ஹிரோஷிமா அமைதி சின்ன நினைவிடத்தில் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்(1981 பெப்ருவரி) ஹிரோஷிமா அமைதி சின்ன நினைவிடத்தில் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்(1981 பெப்ருவரி) 

ஜப்பான் திருஅவையின், 'அமைதிக்கான 10 நாட்கள்' முயற்சி

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், அமைதிக்கான அழைப்பை ஹிரோஷிமா நகரில் விடுத்ததைத் தொடந்து, 'அமைதிக்கான 10 நாட்கள்' என்ற முயற்சி துவக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹிரோஷிமா, மற்றும் நாகசாகி நகர்களில் அணுகுண்டு வீச்சால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜப்பானில் சிறப்பிக்கப்படும் 'அமைதிக்கான 10 நாட்கள்' என்ற முயற்சிக்கு, இவ்வாண்டு, 'அனைத்து உயிர்களையும் பாதுகாப்பது, அமைதியை உருவாக்குகிறது' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஜப்பான் திருஅவையால் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் இந்த பத்துநாள் அமைதி முயற்சிக்குரிய தலைப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் 2019ம் ஆண்டு நவம்பரில் மேற்கொண்ட திருப்பயணத்தின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 10 நாள் அமைதி முயற்சியை மையப்படுத்தி செய்தி வெளியிட்ட ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவரும், நாகசாகி ஆயருமாகிய ஆயர் Joseph Mitsuaki Takami அவர்கள், இன்றைய உலகை, ஆயுத மோதல்களும், அணுசக்தி ஆயுதங்களும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதையும், புலம்பெயர்வோர் நெருக்கடி, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் புதிய பனிப்போர் ஆகியவைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாண்டு சனவரி மாதம் 22ம் தேதி முதல் அணுஆயுத தடைச் சட்டம் அமலுக்கு வந்துள்ள போதிலும், இன்னும் பல நாடுகள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய ஆயர் Takami அவர்கள், மோதல்களும் அணுஆயுத கையிருப்புகளும் தொடரும்வரை, உலகில் அமைதி நிலைத்திருக்கும் என்பதற்கு வாய்ப்பில்லை என, தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு, மற்றும் வளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற போர்வையில், மக்களின் வாழ்வுக்கு மதிப்பளிக்காமல் நடத்தும் நாடுகள் குறித்தும் கவலையை வெளியிட்ட, ஜப்பான் ஆயர் பேரவைத்தலைவர், மனிதர்களின் பின்னணியைப் பார்க்காமல், அவர்களின் வாழ்வைப் பாதுகாக்க முன்வரும்போதுதான் அமைதியை கட்டிக்காக்க முடியும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இன்றைய கோவிட் பெருந்தொற்றின் காரணமாகத் துன்புறும் ஏழை நாடுகளுடன் காட்டும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக, அவர்களுக்கு பல்வேறு உதவிகளை ஆற்றவேண்டிய பணக்கார நாடுகளின் கடமையையும், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் நாகசாகி ஆயர் Takami.

ஜப்பான் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தின்போது, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி, அமைதிக்கான அழைப்பை ஹிரோஷிமா நகரில் விடுத்ததைத் தொடந்து, அதற்கு அடுத்த ஆண்டு 1982ல், 'அமைதிக்கான 10 நாட்கள்' என்ற முயற்சி, ஜப்பான் ஆயர்களால் துவக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 14:58