இந்தியாவில் கிறிஸ்தவ திருமணம்  இந்தியாவில் கிறிஸ்தவ திருமணம்  

மகிழ்வின் மந்திரம்: திருமண விழாவை எளியமுறையில் நடத்த அழைப்பு

தம்பதியர், திருமணத்திற்குத் தயாரிக்கும்போது, திருமணத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் அனைத்து அடையாளங்களின் பொருளையும் உணர்ந்து போற்றுவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் 

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில், 'திருமண விழாவுக்குத் தயாரிப்பு' என்ற பகுதியின் (212-216) முதல் இரு பத்திகளில் (212,213), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம்...

திருமண அழைப்பிதழ்கள், ஆடைகள், விருந்து.. இவ்வாறு இடம்பெறும் குறுகிய கால 'திருமண விழாத் தயாரிப்புக்கள், பணத்தை மட்டுமல்ல, சக்தியையும் மகிழ்ச்சியையுமே உறிஞ்சிவிடுகின்றன. இதனால் தம்பதியரும், திருமண நிகழ்வுக்கு வரும்போது, வாழ்க்கையில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் மாபெரும் படியில் கவனம் செலுத்துவது மற்றும், அதற்குத் தயாராக இருப்பதைக் காட்டிலும், மிகவும் களைத்து காணப்படுவர். மேலும், ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டம் பற்றி கவலைப்படுவது, சட்டமுறையான திருமண பிணைப்பை ஒருவிதத்தில் பாதிக்கிறது. இந்த இடத்தில் தம்பதியருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களது திருமணக் கொண்டாட்டத்தை வித்தியாசமானதாக அமைக்கத் துணிவுகொள்ளுங்கள். நுகர்வு சமுதாயம் மற்றும், வெற்று வெளித் தோற்றங்களில் சிக்கிக்கொள்ளாதிருங்கள். நீங்கள் பகிர்ந்துகொள்ளும் அன்பும், இறையருளால் வலிமைப்படுத்தப்படுதல் மற்றும், புனிதப்படுத்தப்படுதலுமே முக்கியம். அனைத்திற்கும் மேலாக, அன்பு முதலிடம் வகிக்கும், ஆரவாரமற்ற மற்றும், எளிமையான கொண்டாட்டத்தை நடத்துவதற்கு உங்களால் இயலும். திருமணக் கொண்டாட்டத்தில் இத்தகைய முறைகளை புதுமணத் தம்பதியர் தேர்ந்துகொள்ள, மேய்ப்புப்பணியாளர்களும், அத்தம்பதியர் சார்ந்துள்ள சமுதாயம் முழுவதும் உதவிசெய்ய முடியும். மேலும், தம்பதியர், திருமணத்திற்குத் தயாரிக்கும்போது, அவர்கள், திருமணத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் அனைத்து அடையாளங்களின் பொருளையும் உணர்ந்து போற்றுவதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும். திருமுழுக்குப் பெற்ற இருவரைப் பொறுத்தவரை, அவர்கள் வார்த்தையால் வெளிப்படுத்தும் சம்மதம், மற்றும், திருமணத்தின் தாம்பத்திய உறவு ஆகியவை, இறைமக்களுக்கும், திருஅவைக்கும் இடையே நிலவும் உடன்படிக்கையின் அன்பு மற்றும், ஒன்றிப்பை நிறைவுசெய்வதாக உள்ளது. திருமுழுக்குப் பெற்றவரில், வார்த்தைகளும் அடையாளங்களும் நம்பிக்கையின் சிறந்த மொழியாக மாறுகின்றன. கடவுளால் படைக்கப்பட்ட உடல், அருளடையாளத்தை நிறைவேற்றும் திருப்பணியாளரின் மொழியாக மாறுகிறது. (அன்பின் மகிழ்வு 212,213) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2021, 14:29