இஸ்ரேல் அரசால் தரைமட்டமாக்கப்பட்ட கட்டடத்திலிருந்து பாலஸ்தீனிய இளைஞர் பொருள்களைக் காப்பாற்றுதல் இஸ்ரேல் அரசால் தரைமட்டமாக்கப்பட்ட கட்டடத்திலிருந்து பாலஸ்தீனிய இளைஞர் பொருள்களைக் காப்பாற்றுதல் 

மருத்துவ உதவிகள் செய்ய, போர்நிறுத்தம் தேவை - காரித்தாஸ்

காசாப் பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள், இதுவரை, பல மோதல்களைப் பார்த்திருக்கின்றனர், ஆனால், இம்முறை நடைபெறும் தாக்குதல்களின் கோரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததில்லை - காரித்தாஸ் தலைமைச் செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காசாப் பகுதியில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கபப்ட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கத்துடன், உலக காரித்தாஸ் நிறுவனம், தாக்குதல்களை நிறுத்துமாறு விண்ணப்பம் விடுத்துள்ளது.

பாலஸ்தீனிய போராளிகளின் மையங்களைத் தாக்குவதாகக் கூறிவரும் இஸ்ரேல் அரசு, இச்செவ்வாயன்று, இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்கள் அமைந்துள்ள கஹில் (Kahil) என்ற கட்டடத்தை தரைமட்டமாக்கியுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

வான்வழித் தாக்குதல்களை நிறுத்துமாறு பன்னாட்டு அரசுகள், இஸ்ரேல் அரசிடம் கூறிவருவதற்கு செவிகொடாமல், அவ்வரசு மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், மக்கள் அதிகம் வாழும் இடங்களில் நிகழ்கின்றன என்றும், இதுவரை, 61 குழந்தைகள், மற்றும் 36 பெண்கள் உட்பட, 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1,400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

எருசலேம் நகரில் இயங்கிவரும் காரித்தாஸ் அமைப்பு, காயப்பட்டோருக்கு உதவிகள் செய்வதற்கு தயாராக இருந்தும், வான்வழித் தாக்குதல்கள் காரணமாக தங்களால் எந்த முயற்சியும் எடுக்கமுடியவில்லை என்று இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

காசாப் பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் இதுவரை பல மோதல்களைப் பார்த்திருக்கின்றனர், ஆனால், இம்முறை நடைபெறும் தாக்குதல்களின் கோரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததில்லை என்று, காரித்தாஸ் தலைமைச் செயலர், அருள்சகோதரி Bridget Tighe அவர்கள் கூறியுள்ளார்.

ஏறத்தாழ 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காசாப் பகுதியில், குறைந்தது 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்பதும், இவர்கள், வேறு எங்கும் தப்பித்து செல்ல இயலாதவண்ணம், இப்பகுதி இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இதுவரை 17,000த்திற்கும் மேற்பட்டோர், இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று கூறும் அருள்சகோதரி Tighe அவர்கள், இப்பகுதியில், ஒரு சில மணி நேரங்களாவது போர் நிறுத்தம் ஏற்பட்டால், காயமடைந்தோருக்கு மருத்துவ உதவிகள் செய்ய இயலும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2021, 14:42