வெனேசுவேலா நாட்டில் பெருந்தொற்று சூழ்ந்த பகுதியில் திருநற்கருணை பவனியை நடத்திய அருள்பணியாளர்கள் வெனேசுவேலா நாட்டில் பெருந்தொற்று சூழ்ந்த பகுதியில் திருநற்கருணை பவனியை நடத்திய அருள்பணியாளர்கள் 

கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும் இரத்தமும்: ஞாயிறு சிந்தனை

வழிபாடுகளுக்கு மூடப்பட்டுள்ள ஆலயங்கள், மக்களுக்கு வாழ்வளிக்கும் மருத்துவமனைகளாக மாறியுள்ளன என்ற நிலை, இன்று நாம் கொண்டாடும் திருநாளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும் இரத்தமும்: ஞாயிறு சிந்தனை

"சிற்றாலயங்களை வகுப்பறைகளாகப் பயன்படுத்த, பிலிப்பீன்ஸ் நாட்டு அருள்பணியாளர்களுக்கும் ஆயர்களுக்கும், அவசர வேண்டுகோள்" (Philippine bishops, priests urged to use chapels as classrooms) என்ற தலைப்பில், UCA என்ற கத்தோலிக்க நாளிதழ், 2015ம் ஆண்டு, ஜூன் மாதம், செய்தியொன்றை வெளியிட்டது. இத்தகைய ஒரு தலைப்பைக் கண்டதும், கோவில்களை வகுப்பறைகளாகப் பயன்படுத்துவதா? அது, கோவிலின் புனிதத்தைக் களங்கப்படுத்துமே என்ற தயக்கம் நமக்குள் எழுகிறது.

இந்தத் தயக்கம் எழுவதற்குக் காரணம், கோவிலும், வகுப்பறையும் இருவேறு உலகங்களைச் சார்ந்தவை என்ற அடிப்படை எண்ணம். இறைவனைச் சார்ந்த - இறைவனைச் சாராத இரு உலகங்கள், புனிதமான - புனிதமற்ற இரு உலகங்கள் என்று நமக்குள் நாமே வகுத்துக்கொண்ட பிரிவுகளால் உருவாகும் தயக்கம் இது. இத்தகையப் பிரிவுகள் தேவையற்றவை என்றும், இறைவனும், இவ்வுலகமும், இரண்டறக் கலக்கமுடியும் என்றும், சொல்லித்தரும் ஒரு திருநாள் - இன்று நாம் கொண்டாடும், ‘கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும் இரத்தமும்’ என்ற திருநாள்.

பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவில்களை வகுப்பறைகளாக மாற்றும் அவசர வேண்டுகோளை வழங்கியது, அந்நாட்டு ஆயர் பேரவையின் சமுதாயப் பணிக்குழு. ஒவ்வோர் ஆண்டும், பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கிவரும் மழை, புயல், வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால், நாட்டின் பல பள்ளிகள் சிதைந்துவிட்டச் சூழலில், ஓரளவு உறுதியாக நிற்கும் கோவில்களும், சிற்றாலயங்களும் வகுப்பறைகளாக மாறவேண்டும் என்ற பரிந்துரையை ஆயர் பேரவையின் சமுதாயப் பணிக்குழு, 2015ம் ஆண்டு முன்வைத்தது.

