மியான்மார் நாட்டில் பெருந்தொற்றின் காரணமாக மிக அரிதான பொருளாக மாறிவிட்ட ஆக்சிஜன் மியான்மார் நாட்டில் பெருந்தொற்றின் காரணமாக மிக அரிதான பொருளாக மாறிவிட்ட ஆக்சிஜன் 

ஆயுதங்களை கைவிட்டு, நாட்டு நலனை மனதில் கொள்க

கர்தினால் போ : மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, கல்லறைத் தோட்டங்களில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர், நோயாளிகள் தங்கள் உறவினர்களை இறுதியாக சந்திக்க முடியாமலேயே இறக்க வேண்டியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் ஆயுதம் தாங்கியுள்ளோர் அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, நலஆதரவுப் பணிகளை ஆற்றுவதிலும், உணவு, மற்றும் மருந்துக்களை மக்களுக்கு விநியோகிப்பதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் சார்ல்ஸ் மாங்க் போ.

கோவிட் பெருந்தொற்றின் மூன்றாவது அலையால், மியான்மார் நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 18, ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவேற்றிய திருப்பலியில், இந்த விண்ணப்பத்தை விடுத்த கர்தினால் போ அவர்கள், உயிர்களைக் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என கேட்டுக்கொண்டார்.

கோவிட், மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி என மூன்று பெரும் சவால்களை எதிர்கொண்டுவரும் மியான்மார் நாட்டில், இயற்கையின் இலவச பொருளான ஆக்சிஜன், பெருந்தொற்றின் காரணமாக மிக அரிதான பொருளாக மாறிவிட்டது என கவலையை வெளியிட்டார் கர்தினால் போ.

பசி, பதற்றம், அச்சம் என்பவை, மக்களின் இதயங்களை நிறைத்துள்ளன என்று கூறிய கர்தினால் போ அவர்கள், மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன, கல்லறைத் தோட்டங்களில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர், நோயாளிகள், தங்கள் உறவினர்களை, இறுதியாக சந்திக்கமுடியாமலேயே இறக்க வேண்டியுள்ளது என்ற ஆழ்ந்த கவலையையும், தன் ஞாயிறு மறையுரையில் வெளியிட்டார்.

மியான்மார் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 20 விழுக்காட்டினர் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறிய கர்தினால் போ அவர்கள், ஆயுதங்களைக் கைவிட்டு, நாட்டுநலனை நோக்கி இதயங்களில் மாற்றம் ஏற்படவில்லையெனில், ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பதை நாம் தடுக்கமுடியாது என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

மியான்மார் நாட்டின் இராணுவ ஆட்சியின் கீழ் செயல்படும் நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, அந்நாட்டில், இதுவரை, கோவிட் நோயால் 2,24,236 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், 4,769 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்க, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என, செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2021, 14:47