சமுதாயப் பிரச்சனைகளைக் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் குடும்பத்தினர் சமுதாயப் பிரச்சனைகளைக் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் குடும்பத்தினர் 

மகிழ்வின் மந்திரம் : சமுதாயத்தில் அன்பு முத்திரை பதிக்க...

ஒவ்வொரு குடும்பமும், சமுதாயம் என்ற குடும்பத்தின்மீது தன் அன்பு முத்திரையைப் பதிப்பதன் வழியாகவும், கனிநிறை பண்பை விரிவாக்கமுடியும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், குடும்பத்தில் நிலவும் அன்பு, எவ்வாறு, கனிகள் நிறைந்ததாய் திகழமுடியும் (Love Made Fruitful) என்பதை விளக்கிக்கூறியுள்ளார். கருவுற்றிருக்கும் காலம், புதிய உயிரை வரவேற்கும் காலம், அந்த உயிரைப் பேணிக்காப்பதில் தாயும், தந்தையும் காட்டும் தனிப்பட்ட அன்பு ஆகிய எண்ணங்களை, இப்பிரிவின் முதல் பகுதியில் பகிர்ந்துகொள்ளும் திருத்தந்தை, அடுத்ததாக, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், எவ்வாறு தங்கள் அன்பை கனிகள் நிறைந்ததாக மாற்றமுடியும் என்பது குறித்து சிந்திக்கிறார்.

'கனிநிறைப் பண்பை விரிவாக்குதல்' (An Expanding Fruitfulness) என்ற கருத்தில் எழுதப்பட்டுள்ள இப்பகுதியில், குழந்தைகள் பெற இயலாதவர்கள், குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதுபற்றி முதலில் (எண்கள் 178,179,180) குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்து, ஒரு குடும்பம், இவ்வுலகம் சார்ந்த விடயங்களில் இன்னும் அதிகமாக ஈடுபடுவதன் வழியே, கனிநிறைப் பண்பை, இன்னும் விரிவாக்கமுடியும் என்ற எண்ணத்தை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:

"குழந்தையைப் பெறுதல், தத்தெடுத்து வளர்த்தல் என்ற இருவழிகள் மட்டுமே, 'கனிநிறைப் பண்பை விரிவாக்கும்' வழிகள் அல்ல. ஒவ்வொரு குடும்பமும், சமுதாயம் என்ற குடும்பத்தின்மீது தன் அன்பு முத்திரையைப் பதிப்பதன் வழியாகவும், கனிநிறை பண்பை விரிவாக்கமுடியும். நமது கிறிஸ்தவ நம்பிக்கை, நம்மை, உலகினின்று அகற்றுவது கிடையாது; மாறாக, இவ்வுலகுடன் நம்மை இணைப்பதற்கு உதவுகிறது என்பதை, கிறிஸ்தவ குடும்பங்கள் மறந்துவிடக்கூடாது. சமுதாயத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் புகலிடமாக குடும்பங்களைக் கருதக்கூடாது, மாறாக, சமுதாயத்தோடு இன்னும் அதிக ஈடுபாடு கொள்வதற்கு, குடும்பங்கள் உதவவேண்டும். திருமணமான தம்பதியர், தங்களது சமுதாயக் கடமைகளை, தெளிவாக உணரவேண்டும். இவ்வாறு, அவர்களிடையே நிலவும் அன்பு, சமுதாய ஈடுபாட்டின் வழியே, இன்னும் கூடுதலாக ஒளிவீசும்."  (அன்பின் மகிழ்வு 181)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2021, 13:38