குடும்பத்தினருக்கு ஆசி வழங்கும் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் - கோப்புப் படம் 2000 குடும்பத்தினருக்கு ஆசி வழங்கும் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் - கோப்புப் படம் 2000 

மகிழ்வின் மந்திரம் : வழங்குவதிலும், பெறுவதிலும், உண்மை அன்பு

"திருமண உறவில் ஒருவர் ஒருவருக்கு தங்களையே பரிசாக வழங்கவேண்டும். அது, ஒருவர் ஒருவருக்கு பணிந்திருப்பதை உள்ளடக்கியது" - புனித 2ம் யோவான் பவுல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில், குடும்பங்களில், வன்முறை என்ற கிருமி, பல வழிகளில் பரவியது என்பதை, பலரும் கூறி வருகின்றனர். முழு அடைப்பு காலத்தில் மட்டுமின்றி, பொதுவாகவே, திருமண வாழ்வில், வன்முறை, பல வடிவங்களில் நிலவுகிறது என்பதைப்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ‘அன்பின் மகிழ்வு’ திருத்தூது அறிவரை மடலில் கூறியுள்ள சில எண்ணங்களுக்கு செவிமடுப்போம்:

தாம்பத்திய உறவில் ஒருவரையொருவர் அடக்கியாளும் அனைத்து வடிவங்களும் நிராகரிக்கப்படவேண்டும். புனித பவுல் எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தில், "உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்" (எபே. 5:22) என்று பெண்களுக்குக் கூறியுள்ளதை தவறாகப் பொருள்கொள்ளக் கூடாது. அன்றைய கலாச்சாரச் சூழலை மனதில்கொண்டு சொல்லப்பட்ட கருத்து அது. அந்தக் கலாச்சாரப் பின்னணியைத் தாண்டி, அப்பகுதியின் முழுப்பொருளை புரிந்துகொள்ளவேண்டும். "மனைவியை, கணவன், தன் அடிமையாகவோ, வேலையாளாகவோ அடக்கியாள நினைக்கும் அனைத்து வடிவங்களையும், உண்மை அன்பு புறம்தள்ளுகிறது. திருமண உறவில் ஒருவர் ஒருவருக்கு தங்களையே பரிசாக வழங்கவேண்டும். அது, ஒருவர் ஒருவருக்கு பணிந்திருப்பதை உள்ளடக்கியது" என்று புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் விவேகமுடன் கூறியுள்ளார். எனவேதான், புனித பவுல் அதே பகுதியில், "கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்புசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்" (எபே. 5:28) என்று கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டாமல், மற்றவர்களைப்பற்றிய எண்ணங்கள் கொண்டிருக்கவேண்டும். இதை வலியுறுத்தவே, எபேசியர் திருமுகத்தில், இப்பகுதி, "கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்" (எபே. 5:21) என்ற சொற்களுடன் ஆரம்பமாகிறது. திருமணத்தில், ஒருவருக்கொருவர் பணிந்திருப்பது, உன்னதமான பொருள் கொண்டுள்ளது. தாம்பத்திய நட்பினால், ஒருவரையொருவர் நிறைவுசெய்யவேண்டும். (156)

"ஒருவர், தன் சொந்த விருப்பங்களை முற்றிலும் தியாகம்செய்து, அடுத்தவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது, திருமணத்தின் உன்னதக் குறிக்கோள் அல்ல. உண்மையான அன்பு, பிறருக்கு வழங்குவதிலும், பிறரிடமிருந்து பெறுவதிலும் அடங்கியுள்ளது. உடல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த, அணைத்தல், முத்தமிடுதல், பாலியல் உறவு என்ற வழிகளில், இந்த வழங்குதலும், பெறுதலும் வெளிப்படுகின்றன. மனிதர்கள், தங்கள் உடலைப் புறக்கணித்து, வெறும் ஆன்மா என்ற நிலையை அடைய முயல்வது, ஆன்மா, உடல் என்ற இரு கூறுகளின் மாண்பை இழக்கச்செய்யும். எனவே, அன்பை வழங்க விழைவோர், அதை, ஒரு பரிசாகப் பெறவும்வேண்டும்" என்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். (அன்பின் மகிழ்வு 156, 157)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2021, 13:52