பள்ளிகளை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கோவில்களில் வகுப்பறைகள் நடத்தலாமா என்று, இயேசுவிடம் கேட்பதற்காக நாம் கோவிலுக்குச் சென்றால், அங்கு, இயேசு, ஏற்கனவே, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்துகொண்டிருப்பார், அது நிச்சயம்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும், இயற்கைப் பேரிடர்களாலும், போர்களாலும் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இழந்துள்ள சிரியா, பாலஸ்தீனா, நேபாளம், ஈராக், போன்ற பல நாடுகளில், ஆலயங்கள், பள்ளிகளாக, மருத்துவமனைகளாக மாறுவதை, இயேசு கட்டாயம் வரவேற்பார். கோவிலை வியாபாரச்சந்தையாக்கக்கூடாது என்பதில் தீவிர ஆர்வம் காட்டிய இயேசு, அதே கோவிலை, வகுப்பறையாக, மருத்துவமனையாக மாற்றுவதில், இன்னும் தீவிரமான ஆர்வம் காட்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வொரு ஆலயத்திலும் மிகப் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டு வருவது, கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலாக மாறும் திருநற்கருணை. ஆனால், அந்த திருநற்கருணை முதன்முதலாகத் தோன்றியது, ஒரு வீட்டின் மேலறையில். இயேசு, அப்பத்தை எடுத்து, அதை தன் உடலாக, திருநற்கருணையாக மாற்றிய முதல் திருப்பலியை, தன் நண்பர் ஒருவரது வீட்டின் மேலறையில் நிறைவேற்றினார் என்பதை, இன்றைய நற்செய்தியில் (மாற்கு 14:12-16,22-26) வாசிக்கிறோம்.

திருஅவையின் துவக்ககாலத்திலும், கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழும் இல்லங்களில் கூடிவந்து, இறைவார்த்தையையும், அப்பத்தையும் பகிர்ந்துகொண்டனர் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. அதிலும் குறிப்பாக, உரோமைய அரசால், கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட நேரங்களில், இரகசியமாக, இல்லங்களில் நடைபெற்ற இறைவார்த்தைப் பகிர்வு, மற்றும் அப்பத்தின் பகிர்வு, துவக்ககாலக் கிறிஸ்தவர்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்தது.

கடந்த 18 மாதங்களாக, துவக்ககாலக் கிறிஸ்தவர்களின் சூழலை ஏதோ ஒருவகையில் நாம் சந்தித்துவருகிறோம். கொடுங்கோலர்களால் நாம் வேட்டையாடப்படவில்லை என்பது உண்மை என்றாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம்மை வேட்டையாடி வருவதால், நாம் ஆலயங்களில் கூடிவர இயலாமல், இல்லங்களில் தங்கி, இறைவார்த்தையைக் கேட்பதற்கும், ஊடகங்கள் வழியே திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.

அதேவேளையில், வழிபாடுகளுக்கு மூடப்பட்டுள்ள ஆலயங்கள், மக்களுக்கு வாழ்வளிக்கும் மருத்துவமனைகளாக மாறியுள்ளன என்ற நிலை, இன்று நாம் கொண்டாடும் திருநாளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. நூறு ஆண்டுகளுக்குமுன் (1918) இஸ்பானிய பெருந்தொற்று இவ்வுலகை வதைத்துவந்த வேளையிலும், ஆலயங்கள் வழிபாடுகளுக்கு மூடப்பட்டன, ஆனால், நோயுற்றோருக்கு திறந்துவிடப்பட்ட மருத்துவமனைகளாக மாறின. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தவேளையில், ஜப்பானின், ஹிரோஷிமாவில், மருத்துவமனையாக மாறியிருந்த ஒரு கோவிலில்,  நிகழ்ந்த ஒரு திருப்பலி, இன்று நாம் சிறப்பிக்கும் திருவிழாவின் பொருளை உணர்த்தும் வாய்ப்பை வழங்குகிறது.

இறையடியாரான பேத்ரோ அருப்பே அவர்கள், இயேசு சபையின் அகில உலகத் தலைவராவதற்குமுன், ஜப்பானில் பணிபுரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில், அங்கு அவர், நவதுறவிகளுக்குப் பொறுப்பாளராக இருந்தார். 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தபோது, ஹிரோஷிமாவின் புறநகர் பகுதியில் இருந்த இயேசுசபை நவதுறவியர் இல்லத்தின் கதவு, சன்னல்கள் எல்லாம் உடைந்தாலும், கட்டடம் ஓரளவு உறுதியாய் நின்றது. அந்த இல்லம், ஒரு மருத்துவமனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவில், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அவ்வில்லத்தின் கோவிலில் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில், அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கரங்களை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, என்னை உறைந்துபோகச் செய்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கரங்கள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை, என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை, அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளை எழுதியுள்ளார்.

