பிரான்சின் லூர்து அன்னை திருத்தலம் பிரான்சின் லூர்து அன்னை திருத்தலம்  

லூர்து அன்னை திருத்தலம் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை

லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஒவ்வொருநாளும், தீப ஒளி ஏந்திய மாலை பவனிக்குப்பின், இரவு 10.30 மணிக்கு, அன்னை மரியா காட்சி கொடுத்த குகைக்கு முன்பாக திருப்பலியும் இடம்பெறும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கோவிட் பெருந்தொற்றையொட்டி மூடப்பட்டிருந்த, பிரான்ஸ் நாட்டின், லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், ஜூலை 1ம் தேதி முதல், திருப்பயணிகளுக்கு திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இரவு செப ஊர்வலங்களும் வழிபாடுகளும் இடம்பெறும் என அறிவித்த அத்திருத்தல அதிபர், அருள்பணி Olivier Ribadeau Dumas அவர்கள், ஒவ்வொருநாளும், தீப ஒளி ஏந்திய மாலை பவனிக்குப்பின், இரவு 10.30 மணிக்கு, அன்னை மரியா காட்சி கொடுத்த குகைக்கு முன்பாக திருப்பலியும் இடம்பெறும் என அறிவித்தார்.

தினமும் இடம்பெறும் இந்த வழிபாடுகள் தவிர, வாரத்தின் ஒவ்வொரு வியாழன், வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில், மாலை 5மணிக்கு, புனித Bernadette Soubirous பற்றிய இசை நிகழ்ச்சி, திருப்பயணிகளுக்காக, இலவசமாக நடத்தப்படும் எனவும் அறிவித்தார் அருள்பணி Dumas.

சிறுமியாக இருந்த புனித பெர்னதெத்துக்கு, அன்னை மரியா, முதன்முறையாக, 1858ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ம் தேதி காட்சியளித்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

கோடைக்காலத்தின், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வழக்கமாக வரும் திருப்பயணிகளில், 60 விழுக்காட்டினர், அதிலும் குறிப்பாக, பிரான்ஸ் நாட்டவர்கள், இவ்வாண்டு வருவார்களென எதிர்பார்க்கப்படுவதாகவும், பல்வேறு நாடுகளில், தடுப்பூசித் திட்டங்கள் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து, இதில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அன்னைமரியா திருத்தலத்திற்கு வரலாம் என்பது கட்டாயப்படுத்தப்படமாட்டாது என்பதை தெளிவுபடுத்திய திருத்தல அதிபர், அருள்பணி Dumas அவர்கள், பெருந்தொற்று பரவலின் தாக்கம் இன்னும் இருப்பதால், மாலை செப ஊர்வலங்களில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2021, 13:55