ஆண்டவரின் திருவிருந்து ஆண்டவரின் திருவிருந்து 

மகிழ்வின் மந்திரம் - ஒரே உடலாகச் செயல்பட அழைக்கும் திருநற்கருணை

இயேசுவின் தூய்மைமிகு உடலையும், இரத்தத்தையும் அணுகிச்செல்வோர், தங்கள் செயல்கள் வழியே, அவ்வுடலைக் காயப்படுத்தாதிருக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், “உடல்பற்றிய தெளிவுபெறுதல்”, என்ற பகுதியில், திருஅவை எனும் மறையுடல் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ளல் என்பதை 185, மற்றும், 186ம் பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு விளக்கிக் கூறியுள்ளார்:

உடல்பற்றிய தெளிவுபெறுதலைப் பற்றிப்பேசும் விவிலியப் பகுதியை சிந்திப்போம். அதாவது, சமுதாயத்தின் வெட்கத்திற்குரிய ஒரு செயலை புனித பவுல் எவ்வாறு எதிர்கொண்டார் என்று அவரது திருமடலில் (1 கொரி 11:17-34), கூறப்பட்டுள்ளதைப்பற்றி இங்கு பேச விழைகிறேன். திருஅவை அங்கத்தினர்கள் ஆண்டவரின் திருவிருந்துக்கென ஒன்றாகக் கூடிவரும்போது, செல்வந்தர்கள், ஏழைகளை பாகுபாட்டுடன் நடத்தியது பற்றிக் கவலையுடன் எடுத்துரைக்கும்போது, புனித பவுல், 'சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருஅவையை இழிவுப்படுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?  (1 கொரி 11:21-22) என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

திருஅவை எனும் ஒரே உடலின் அங்கத்தினர்களாகச் செயல்பட, திருநற்கருணை, நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் தூய்மைமிகு உடலையும், இரத்தத்தையும் அணுகிச்செல்வோர், தங்கள் பாகுபாட்டு எண்ணங்கள், மற்றும் பிரிவினைகள் வழியாக அதன் அங்கத்தினர்களிடையே இகழ்ச்சிக்குரிய எடுத்துக்காட்டுகளை உருவாக்கி, அதே உடலைக் காயப்படுத்தாதிருக்க வேண்டும். இதுவே, ஆண்டவரின் உடல் குறித்து,  அருளடையாளங்களிலும், சமுதாயத்திலும், விசுவாசம் மற்றும் பிறரன்போடு ஏற்று, தெளிவடைதல் ஆகும். ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார் (1 கொரி 11:29). எனவே, திருநற்கருணைக் கொண்டாட்டம் என்பது, ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே, இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகவேண்டும் என்ற அழைப்பை தொடர்ந்து முன்வைக்கிறது (1 கொரி 11:28). இந்த குடும்பக் கதவுகளைத் திறந்து, ஏழை எளியோரை, தோழமையில் வரவேற்பதும், திருநற்கருணை அன்பு எனும் அருளடையாளத்தைப் பெறுவதும், நம்மை ஒரே குடும்பமாக மாற்றுகிறது.  அருளடையாளத்தின் பேருண்மை, தன்னுள் சமூகத்தன்மையையும் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏழைகள், மற்றும் துயருறுவோர் குறித்து அக்கறையின்றியும், அனைத்துவகையான பிரிவினைகள், அவமதிப்புகள், சரிநிகரற்ற நிலைகள் போன்றவைகளுக்கு இசைவளித்தும், செயல்படும் ஒருவர், திருநற்கருணையைப் பெறும்போது, அதைப் பெறுவதற்குரிய தகுதியற்ற நிலையிலேயே பெறுகிறார். அதற்கு மாறாக, பிறரைக்குறித்து திறந்தமனம் கொண்டவர்களாய், திருநற்கருணையைப் பெறும் குடும்பங்கள், உடன்பிறந்த நிலை குறித்த தங்கள் ஆவலையும், சமுதாய விழிப்புணர்வையும், உதவித் தேவைப்படுவோருக்கான தங்கள் அர்ப்பணத்தையும் உறுதிபெற செய்கின்றனர். (அன்பின் மகிழ்வு 185,186)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2021, 14:18