இந்தோனேசிய கர்தினால் இக்னேசியஸ் சுஹார்யோ இந்தோனேசிய கர்தினால் இக்னேசியஸ் சுஹார்யோ  

பஞ்சசீலக் கொள்கைகள் – இந்தோனேசிய கர்தினால் செய்தி

கடவுள் நம்பிக்கை, மனிதாபிமானம், ஒற்றுமை, மக்களாட்சி, மற்றும் சமுதாய நீதி ஆகிய ஐந்து கொள்கைகளை முழுமையாக வாழும் இந்தோனேசிய மக்கள், உலகிற்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பர் - கர்தினால் சுஹார்யோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில், இஸ்லாமியர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள இந்தோனேசியா நாட்டில், பஞ்சசீல கொள்கைகளின் அடிப்படையில், மதசார்பற்ற ஒரு கருத்தியலைக் கொண்டு, ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வளர்க்கவேண்டுமென்று, அந்நாட்டு கர்தினால் இக்னேசியஸ் சுஹார்யோ (Ignatius Suharyo Hardjoatmodjo) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவில் வாழும் பல்வேறு இனத்தவர், மதத்தினர் நடுவே ஒருமைப்பாட்டை உருவாகும் நோக்கத்துடன், அந்நாட்டின் முதல் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகார்னோ (Sukarno) அவர்கள், 1949ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அறிமுகப்படுத்திய பஞ்சசீலக் கொள்கையை நினைவுறுத்தும் வண்ணம், கர்தினால் சுஹார்யோ அவர்கள் இந்த அழைப்பை விடுத்தார்.

பஞ்சசீலக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் 76ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டதையொட்டி, காணொளிச் செய்தியொன்றை வெளியிட்ட கர்தினால் சுஹார்யோ அவர்கள், ஒரே இறைவனில் நம்பிக்கை கொண்ட மக்கள், நீதியும், ஒற்றுமையும் நிலவும் நாட்டை உருவாக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

கடவுள் நம்பிக்கை, மனிதாபிமானம், ஒற்றுமை, மக்களாட்சி, மற்றும் சமுதாய நீதி ஆகிய ஐந்து கொள்கைகளை முழுமையாக வாழும் இந்தோனேசிய மக்கள், உலகிற்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பர் என்று, கர்தினால் சுஹார்யோ அவர்கள், தன் காணொளிச் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தோனேசிய கலாச்சாரத்திற்கே உரிய பஞ்சசீலக் கொள்கைகள், இளையோரின் உள்ளங்களின் ஆழமாகப் பதிவதற்கு, இக்கொள்கைகள், பள்ளி, மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் முக்கிய இடம் பெறவேண்டும் என்று, கர்தினால் சுஹார்யோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2021, 14:55