ஈராக் மருத்துவமனை தீ விபத்தில் இறந்தோருக்கு தீபங்களுடன் அஞ்சலி ஈராக் மருத்துவமனை தீ விபத்தில் இறந்தோருக்கு தீபங்களுடன் அஞ்சலி 

மருத்துவமனை தீ விபத்து – ஈராக் கர்தினாலின் இரங்கல்

ஈராக் நாட்டின், Imam Hussein மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து, ஆழந்த வேதனையையும், மன வருத்தத்தையும் உருவாக்கியுள்ள நிகழ்வு - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின், Imam Hussein மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து, ஆழந்த வேதனையையும், மன வருத்தத்தையும் உருவாக்கியுள்ள நிகழ்வு என்று, பாக்தாத் நகரின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், பாக்தாத் நகரில் அமைந்துள்ள மற்றொரு மருத்துவ மனையின் கோவிட் பெருந்தொற்று பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பதை, கர்தினால் சாக்கோ அவர்கள் தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Hussein மருத்துவமனையில், மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட கோவிட் பெருந்தொற்று பகுதியில் நிறுவப்பட்டிருந்த மின் இணைப்புக்களில் ஏற்பட்ட தீப்பொறி, ஆக்சிஜன் கலத்தை தீண்டியதால் ஏற்பட்ட வெடிவிபத்து, இந்த தீ விபத்திற்கு காரணமாக அமைந்தது என்று தற்போதைய விவரங்கள் கூறுகின்றன.

Hussein மருத்துவமனையின் தலைமை நிர்வாகி, நஸிரியா பகுதி நலத்துறை அதிகாரி ஆகியோர் உட்பட, 13 பேரை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்த, ஈராக் பிரதமரும், அந்நகரின் நீதி மன்றத்தினரும் ஆணையிட்டுள்ளனர்.

ஈராக் நாட்டில் இதுவரை 14 இலட்சம் பேர், கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கபப்ட்டுள்ளனர் என்றும், அண்மைய நாள்களில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிவருகிறது என்றும், இதுவரை, அந்நாட்டில், பெருந்தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,000த்திற்கும் அதிகம் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்குள் இருவேறு மருத்துவ மனைகளின் கோவிட் பெருந்தொற்று பகுதிகள், தீ விபத்திற்கு உள்ளானது குறித்து, மக்கள் மத்தியில், வேதனையும், ஆத்திரமும் கூடியுள்ளன என்று, ஊடகங்கள் கூறிவருகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2021, 15:22