புது வாழ்வை நோக்கி தயாரித்தல் புது வாழ்வை நோக்கி தயாரித்தல்  

மகிழ்வின் மந்திரம் : தம்பதியருக்கு மேய்ப்புப்பணித் திட்டங்கள்

அர்ப்பணத்துடன் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ளவும், துன்பகரமான நேரங்களை இணைந்து சமாளிக்கவும், திருமண தயாரிப்பில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில், 'மண ஒப்பந்தம் ஆனவர்களை திருமணத்திற்கு தயாரித்தல்' என்ற பகுதியின் இறுதி இரு பத்திகளில் (210,211) வெளியிட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

ஏதாவது ஒரு சமயத்தில், தம்பதியருள் ஒருவரின் பலவீனம் மற்றவருக்குத் தெரிய வரும்போது, மற்றவரில் முழுமையாக நம்பிக்கைகொண்டு, அவரின் நல்ல குணங்களை ஊக்கப்படுத்தி, பலவீனங்களை மேற்கொள்ளவும், அவர் வளரவும் உதவவேண்டியது அவசியமாகிறது.  இத்தகைய முயற்சியில், உண்மையான தியாகமும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆபத்தின் அடையாளங்களைக் கண்டுகொண்டு, அதற்கு பதிலுரைக்கும் வழிகள் கண்டு கொள்ளப்படவேண்டும்.  ஒருவர் ஒருவரைப் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளாமலேயே, வெறுமனே சேர்ந்து இருப்பதோ, அல்லது இணைந்து சில விடயங்களை ஆற்றுவதோ பலன் தருவதில்லை. இங்குதான் திருமண தயாரிப்பு உதவுகிறது. அர்ப்பணத்துடன் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ளவும், துன்பகரமான நேரங்களை இணைந்து சமாளிக்கவும், திருமண தயாரிப்பில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது.

திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டவர், மற்றும், திருமணம் புரிந்த தம்பதியர்களுக்கு உதவும் மேய்ப்புப்பணித் திட்டங்கள் திருமண ஒப்பந்தத்தை மையம் கொண்டதாக, அவர்களின் அன்பை ஆழப்படுத்த மட்டுமல்ல, அவர்கள் ஒன்றிணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுவதாகவும் இருக்கவேண்டும். இந்த தயாரிப்பு முறை, தம்பதியர் திருஅவை படிப்பினைகளை ஏற்றுக்கொள்ள வைப்பதை மட்டும் உள்ளடக்கவில்லை, மாறாக, செயல்முறைத் திட்டங்கள், நல்ல ஆலோசனைஉளவியல் வழிகாட்டல்கள் போன்றவைகளையும் கொண்டுள்ளன. இது அன்பின் கற்பிக்கும் கலையை எதிர்நோக்குகிறது. இளம் வயதினரின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, அவர்கள் உள்மன அளவில் வளர உதவுவதாக இருக்கவேண்டும். பிரச்சனைகள் எழும்போது, யாரை எங்கு சந்திக்கவேண்டும், என்ன உதவிகள் கிட்டும் என்ற விவரங்கள் திருமண தயாரிப்பின்போது தம்பதியருக்கு வழங்கப்பட வேண்டும். ஒப்புரவு எனும் அருளடையாளத்தின் முக்கியத்துவமும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.(அன்பின் மகிழ்வு 210,211)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2021, 15:13