“நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ” (யோவான் 15:5) “நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ” (யோவான் 15:5) 

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை, ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள், இப்படி, ஒரே இடத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. பரந்து விரிந்த வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் தனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.

இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது. இலையுதிர் காலத்தில் ஒருநாள், மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை அதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. ஒரு பறவையைப்போல தானும் பறக்கமுடிகிறதே என்று, இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.

உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்கமுடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச்சென்றனர். இலைக்கு மூச்சுத்திணறியது.

கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப்பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருந்தபோது, இலைக்கு வாழ்வு. பிரிந்தபின், தாழ்வு, மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு: “நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.” (யோவான் 15:5)

இயேசு கூறும் இச்சொற்களை இன்றைய கோவிட் பெருந்தொற்றுச் சூழலில் கேட்கும்போது, 'இணைந்திருத்தல்' என்ற சொல், நம் உள்ளத்தில் முள்ளாகத் தைக்கிறது. 'விலகியிருத்தல்' என்ற சொல்லை, பல்லாயிரம் முறை கேட்டுக் கேட்டு, அச்சத்தில் வாழும் நாம், நேரடியாக, இறை சமுதாயமாக, இறைவனைச் சந்திக்க வழியின்றி, உறவுகளின் நேரடித் தொடர்பின்றி, விலகியிருக்கப் பழகிவருகிறோம். இத்தருணத்தில், இயேசு, தன்னுடன் 'இணைந்திருக்க' விடுக்கும் அழைப்பை, தகுந்தமுறையில் புரிந்துகொள்ள இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு உதவட்டும்.

நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவின் தலைசிறந்த பாணி என்று நமக்குத் தெரியும். ஆனால், தன் சொல்த்திறனை வெளிப்படுத்த, இயேசு, 'நானே' என்ற உருவகங்களைப் பயன்படுத்தவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எதிர்ப்புகள், குழப்பங்கள் என்று, கடினமானச் சூழல்களைச் சந்தித்த வேளையில், தான் எப்படிப்பட்டவர் என்ற உண்மை இயல்பை உணர்த்த, இயேசு, இந்த 'நானே' வாக்கியங்களைக் கூறினார்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடித்தளம் என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான், உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

மிகக் கொடிய சூழல்களில் நமது உண்மையான இயல்பு வெளிச்சத்திற்கு வரும் என்பதை, பின்வரும் நிகழ்வின் வழியே ஓரளவு புரிந்துகொள்ள முயல்வோம். இந்நிகழ்வை, செய்தியாளர் ஒருவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்:

“நான் பணிபுரியும் ஊரில் நடந்த அந்நிகழ்வு, பலரை வேதனையில் ஆழ்த்தியது. பேருந்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண், வேறொரு மனிதனால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். பேருந்தின் ஓட்டுனர், அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்றவேளையில், அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவ்விளம்பெண், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் இறந்தார்.

சில நாள்களுக்குப்பின், அப்பகுதியிலிருந்த பல்பொருள் அங்காடிக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, மற்றொருவர் அங்காடிக்குள் நுழைந்தார். கடையின் உரிமையாளர் என் நண்பர். அவர் என்னிடம், அம்மனிதரைச் சுட்டிக்காட்டி, "அவர்தான் இறந்த இளம்பெண்ணின் தந்தை" என்று சொன்னார். தன் மகளின் மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் தந்தை, தன் உணர்வுகளை இதப்படுத்த, தூக்க மாத்திரை போன்ற ஒரு மருந்தைத் தேடி, கடைக்கு வந்திருப்பார் என்று, நானாகவே நினைத்துக்கொண்டேன். ஆனால், அவரோ, கடையில், மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்லாமல், வாழ்த்து அட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்றது, எனக்கு வியப்பைத் தந்தது. "விரைவில் குணம் பெறுங்கள்" என்ற சொற்கள் அடங்கிய வாழ்த்து மடலை அவர் எடுத்துக்கொண்டு, பணம் செலுத்தவந்தார். அவரும், கடை உரிமையாளரின் நண்பரானதால், அவர், உரிமையாளரிடம், "என் மகளைக் காக்கப் போராடிய அந்த ஓட்டுனரை மருத்துவமனையில் காணச்செல்கிறேன்" என்று கூறியபடி, பணத்தைச் செலுத்தினார். அருகில் நின்று, இதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், அவரது உயர்ந்த உள்ளத்திற்கு, மனதார வணக்கம் செலுத்தினேன்.”

