இத்தாலிய ஆயர் பேரவையின் 74வது ஆண்டு கூட்டம் இத்தாலிய ஆயர் பேரவையின் 74வது ஆண்டு கூட்டம் 

இத்தாலிய ஆயர் பேரவையின் 1,50,00,000 யூரோக்கள் நிதி உதவி

ஆசிய கண்டத்தில், மியான்மார், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், நலவாழ்வுப் பணிகள், மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய பணிகள், குடியிருப்பு வசதிகள் ஆகிய திட்டங்களுக்கு இத்தாலிய ஆயர்களின் நிதி உதவி வழங்கப்படுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பயிற்சி வழங்குதல், வேலை வாய்ப்பு, நலவாழ்வு என்ற மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட 81 செயல்திட்டங்களுக்கு, இத்தாலிய ஆயர் பேரவை நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

மே 25ம் தேதி முதல், 27ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற இத்தாலிய ஆயர் பேரவையின் 74வது ஆண்டு கூட்டத்தில், வறுமைப்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்படும் பிறரன்பு முயற்சிகளுக்கு 1 கோடியே 50 இலட்சம் யூரோக்கள் நிதி உதவி வழங்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி உதவியில், 70 இலட்சம் யூரோக்கள், ஆப்ரிக்க நாடுகளுக்கும், மீதமுள்ள 80 இலட்சம் யூரோக்கள், இலத்தீன் அமேரிக்கா, ஆசியா, மத்தியக் கிழக்கு, மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் பிரித்து வழங்கப்படும் என்று, இத்தாலிய ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்காவில் நிலவும் உணவுப்பற்றாக்குறையைத் தீர்க்கவும், அங்கிருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்க, வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கவும், இத்தாலிய ஆயர் பேரவையின் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மனித வர்த்தகத்தைத் தடுக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும், சிறைவாழ்வை நிறைவு செய்து வெளியேறும் முன்னாள் கைதிகள், மீண்டும் சமுதாயத்தில் இணைக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும், நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆசிய கண்டத்தில், மியான்மார், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், நலவாழ்வுப் பணிகள், மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய பணிகள், குடியிருப்பு வசதிகள் ஆகிய திட்டங்களுக்கு இத்தாலிய ஆயர்களின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மத்தியக் கிழக்குப் பகுதியில், சிரியா, மற்றும் பாலஸ்தீனியாவிலிருந்து, லெபனான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர் வாழும் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில், உணவு, சமுதாயப் பாதுகாப்பு, ஆகிய முயற்சிகளுக்கு, இத்தாலிய ஆயர் பேரவையின் நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2021, 15:03