புனித சைமன் ஸ்டோக் அவர்களுககு அன்னை மரியா காட்சி புனித சைமன் ஸ்டோக் அவர்களுககு அன்னை மரியா காட்சி 

நேர்காணல்: தூய கார்மேல் அன்னை மரியா பக்தி

அன்னை மரியா, புனித சைமன் ஸ்டோக் அவர்களிடம் உத்திரியம் பற்றிக் கூறியது : உத்திரியம், மீட்பின் அடையாளமாகவும், ஆபத்தில் பாதுகாப்பாகவும், மன அமைதியைத் தரும் அருள் வேண்டலின் குறியீடாகவும் இருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

கார்மேல் என்பதற்கு அழகிய தோட்டம் என்பது பொருள். புனித பூமியுள்ள கார்மேல் மலையில், 12ம் நூற்றாண்டில் தங்கள் வாழ்வைத் தொடங்கிய துறவியர், கார்மேல் சபையினர் என அழைக்கப்படுகின்றனர். புனித மலை எனவும் அழைக்கப்படும் கார்மேல் மலையில், அத்துறவியர், அன்னை மரியாவுக்கென ஓர் ஆலயம் எழுப்பி, அந்த அன்னைக்கு கார்மேல் அன்னை எனவும் பெயர்சூட்டினர். அழகிய தோட்டமாகிய, அன்னை மரியாவின் புண்ணிய பாதையைச் சரியாகப் பின்பற்றும்போது நாமும் அழகிய தோட்டமாக மாறுகிறோம். கார்மேல் அன்னையின் திருநாள், திருஅவையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 16ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளின் திருவழிபாட்டில், கார்மேல் சபை துறவியர், உத்திரியம் எனப்படும் கழுத்துப்பட்டையை ஆசிர்வதித்து இறைமக்களுக்கு வழங்குகின்றனர். மரியின் ஊழியர் சபையின், அருள்பணி சவுரிராஜ் அவர்கள், தூய கார்மேல் அன்னை விழா, மற்றும், உத்திரியம் பற்றிய வரலாற்றை இன்று நமக்கு விளக்குகிறார். இவர், அச்சபையின் உரோம் தலைமையகத்தில் பொது ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.

நேர்காணல்: தூய கார்மேல் அன்னை மரியா பக்தி

அருள்பணி சவுரிராஜ் ம.ஊ.ச. : தூய கார்மேல் அன்னை (நினைவு விழா)

ஜூலை மாதம் 16-அம் தேதி திருச்சபை கொண்டாடும் நினைவு விழா தூய கார்மேல் அன்னை திருவிழா. இவ்விழாவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன: ஒன்று கார்மேல் அன்னை காட்சி கொடுத்தது, மற்றொன்று காட்சி கொடுத்த கார்மேல் அன்னை குறியீடாக உத்திரியம் கொடுத்தது.

கார்மேல் அன்னையின் காட்சி

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பெர்டோல்ட், கார்மேல் மலையில் தங்கி தனது துறவற வாழ்வைத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி வந்தவர்கள்தான் கார்மேல் அன்னை சபையின் துறவிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இம்மலையில் வாழ்ந்தபோது அன்னை மரியாவுக்கு ஒரு சிற்றாலயம் எழுப்பினர். இவ்வாலயத்தில் இருந்த அன்னையை கார்மேல் அன்னை என்று அழைத்தனர். இக்காலக்கட்டத்தில் பாலஸ்தீனாவில் கார்மேல் மலையில் வாழ்ந்து கொண்டிருந்த கார்மேல் அன்னை சபைத் துறவிகள் ஐரோப்பிய கண்டத்திற்கு செல்கின்றனர். அவ்வாறு அங்குச் சென்றபோது, ஐரோப்பிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சிலர், கார்மேல் துறவற வாழ்வில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கினறனர். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் புனித சைமன் ஸ்டோக் என்பவர், கார்மேல் சபையின் அதிபர் தந்தையாகிறார். குழப்பமான சூழ்நிலையில் சபையை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல் சைமன் ஸ்டோக் அன்னை மரியாவிடம் முறையிடுகின்றார். கி.பி. 1251-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி கார்மேல் மலை சிற்றாலயத்தில் கார்மேல் அன்னை வானதூதர்கள் புடைசூழ கையில் உத்திரியம் தாங்கியவராய் அவருக்கு காட்சிகொடுத்தார். அந்நேரத்தில்,  அன்னை மரியா அவருக்கு உத்திரியத்தைத் தந்து கூறியது:

மகனே! இந்த உத்திரியத்தைப் பெற்றுக்கொள். எவரெல்லாம் இவ்வுத்திரியத்தை அணிந்தவர்களாக இறக்கிறார்களோ, அவர்கள் கொடிய நரக நெருப்பின் வேதனையிலிருந்து நித்தியத்திற்கும் காக்கப்படுவர். மேலும், இது மீட்பின் அடையாளமாகவும், ஆபத்தில் பாதுகாப்பாகவும், மன அமைதியைத் தரும் அருள் வேண்டலின் குறியீடாகவும் இருக்கும்.