தன்னுடைய இழப்பு, வேதனை ஆகியவை நடுவிலும், மற்றொருவரின் வேதனையைத் துடைக்க நினைப்பது, ஒருவரின் உண்மை இயல்பை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

இயேசு பயன்படுத்திய 'நானே' வாக்கியங்கள், எத்தகைய கடினமானச் சூழல்களில் சொல்லப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வது, பயனுள்ள முயற்சி. "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. தன்னால் பார்வை பெற்ற ஒருவர், மதத்தலைவர்களால் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்பதை அறிந்ததும் ஒரு நல்லாயனாக, இயேசு அவரைத் தேடிச்சென்றார் என்பதை யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் வாசிக்கிறோம். அந்நிகழ்வைத் தொடர்நது, 10ம் பிரிவில் இயேசு, "நல்ல ஆயன் நானே" என்ற வார்த்தைகளைச் சொன்னார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கொடிகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இறுதி இரவுணவின்போது, இயேசு பகிர்ந்துகொண்டார். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை, ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கொடிகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை, அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக, இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. “என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.” (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு தெளிவாகக்கூறியுள்ளார்.

உயிர்ப்புக்குப்பின், இயேசு என்ற செடியைச் சுற்றி, சீடர்களும், அவர்களால் ஈர்க்கப்பட்ட மக்களும், கொடிகளாக, படர்ந்து வளர்ந்துவந்த வேளையில், அந்தச் செடியையும், கொடிகளையும் வேரோடு அழிக்கப் புறப்பட்டவர், சவுல் என்ற இளைஞர். அந்த இளைஞரை, தமஸ்கு செல்லும் வழியில் தடுத்தாட்கொண்ட இயேசு, அவரை, தனிச்சிறப்பு மிக்க கொடியாக தன்னுடன் இணைத்துக்கொண்டார். கொடியாக இணைந்த சவுல், சீடர்களிடமும், அதைத் தொடர்ந்து, எருசலேம் நகர் மக்களிடமும் சந்தித்தத் துன்பங்களை, இன்றைய முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 9 26-31) தெளிவாக்குகிறது. அச்சம், கொலைமுயற்சி என்ற பாணியில் பேசும் இந்த முதல் வாசகம், இறுதியில் நம்பிக்கை தரும் சொற்களுடன் நிறைவடைகிறது: யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது. (தி.ப. 9:31)

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க, மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, ‘மையச் சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் திருகாணி’ என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.

ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்கவேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.

ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு, இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியிருக்கும்.

இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.

இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.

இறுதியாக, ஒரு சிறப்பான வேண்டுதல்... உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. மே மாதத்தின் முதல் நாளான இச்சனிக்கிழமை, உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பக்தி முயற்சியை துவக்கி வைத்துள்ளார். மீண்டும் அவர், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை நிறைவு செய்துவைப்பார்.

தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலம், மெக்சிக்கோவின் குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலம்  உட்பட, உலகின் அனைத்து கண்டங்களின் முப்பது திருத்தலங்களில், இந்த பக்தி முயற்சி இணைந்து நடக்கிறது. அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உலகளாவிய பக்தி முயற்சியில், நாமும், குடும்பமாக இணைந்து, நம்மைச் சூழ்ந்துள்ள பெருந்தொற்று நீங்கவேண்டுமென்று உருக்கமாகச் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2021, 14:45