புனித திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் புனித திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ்  

திருத்தந்தையர் வரலாறு - நேர்மையின் மறு பெயர், நிக்கோலாஸ்

மிகவும் நேர்மையானவராக, எதற்கும் வளைந்து கொடுக்காதவராக இருந்த திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ், உரோம் குடிமக்களால் மிகப்பெரிய அளவில் மதிக்கப்பட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

Saracens என்ற கடல்கொள்ளை கும்பல் உரோம் நகரைத் தாக்கி கிறிஸ்தவக் கோவில்களைச் சேதப்படுத்தி கொள்ளையடித்த காலக்கட்டத்தில், நகரின் பாதுகாப்பு குறித்த அச்சம் எங்கும் நிலவிக்கொண்டிருக்க, திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸுக்குப்பின், திருஅவை அதிகாரிகள், மற்றும், மக்களின் ஒருமித்த குரலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார், திருத்தந்தை 4ம் லியோ. இவர் பதவிக்கு வந்தவுடன் உரோம் நகர் பாதுகாப்புச் சுவர்களை பலப்படுத்தினார். பாதுகாப்புச் சுவர்களில் 15 கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்தார். இவை தவிர, வத்திக்கான் குன்றைச் சுற்றியும், ஒரு பெருஞ்சுவரைக் கட்ட, பேரரசரிடமிருந்து நிதியுதவி பெற்றார். இத்தகைய பாதுகாப்பு சீரமைப்புப் பணிகள் நிறைவடைய, நான்கு ஆண்டுகள் எடுத்தன. கி.பி.847ம் ஆண்டு பதவிக்கு வந்த திருத்தந்தை 4ம் லியோ, 852ல் இப்பாதுகாப்புச் சுவர்களை ஆசீர்வதித்து, அதனை ஒரு திருவிழாவாக விசுவாசிகளோடு இணைந்து கொண்டாடினார்.

853ம் ஆண்டு உரோம் நகரில் முக்கியத்துவம் நிறைந்த ஆயர் மாநாட்டைக் கூட்டிய திருத்தந்தை 4ம் லியோ அவர்கள், திருஅவை அதிகாரிகளின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள், மற்றும், கல்வி ஞானத்தை மேம்படுத்தப்படுவதற்கு சில புதிய விதிகளை நிறைவேற்றினார். திருத்தந்தை 4ம் லியோவின் காலத்தில் ரவென்னா பேராயர் உட்பட சில ஆயர்கள் திருஅவைக்கு எதிராகச் சென்றதும் நடந்தது. 855ம் ஆண்டு இறந்து ஜுலை 17ம் தேதி புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார், திருத்தந்தை 4ம் லியோ. இவர் புதுமைகள் பல ஆற்றியுள்ளார் என இவர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

திருத்தந்தை மூன்றாம் பெனடிக்ட்

திருத்தந்தை 4ம் லியோக்குப்பின் பதவிக்கு வந்தார், திருத்தந்தை மூன்றாம் பெனடிக்ட். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பல்வேறு குழப்பங்கள் இடம்பெற்றன. முந்தைய திருத்தந்தை 4ம் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பேரரசரின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னரே இவர் முடிசூட்டிக் கொண்டார். ஆனால், திருத்தந்தை மூன்றாம் பெனடிக்டோ, பேரரசர்கள் Lothaire, மற்றும், லூயிஸின் ஒப்புதலைப் பெற்றுவர பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்பினார். ஏற்கெனவே, திருத்தந்தை 4ம் லியோவுக்கு எதிராக சில ஆயர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டது பற்றி குறிப்பிட்டிருந்தோம். அக்காலக்கட்டத்தில் அத்தனாசியுஸ் என்ற கர்தினால், திருத்தந்தை 4ம் லியோவால் திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தார். பேரரசர்களின் ஒப்புதலைப் பெற, புதிய திருத்தந்தை அனுப்பிய குழுவோ, வழியிலேயே கர்தினால் அத்தனாசியுஸின் ஆதரவாளர்கள், மற்றும் பேரரசின் பிரதிநிதியால் மனம் மாற்றப்பட்டு, கர்தினாலுக்கு ஆதரவாக பேசவைக்கப்பட்டது. இச்சூழலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருத்தந்தை 3ம் பெனடிக்ட் அவமானப்படுத்தப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். ஆனால் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களும் விசுவாசிகளும் கொதித்தெழுந்ததால், பேரரசரின் பிரதிநிதியால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் ஜுலையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மூன்றாம் பெனடிக்ட், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். பெருஞ்சதிகளில் ஈடுபட்ட கர்தினால் அத்தனாசியுஸ் தண்டிக்கப்பட வேண்டும் என ஆயர் பேரவை முடிவெடுத்தபோதிலும், அவரை மன்னித்து பொதுநிலையினர் குழுவில் ஏற்றுக்கொண்டார், திருத்தந்தை மூன்றாம் பெனடிக்ட். 846ம் ஆண்டு கடற்கொள்ளை கும்பலால் சேதமாக்கப்பட்ட உரோம் கோவில்களை, தன் பாப்பிறை பதவி காலத்தின்போது சீரமைத்தார், இத்திருத்தந்தை. ஏறத்தாழ 3 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய இவர், 858ம் ஆண்டு காலமானார்.

