பானமா நாட்டில் நிகழ்ந்த இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய இளையோர் - கோப்புப் படம் 2019 பானமா நாட்டில் நிகழ்ந்த இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய இளையோர் - கோப்புப் படம் 2019 

ஆகஸ்ட் 01, தமிழகத் திருஅவையில் 18வது இளையோர் ஞாயிறு

பெருந்தொற்றுச் சூழலால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் இளையோருக்குக் கருணைகாட்ட நாம் கற்றுக்கொள்ளவேண்டும், அப்படிச் செய்தால் மட்டுமே, நாம் ஒரு புதிய உலகினைக் கட்டியெழுப்பமுடியும் - ஆயர் நசரேன் சூசை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றின் தொடர் அலைகளையும், இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொள்ள, களம்காணும் ஆற்றல்சார் இளையோர் உருவாக்கப்படுமாறு, தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுவின் தலைவரான, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று, தமிழகம் முழுவதும் சிறப்பிக்கப்படும் 18வது இளையோர் ஞாயிறுக்கென, மேய்ப்புப்பணி சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர் நசரேன் சூசை அவர்கள், இளையோர் மீது திருஅவை அக்கறை கொண்டிருப்பதை உணர்த்துமாறும், இயேசுவுக்குச் சான்றுபகரும் நம் வாழ்வால் இளையோர் உந்துதல் பெற உதவுமாறும், தமிழகத்தின் அனைத்து அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெருந்தொற்றுச் சூழலால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் இளையோருக்குக் கருணைகாட்ட நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அப்படிச் செய்தால் மட்டுமே, நாம் ஒரு புதிய உலகினைக் கட்டியெழுப்ப முடியும் என்பதனைத் தாய்த் திருஅவை உணர்ந்துள்ளது என்று கூறியுள்ள ஆயர் நசரேன் சூசை அவர்கள், பெருந்தொற்று காலத்தில் தமிழக இளையோர் ஆற்றிவரும் நற்பணிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளால் இளையோர் எதிர்கொள்கின்ற வாழ்வுப் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் நசரேன் சூசை அவர்கள், நாம் மறுகிறிஸ்துகளாய் வாழ்வதன் வழியாக, நம்பிக்கைக் கீற்றுகளாகத் திகழும் நம் இளையோரும் அவ்வாறு வாழ உதவமுடியும் என்றும், தன் சுற்றுமடலில் கூறியுள்ளார்.

சான்று வாழ்வால் இளையோருக்கு உதவிகள்

இளையோர், தகுந்த வளர்ச்சி காணவும், ஆளுமையை வளர்த்தெடுக்கவும், தலைமைத்துவத்தில் வளரவும் இயக்கங்கள் பெரும் பங்காற்றுகின்றவேளை,  தமிழகத்தின் எல்லாப் பங்குத்தளங்களிலும், அன்பியங்களிலும் உள்ள இளையோர் இயக்கமாக ஒருங்கிணைந்து, நட்புறவில் வளர்ந்து, தங்களை உருவாக்கிக்கொள்ள உதவுவது, நம் அனைவரின் கடமை என்பதை, ஆயரின் மடல் நினைவுபடுத்தியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்துவது போன்று, உடன்பிறந்தோருக்குரிய அன்புடன் வாழ்ந்து, ஒட்டுமொத்த மானுடத்தையும் மீட்டெடுக்க, நம்மிடையே பிரிவினையையும், ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் சாதிப்பிரிவினை, பாலின வேறுபாடு, சமத்துவமற்ற பொருளாதாரம் ஆகியவற்றை களைந்தெறிய நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்றும், ஆயரின் மடல் கேட்டுக்கொண்டுள்ளது.

பெருந்தொற்றின் தொடர்அலைகளை எதிர்கொள்ள, ஒருங்கிணைந்த சமூகச் செயல்பாட்டை இளையோர் முன்னெடுக்க, தங்களது திறமை, விருப்பம், இயல்புக்கேற்பத் தன்னார்வத் தொண்டர்களாக களங்காண உடன்பயணிப்போம். அதற்கு உதவும்வகையில், “வருமுன்காப்போம் குழு, புள்ளிவிவரம் சேகரிப்பு, ஊடகக்குழு, தேவையறியும் குழு, உதவும் கரங்கள் குழு, உணவுக்குழு, ஆற்றுப்படுத்தும் குழு, வழிபாட்டுக்குழு ஆகியவற்றை உருவாக்கி, அவற்றில் தன்னார்வமுள்ள இளையோரை இணைத்து வழிகாட்டுவோம் என்றும், ஆயரின் மடல் அழைப்புவிடுத்துள்ளது.

பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க சிறந்த பாதுகாப்புக் கேடயமாகத் தடுப்பூசி அமைந்துள்ளதால், பங்குத்தளங்களிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி முகாம்களை இளையோரது ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்வோம், கோவிட்-19 இரண்டு அலைகளின்போதும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் அளப்பரிய பணிகள் ஆற்றியுள்ளனர், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ கருவிகள் (Ventilator), உயிர்வளி (Oxygen) போன்றவை தாராளமாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட சிறப்புமிக்க மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நலவாழ்வு மையங்களில் மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) வசதிகள் மேம்படுத்தப்படவும் முதலமைச்சருக்கும் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திற்கும் தெரியப்படுத்தவும் கையெழுத்து இயக்கத்தினை இளையோரோடு இணைந்து முன்னெடுப்போம் என்றும், ஆயர் நசரேன் சூசை அவர்கள், தன் சுற்று மடலில் அழைப்புவிடுத்துள்ளார்.

“எழுந்து நில், நீ கண்டவற்றிற்குச் சான்றுபகர நான் உன்னை ஏற்படுத்தினேன்” (தி.ப.26:16) என்ற தலைப்பில், 18வது இளையோர் ஞாயிறுக்கென வெளியிடப்பட்டுள்ள ஆயர் நசரேன் சூசை அவர்களது சுற்றுமடல், ஆகஸ்ட் 25, ஞாயிறன்று தமிழகத்தின் எல்லாப் பங்கு ஆலயங்களிலும், துறவு இல்லங்களிலும் வாசிக்கப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (Ind.Sec./Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2021, 15:20