காயப்பட்டிருந்த மக்களுக்கு, காயப்பட்டக் கடவுளை பகிர்ந்துகொண்ட அந்தத் திருப்பலியைக் குறித்து இறையடியார் அருப்பே அவர்கள் கூறியிருப்பது, இன்றைய திருநாளின் இலக்கணத்தை நமக்கு உணர்த்துகிறது. ஆம், கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும் இரத்தமும் திருநாள், காயப்பட்ட மனுக்குலத்திற்கு, காயப்பட்டக் கடவுளைப் பகிர்ந்தளிக்கும் திருநாள்.

ஏனைய ஆண்டுகளைவிட, கடந்த ஆண்டும், இவ்வாண்டும், இவ்வுலகம் பெரிதும் காயப்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருநாளும் உணர்ந்துவருகிறோம். காயப்பட்டு கிடக்கும் மக்கள், திருப்பலிகள் வழியே, ஆறுதல் பெற இயலாமல், பல நாடுகளில், திருப்பலிகளில் மக்கள் பங்கேற்பு தடைசெய்யப்பட்டுள்ளது.

இத்தகையச் சூழலில், ஆலயங்களுக்குச் சென்று கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர முடியாத மக்களைத்தேடி ஆண்டவர் வருகிறார் என்பதை உணர்த்தும்வண்ணம், மக்கள்  வாழும் இடங்களுக்கு, அருள்பணியாளர்கள், திருநற்கருணையை, ஏந்திச் சென்றுள்ளனர். மருத்துவமனைகளில், சிறைகளில், மக்கள் வாழும் பகுதிகளில், திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக, பெருந்தொற்றினால் நோயுற்று கிடந்தோருக்கு திருநற்கருணை வழங்கியுள்ளனர். இப்பணியில் ஈடுபட்ட பல அருள்பணியாளரும், துறவியரும்,  தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

பெருந்தொற்றை காரணம் காட்டி, வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன, கல்விக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன; ஆனால், அரசியல் விழாக்கள், வர்த்தக முயற்சிகள், விளையாட்டுக்கள் நடந்தவண்ணம் உள்ளன. பெருந்தொற்றை காரணம்காட்டி, ஆண்டவனை இவ்வுலகிலிருந்து அகற்றிவிட்டு, தங்களையே கடவுளாக மாற்றமுயலும் அரசியல் தலைவர்கள் தோன்றியுள்ளனர்.

இவ்வேளையில், நாம் கொண்டாடும் திருநற்கருணைத் திருநாள், இவ்வுலகிலிருந்து, மனித குடும்பத்திடமிருந்து, இறைவனை அகற்றமுடியாது என்பதை, நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது. இந்த எண்ணத்தை நம் உள்ளங்களில் ஆழப்பதிக்க, புனித அன்னை தெரேசா அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு உதவியாக இருக்கும்.

அல்பேனியா நாட்டில், கம்யூனிசக் கொள்கைகளையும், கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் திணித்து, 40 ஆண்டுகளுக்கும் மேல் (1944-1985) ஆட்சி செய்தவர், Enver Halil Hoxha. அதே அல்பேனியாவில் பிறந்து, இந்தியாவில் பணியாற்றி, உலகப் புகழ்பெற்ற புனித அன்னை தெரேசா அவர்களை, தலைவர் Hoxha அவர்கள், 1985ம் ஆண்டு, அல்பேனியாவிற்கு வரும்படி அழைத்தார். அன்னையும் அவ்வழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