இக்காட்சியின் அடையாளமாகவே கார்மேல் அன்னை சபையின் துறவிகள் பழுப்பு நிற உத்திரியத்தை, தங்கள் துறவற ஆடையின் ஓர் அங்கமாகப் பயன்படுத்துகின்றனர். குழம்பிப் போயிருந்த கார்மேல் துறவிகளுக்கு அன்னை அளித்த காட்சி, மற்றும் கொடுத்த உத்திரியம் தளர்ந்துபோன விசுவாசத்தைக் கட்டி எழுப்பக்கூடியதாக அமைந்திருந்தது. உத்திரியம் தந்த கார்மேல் அன்னை

அன்று கலங்கிப்போயிருந்த புனித சைமன் ஸ்டோக்கிற்கு காட்சி கொடுத்த கார்மேல் அன்னை கையோடு தந்த பரிசுதான் இந்த பழுப்பு நிற உத்திரியம். இது கழுத்தில் அணியப்படுகின்ற அருள்வேண்டல் குறியீடு. அதாவது அன்று போருக்குச் சென்ற வீரர்கள் தங்களை எதிரியின் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்வதற்காக முதுகில் ஓர் இரும்புப் பட்டையும், மார்பில் மற்றொரு இரும்புப் பட்டையும் கவசம்போல் அணிந்திருப்பர். இவ்விரு இரும்புப் பட்டைகளும் முதுகோடும் மார்போடு ஒட்டியிருப்பதற்காக, தோள்பட்டையின் மீது ஒரு நூலினால் இணைத்துக் கட்டியிருப்பர். ஏறக்குறைய உத்திரியமும் இத்தகைய படைக்கவசத்தை ஒத்ததாகவே அமைந்திருக்கும். இரண்டு பழுப்பு நிற தோலினாலான பட்டையங்கள் நூலினால் இணைக்கப்பட்டு கழுத்தில் அணியக்கூடிய வித்தில் அமைந்திருக்கும். மார்பில் ஒன்றும், முதுகில் மற்றொன்றும் என்று இரண்டு பழுப்பு நிற தோலினாலான இரண்டுப் பட்டயங்கள் காத்து நிற்கும். எவ்வாறு படைக்கவசமான இரும்புப் பட்டையங்கள் படை வீரர்களை எதிரியின் வாளினின்றும், வேலினின்றும் காக்கிறதோ அவ்வாறே உத்திரியம் நம்மை தீயோனின் தாக்குதலிலிருந்தும், மாற்றானின் சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாத்து எறி நரக நெருப்பின் வேதனைக்கு நம்மை கையளிக்காமல் பாதுகாத்து வான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவுகிறது என்பதே கார்மேல் அன்னை அளித்த வாக்குறுதி.

திருவழிபாட்டு முறை

கார்மேல் அன்னை திருவிழாவனது 13-ஆம் நூற்றாண்டில் கார்மேல் அன்னை புனித சைமன் ஸ்டோக் என்ற கார்மேல் சபைத் துறவிக்குக் காட்சி கொடுத்ததிலிருந்து ஆரம்பமாகியிருந்தாலும், திருச்சபையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் 14-ஆம் நூற்றான்டுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்துதான் இங்கிலாந்தில் கொண்டாடப்பட்டு வந்தது. பின்பு இத்திருவிழாவனது உத்திரியத் திருவிழாவோடு இணைக்கப்பெற்று 15-ஆம் நூற்றாண்டு முதல், அகில உலகத் திருச்சபையால் கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விரு விழாக்களும் ஒன்றே என்று கருதும் அளவுக்கு திருவழிபாட்டில் கொண்டாடப்பட்டாலும், தொடக்கத்தில் கார்மேல் அன்னை விழாவிற்கும், உத்திரிய அன்னை விழாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை. இவ்வழிபாட்டு உண்மையை உணர்ந்த வத்திக்கான் திருச்சங்கத்தின் திருவழிபாட்டு முறை, இவ்விரு விழாக்களுக்கும் தொடர்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி கார்மேல் அன்னை விழா என்பது, கார்மேல் அன்னை புனித சைமன் ஸ்டோக் என்பவருக்கு காட்சி கொடுத்ததை மையமாக வைத்தே கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும் இவ்விழாவோடு உத்திரிய விழா கொண்டிருக்கும் இணைப்பை முழுமையாகப் பிரித்துக் காட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. மேலும் 1996-ஆம் ஆண்டு இறைவழிபாடு மற்றும் அருட்சாதனங்களின் ஒழுங்குமுறைகான பேராயம் தயாரித்தளித்த சரியான மந்திரிப்பு முறையைப் பின்பற்றி அருள்பணியாளர் உத்திரியத்தை ஆசீர்வதித்து பக்தர்கள் கழுத்தில் அணிவித்திடவேண்டும் என்ற திருவழிபாட்டு முறையைக் காண்கின்றபோது கார்மேல் அன்னை விழாவானது உத்திரிய அருள்வேண்டல் குறியீடாக இன்றும் இணைந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது:

கார்மேல் அன்னை மீதான பக்தி முயற்சியானது கார்மேல் அன்னை துறவிகள் சபை சகோதரர்களுடைய வாழ்க்கையோடு ஒன்றித்து உத்திரிய அருள் வேண்டல் குறியீடு வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே எவரொருவர் உத்திரியத்தைப் பெற்று அணிந்து கொள்கிறாரோ அவர் கார்மேல் சபையின் அங்கத்தினராகின்றார். மேலும் அவர்களின் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்திட வாக்குறுதியளிக்கின்றார்.

ஆகவே நாமும் ஜூலை 16-ஆம் தேதி அருள்பணியாளரால் மந்திரிக்கப்பட்ட உத்திரியத்தை அணிந்து இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றபோது கார்மேல் அன்னை துறவறக் குடும்பத்தில் ஆன்மீக அங்கத்தினராகின்றோம். அதன்வழியாக இறந்தபின்பு எரிநரக நெருப்பின் வேதனையிலிருந்து காக்கப்படுகின்றோம் என்ற மகிழ்வோடு கார்மேல் அன்னைக்கு விழா எடுத்து மகிழ்வோம். தூய கார்மேல் அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (அருள்பணி சவுரிராஜ் ம.ஊ.ச., மரியின் ஊழியர் சபை தலைமையகம், உரோம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2021, 13:13