திருத்தந்தை புனித முதலாம் நிக்கோலாஸ்

திருத்தந்தை மூன்றாம் பெனடிக்ட்க்குப்பின் பதவிக்கு வந்தவர், மத்திய காலத்தின் மிகப்பெரும் திருத்தந்தையர்களுள் ஒருவரான புனித முதலாம் நிக்கோலாஸ். அக்காலத்தைய வரலாற்று நிகழ்வுகளிலும், மேற்கு ஐரொப்பாவின் கிறிஸ்தவ நாடுகளிலும் குறிப்பிடத்தக்க ஆளுமையைக் கொண்டிருந்தார் இத்திருத்தந்தை. பக்தியிலும், தாராள மனத்திலும், திறமையிலும், ஞானத்திலும், பேச்சுத்திறமையிலும் சிறந்து விளங்கிய இவர், இளம் வயதிலேயே திருஅவை பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். திருத்தந்தை மூன்றாம் பெனடிக்ட் இறந்தபோது, பேரரசர் இரண்டாம் லூயிஸ் உரோமைக்கு அருகாமையில்தான் இருந்தார். அவரும் திருத்தந்தையின் தேர்வுக்கு வந்திருந்தார். தனக்கு வேண்டியவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தார் பேரரசர். ஆனால் திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதேநாளில் பேரரசரின் முன்னிலையில் முடிசூட்டப்பட்டார். மூன்று நாட்களுக்குப்பின் திருத்தந்தையிடமிருந்து விடைபெற்றார், பேரரசர் இரண்டாம் லூயிஸ்.

இத்திருத்தந்தை பதவியேற்ற காலத்தில் திருத்தந்தையின் அதிகாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. வெளி ஆட்சியாளர்களிடமிருந்தும், உலக ஆசை நிரம்பிய சில ஆயர்களாலும் இந்த அச்சுறுத்தல் பூதகரமாக உருவெடுத்தது. ரவென்னாவின் பேராயர் ஜான் வன்முறையைக் கைக்கொண்டு, பணத்துக்காக தன் கீழேயுள்ள ஆயர்களை அநீதியாக நடத்தினார். பல அருள்பணியாளர்களைச் சிறையிலடைத்தார். திருப்பீட பிரதிநிதிகளை அவமானப்படுத்தினார். தன்னை வந்து சந்திக்கும்படி திருத்தந்தை மும்முறை அழைத்தும் பேராயர் ஜான் வராததால் அவர் திருஅவையிலிருந்தே விலக்கிவைக்கப்பட்டார். பின்னர் பேரரசர் லூயிஸின் தலையீட்டின்பேரில், திருத்தந்தையின் முன்னிலையில் மும்முறை வந்தும், அவர் கீழ்ப்படிய மறுத்தார். இந்நிலையில், Lothaire மன்னர் தன் மனைவியை விலக்கிவைத்து வேறு ஒருவரை திருமணம்புரிய முயன்றார். அவர் பகுதியின் ஆயர்களும் திருஅவை சட்டங்களுக்கு எதிராக இதற்கு இசைவு அளித்தனர். ஆனால் திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் இதனை எதிர்த்ததுடன், திருஅவை விதிகளுக்கு எதிராகச் சென்ற ஆயர்களை பதவி நீக்கம் செய்தார். இதனால் கோபம் கொண்ட பேரரசர் Lothaire,  தன் படைகளுடன் உரோம் நகரை முற்றுகையிட்டு புனித பேதுரு பெருங்கோவிலிருந்து திருத்தந்தையை வெளியே வரவிடாமல் செய்தார். இரண்டு நாட்கள் அவர் உணவின்றி படடினிகிடந்தார். இருப்பினும், திருத்தந்தை, திருஅவையின் நன்னெறிப் போதனைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில் அவரின் கொள்கையே வென்றது. பேரரசர் Lothaire, திருத்தந்தையுடன் ஒப்புரவாகி அவரை விடுவித்தார். இன்னொரு அரச குடும்பத்து திருமணத்திலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோது திருத்தந்தை நியாயத்தின் பக்கமே நின்றார். அதாவது, பேரரசர் Charles the Baldன் மகள் ஜூடித், தனக்கு விருப்பமான ஒருவரை தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் புரிந்தபோது, பிரான்ஸ் நாட்டு ஆயர்களோ, பேரரசருக்கு ஆதரவாக நின்று மகள் ஜூடித்தை திருஅவையிலிருந்து விலக்கி வைத்தனர். திருத்தந்தையோ அதனை கண்டித்ததுடன், திருமண சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

பல்வேறு வழக்குகளில் திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ், திருஅவை போதனைகளை வலியுறுத்தி அதற்கு ஆதரவாகவே எப்போதும் நின்றது குறிப்பிடத்தக்கது. மிகவும் நேர்மையானவராக, எதற்கும் வளைந்து கொடுக்காதவராக இருந்த திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ், கி.பி.867ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி இறைபதம் அடைந்தார். புனித பெரிய நிக்கோலாஸ் என்றும் அழைக்கப்படும் இத்திருத்தந்தை, உரோம் குடிமக்களால் மிகப்பெரிய அளவில் மதிக்கப்பட்டார் என வரலாறு கூறுகிறது.

வரும் வாரம் திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியன் குறித்து நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2021, 14:32