் ஆட்சிக் காலத்தின்போது பலமுறை ஆயர் பேரவைகளைக் கூட்டி, பல நல்ல தீர்மானங்களை நிறைவேற்றி, திருஅவைக்கு புத்துயிர் கொடுத்தார். இவர் எடுத்த நல்ல முடிவுகளுக்கு எல்லாம், அவரின் உறவினர், பேரரசர் Ottoவும் துணைநின்றது இங்கு குறிப்பிடும்படியானது. பேரரசர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பல ஜெர்மன் துறவு மடங்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கினார் திருத்தந்தை 5ம் கிரகரி. 999ம் ஆண்டு பிப்ரவரி 4ந்தேதி (18?) திருத்தந்தை கிரகரி உயிரிழந்தபோது, இவர் உடல் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

  அடுத்து பொறுப்பேற்றவர் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர். இவர் திருஅவையை வழிநடத்தியது ஒரு முக்கியக் காலக்கட்டத்தில், அதாவது, திருஅவை வரலாற்றின் ஆயிரமாம் ஆண்டில். இது குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2021, 12:47