சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Ignace Youssif Younan சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Ignace Youssif Younan 

சிரியாவிலிருந்து வெளியேறும் இளையோரால் கவலை

மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் இளையோர் பெருமளவு வெளியேறுதல், மற்றும், அங்கு நிலவும் கொடுமையான பொருளாதார நெருக்கடி ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி, அப்பகுதியின் ஆயர்கள் கூட்டம் ஒன்றை மேற்கொண்டனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் நிலவும் வேதனையான சூழலை, குறிப்பாக, அப்பகுதிகளில் வாழும் இளையோர் பெருமளவு வெளியேறுதல் மற்றும், அங்கு நிலவும் கொடுமையான பொருளாதார நெருக்கடி ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி, அப்பகுதியின் ஆயர்கள் கூட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மே 18, இச்செவ்வாய் முதல், 20, இவ்வியாழன் முடிய, சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலத்தீன் வழிபாட்டு முறை, மற்றும் சிரிய வழிபாட்டு முறையைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர்.

சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Ignace Youssif Younan, கிரேக்க மெலகத்திய கத்தோலிக்க முதுபெரும் தந்தை Youssef Absi ஆகிய இருவரும் தலைமையேற்று நடத்திய இக்கூட்டத்தில், சிரியா நாட்டின் திருப்பீடத் தூதர், கர்தினால் Mario Zenari அவர்களும் பங்கேற்றார்.

சிரியாவில் பணியாற்றிவரும் காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் தலத்திருஅவை அமைப்புக்கள், நாட்டின் மறுகட்டமைப்பை உருவாக்க மேற்கொள்ளக்கூடிய பணிகள், குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றின் விளைவுகளிலிருந்து மக்களைக் காக்கும் பணிகள் ஆகியவைகுறித்த கருத்துப்பரிமாற்றம் இச்சந்திப்பில் முக்கிய இடம்பெற்றன என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் இளையோரை தொடர்ந்து தங்கவைப்பதற்கு ஏற்ற வகையில், கல்வித் துறையிலும், வேலைவாய்ப்புத் துறையிலும் தீவிரத் திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்று, முதுபெரும் தந்தை Younan அவர்கள் இக்கூட்டத்தில் பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்தார்.

புனித யோசேப்பையும், குடும்பங்களையும் மையப்படுத்தி, கத்தோலிக்கத் திருஅவையில் நடைபெற்றுவரும் முயற்சிகளுடன், சிரியாவின் தலத்திருஅவை முயற்சிகளும் இணைந்து செல்லவேண்டும் என்று, கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.

டொனால்டு டிரம்ப் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராக இருந்தபோது, சிரியா நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடைகள், தற்போதைய அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் காலத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது என்ற கருத்து இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2021, 14:48