கனடாவில் பழங்குடியினர் தங்கிப்பயின்ற பள்ளி இருந்த இடம் கனடாவில் பழங்குடியினர் தங்கிப்பயின்ற பள்ளி இருந்த இடம்  

பழங்குடியினரின் மன்னிப்பையும், ஒப்புரவையும் வேண்டி...

கனடா நாட்டுப் பழங்குடியினரின் மன்னிப்பைப் பெற்று, அவர்களோடு ஒப்புரவாகும் நோக்கத்துடன், அந்நாட்டு ஆயர் பேரவை, ஜூன் 21, இத்திங்களன்று, 'பழங்குடியின மக்களின் தேசிய நாளை' சிறப்பித்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கனடா நாட்டுப் பழங்குடியினரின் மன்னிப்பைப் பெற்று, அவர்களோடு ஒப்புரவாகும் நோக்கத்துடன், அந்நாட்டு ஆயர் பேரவை, ஜூன் 21, இத்திங்களன்று, 'பழங்குடியின மக்களின் தேசிய நாளை' சிறப்பித்தது.

ஐரோப்பிய கலாச்சாரத்தை, பழங்குடியினரின் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் நோக்கத்துடன், அவர்களை, குடும்பங்களிலிருந்து பிரித்து, பள்ளிகளில் தங்கவைத்து கல்விபுகட்டிய கத்தோலிக்கத் திருஅவை, அக்குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இழைத்த கொடுமைகளுக்காக, கனடா தலத்திருஅவை மன்னிப்பு கேட்டு, அம்மக்களுடன் ஒப்புரவாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று, கனடா ஆயர் பேரவை கூறியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள 'Kamloops பழங்குடியினர் தங்கிப்பயிலும் பள்ளி' ஒன்றில், 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பழங்குடியினரின் வாழ்வுமுறை, மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்ட முயற்சிகளுக்கு மன்னிப்பு கேட்டு இந்த ஒப்புரவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆழ்ந்த மனவேதனையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியால் பெரும் துயரடைந்துள்ள கனடா நாட்டு மக்களுடனும், அந்நாட்டு ஆயர்களுடனும் தன் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக, ஜூன் மாதத் துவக்கத்தில் வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையில் கூறினார்.

பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட 'Kamloops பழங்குடியினர் தங்கிப்பயிலும் பள்ளி', 1890ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டுவரை, கனடா கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்பட்டு, பின்னர், அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்டு, 1978ம் ஆண்டு மூடப்பட்டது.

1996ம் ஆண்டு துவங்கி, ஒவ்வோர் ஆண்டும், கோடைக்காலத்தின் முதல் நாள், பழங்குடியின மக்களின் தேசிய நாளை கனடா அரசு சிறப்பித்துவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2021, 15:11