அன்னைக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், பல்வேறு நாட்டுத் தலைவர்களும், தூதர்களும், மக்களும் கூடியிருந்த வேளையில், தலைவர் Hoxha அவர்கள், அன்னையின் அற்புதப் பணிகளைப் பாராட்டிப் பேசினார். தன் உரையின் இறுதியில், அவர், அன்னையைப் பார்த்து, "நான் இந்த நாட்டிற்குப் பொறுப்பாக இருக்கும்வரை, கிறிஸ்துவை, மீண்டும் இந்த நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன்" என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டு அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் உரையாற்றிய அன்னைத் தெரேசா அவர்கள், "அரசுத் தலைவரே, கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் தற்போது சொன்ன சூளரை தவறானது" என்று தன் உரையைத் துவக்கினார். தொடர்ந்து, அன்னை, அங்கு பேசியது இதுதான்: "கிறிஸ்துவின் அன்பை நான் என் தாயகத்திற்குக் கொணர்ந்துள்ளேன். அது மட்டுமல்ல; கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னத்தை நான் உங்கள் அரசுமாளிகைக்குள் இப்போது கொணர்ந்துள்ளேன். இறக்கும் நிலையில் இருப்போர் நடுவில் நான் பணிசெய்ய வேண்டியிருப்பதால், கிறிஸ்துவின் உடலாக மாறியுள்ள திருநற்கருணையை நான் எப்போதும் ஒரு சிறு குப்பியில் வைத்து என்னுடன் சுமந்துசெல்கிறேன். கத்தோலிக்கத் திருஅவை, எனக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இன்று, இங்கே, இதோ, என் இதயத்தருகே உள்ள ஒரு சிறு பையில் நான் கொணர்ந்துள்ள திருநற்கருணை வழியாக, கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னம் இந்த மாளிகைக்குள், உங்கள் அனுமதியின்றி நுழைந்துவிட்டது" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். 1992ம் ஆண்டு, அல்பேனியாவில் கம்யூனிச ஆட்சி முடிந்து, மத உரிமையை வழங்கும் குடியரசு மலர்ந்தது.

நாம், இறைவனை, இவ்வுலகிலிருந்து அகற்றி, கோவில்களில் பூட்டிவைத்தாலும் சரி; கடவுள் மறுப்பு போன்ற தவறான கொள்கைகளால், ஆண்டவனுக்கு இவ்வுலகில் இடமில்லை என்று அரசுத்தலைவர்கள் அகந்தைகொண்டு பறைசாற்றினாலும் சரி; ஆண்டவன் மனம் தளரப்போவதில்லை. வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், தன் அன்புப் பிரசன்னத்தை அகிலமெங்கும் நிலைநாட்டும் முயற்சியில், ஆண்டவன் சலிப்படையப் போவதே இல்லை!

தடைகளை வென்று தன்னை நிலைநாட்ட இறைவன் மேற்கொள்ளும் இந்த முயற்சி, யார் வலியவர் என்பதை நிரூபிக்க மேற்கொள்ளப்படும் பலப் பரீட்சை அல்ல! மாறாக, தன்னைத் தேடிவரும் வலுவற்றோரை உறுதிப்படுத்த, இறைவன் வழங்கும் கொடையே, அவரது தூய்மைமிகு உடலையும், இரத்தத்தையும் பகிர்நதளிக்கும் திருவிருந்து.

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் நிலைநாட்டிய, இன்றும் நிலைநாட்டிவரும் தியாக உள்ளங்கள், இந்தப் பெருவிழாவின் உண்மைப் பொருளை, நமக்கு, தொடர்ந்து உணர்த்திவருகின்றனர். நம்முடன் இறைமகன் என்றும் வாழ்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை, அவருக்காக அர்ப்பணித்து வருகின்றனர்.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும், மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்வதற்கு, கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும், இரத்தமும் என்ற பெருவிழா நமக்கு உதவுவதாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2021, 14:25