COP26 உச்சி மாநாட்டிற்கு 100 நாள்கள் இருப்பதை நினைவுறுத்தும் பதாகைகள் COP26 உச்சி மாநாட்டிற்கு 100 நாள்கள் இருப்பதை நினைவுறுத்தும் பதாகைகள் 

COP26 உச்சி மாநாட்டிற்கு 100 நாள்கள்

செப்டம்பர் 5ம் தேதியன்று, 'சுற்றுச்சூழல் ஞாயிறு' என்ற முயற்சியை, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள 1,500க்கும் அதிகமான கிறிஸ்தவ ஆயலங்கள் முன்னின்று நடத்துமாறு அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி, ஐ.நா.அவை, இவ்வாண்டு, நவம்பர் முதல் தேதியிலிருந்து, பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் ஏற்பாடு செய்துள்ள COP26 உச்சி மாநாட்டிற்கு 100 நாள்கள் இருப்பதை நினைவுறுத்தி, பிரித்தானியாவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள், தங்கள் பிரதமருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளன.

வட அமெரிக்க கண்டத்தில் உருவான வரலாறு காணாத வெப்ப அலைகள், ஐரோப்பாவின் பல நாடுகளிலும், சீனாவிலும் ஏற்பட்டுள்ள வெள்ளங்கள், ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும், அவருக்குத் துணையாகச் செயலாற்றும் அமைச்சர்களும் COP26 உச்சி மாநாட்டிற்கு மிகத் தீவிரமாக தயார் செய்யுமாறு இந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

அரசியல் உலகில் இணைப்புகளை உருவாக்க, இரண்டாம் உலகப்போரின் வேளையில் பிரித்தானியா ஈடுபட்டிருந்ததை அடுத்து, தற்போது, COP26 வழியே, மீண்டும் அத்தகைய பொறுப்பு பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, பிரித்தானிய பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் முன்னணி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கிறிஸ்தவ உதவிகள் என்ற பொருள்படும் Christian Aid அமைப்பின் தலைவர் Amanda Khozi Mukwashi அவர்கள் கூறினார்.

ஏற்கனவே, கோவிட் பேருந்தொற்றின் தாக்கத்தால் பெருமளவு வதைக்கப்பட்டுள்ள வறியோர், வெவ்வேறான காலநிலை மாற்றங்களால் மேலும் வதைப்படுவதைத் தடுப்பதற்கு, பிரித்தானிய அரசு முழு முயற்சியுடன் செயலாற்றி, COP26 உச்சி மாநாடு வெற்றியடைய உழைக்கவேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புக்கள் விண்ணப்பித்துள்ளன.

இந்த 100 நாள்களை, மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நினைவுறுத்தும்வண்ணம், வருகிற செப்டம்பர் 5ம் தேதியன்று, 'சுற்றுச்சூழல் ஞாயிறு' என்ற முயற்சியை, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள, 1,500க்கும் அதிகமான கிறிஸ்தவ ஆயலங்கள், முன்னின்று நடத்துமாறு, கிறிஸ்தவ அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2021, 14:24