காட்டுக்குள் மியான்மார் சிறுபான்மை இனத்தவரின் குடியிருப்புகள் காட்டுக்குள் மியான்மார் சிறுபான்மை இனத்தவரின் குடியிருப்புகள்  

மியான்மாரில் பல ஆயிரக்கணக்கானோர் பசியால் மடியும் ஆபத்து

மியான்மார் ஆயர்கள் : உணவுக்கும் பாதுகாப்புக்கும் உரிமையுடைய, இந்நாட்டின் குடிமக்களுக்கு உதவிகள் சென்றடைய வழிவகைகள் செய்துதரப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் பசியால் மடியும் ஆபத்திலிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மனிதாபிமான முறையில் உதவிகள் சென்றடைய வழி அமைத்துத் தரப்படவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளில், பல ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக முதியோரும், குழந்தைகளும், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, காடுகளில் தஞ்சம் புகுந்து, பட்டினிச் சாவை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உரைக்கும் ஆயர்கள், உணவுக்கும் பாதுகாப்புக்கும் உரிமையுடைய இந்நாட்டின் குடிமக்களாகிய அவர்களுக்கு உதவிகள் சென்றடைய வழிவகைகள் செய்துதரப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர், மியான்மார் ஆயர்கள்.

மியான்மார் நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ, பொதுச்செயலர், ஆயர் ohn Saw Yaw Han, மற்றும், ஏனைய 11 ஆயர்கள் இணைந்து கையெழுத்திட்டு, ஜூன் 11, இவ்வெள்ளியன்று வெளியிட்ட இந்த அறிக்கையில், மத வழிபாட்டுத் தலங்களின் புனிதத்துவம் மதிக்கப்படவேண்டும் என்ற, விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளனர்.

எவரும் போரின் வழியாக மியான்மார் நாட்டில் வெற்றியைக் கண்டதில்லை எனக்கூறும் ஆயர்கள், மோதல்களின்போது வழிப்பாட்டுத்தலங்களும், மருத்துவமனைகளும், கல்வி நிலையங்களும், புலம்பெயர்ந்தோருக்கான புகலிடங்களாக மாறுவதால், அவைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும் என, தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளோரைக் கேட்டுள்ளனர்.

மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு இறை உதவியைக் கோரும் நோக்கத்தில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இறைவேண்டல்களும், தினசரி திருநற்கருணை ஆராதனைகளும், செபமாலை பக்திமுயற்சிகளும் இடம்பெறவேண்டும் எனவும் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, காடுகளில் அடைக்கலம் தேடியுள்ள மக்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்ல முடியாதவகையில், பல்வேறு கட்டுப்பாடுகளும், சாலைத் தடுப்புகளும், இராணுவ அரசால் விதிக்கப்பட்டுள்ளதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் மடியும் ஆபத்து இருப்பதாக, மியான்மாரின் கத்தோலிக்க காரித்தாஸ் அதிகாரிகள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர். (UCAN)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2021, 15:11