அங்கோலாவில் மறைக்கல்வி ஆசிரியர்கள் விழா அங்கோலாவில் மறைக்கல்வி ஆசிரியர்கள் விழா 

200ம் ஆண்டை நோக்கி பாப்பிறை மறைப்பணி கழகம்

பாப்பிறை மறைப்பணி கழகம், இன்று 130 நாடுகளில், 3,54,000 மறைப்பணியாளர்கள், 30 இலட்சம் மறைக்கல்வி ஆசிரியர்கள் உதவியுடன், சமுதாய, மறைப்பணித் திட்டங்களில் செயலாற்றி வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி அறிவிப்புப்பணி என்று தற்போது கூறப்படும் விசுவாசப் பரப்புதல் பணிகளுக்கென பொதுநிலையினர் ஒருவரால், 1822ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி துவக்கப்பட்ட பாப்பிறை மறைப்பணிக் கழகம், வரும் 2022ம் ஆண்டில், தன் 200ம் ஆண்டை கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, தயாரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.

1799ம் ஆண்டில் பிரான்சில் பிறந்து, இளவயதிலேயே உடல் ஊனமுற்ற Pauline Jaricot என்பவரால், 1822ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி துவக்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டே, திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களது அங்கீகாரத்தைப் பெற்ற பாப்பிறை மறைப்பணி கழகம், உலகம் முழுவதும் உள்ள தலத்திருஅவைகளுக்காக இறைவேண்டல் செய்வதுடன், பொருளுதவிகளையும் வழங்கி வருகிறது.

199 ஆண்டுகளுக்கு முன்னர் Pauline அவர்களால் உருவாக்கப்பட்ட பாப்பிறை மறைப்பணி கழகம், இன்று 130 நாடுகளில், 3,54,000 மறைப்பணியாளர்கள், 30 இலட்சம் மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உதவியுடன், 15 கோடி டாலர் நிதியுடன் சமுதாய, மற்றும், மறைப்பணித் திட்டங்களில் செயலாற்றி வருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மறைப்பணி நாடுகளுக்கென, கடந்த ஆண்டு, 7,50,000 டாலர் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1862ம் ஆண்டு சனவரியில் உயிரிழந்த Pauline அவர்களை, 1963ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் வணக்கத்துக்குரிய இறையடியார் என அறிவித்தார், திருத்தந்தை 23ம் யோவான். இவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமையொன்று கடந்த ஆண்டு மே மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இவரை அருளாளராக அறிவிப்பதற்கான வழி பிறந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2021, 15:10