“ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்” (தி.பா.9:1) - தாவீது “ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்” (தி.பா.9:1) - தாவீது 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 9 – நீதியின் கடவுளுக்கு நன்றி 1

இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்த 'முழு உள்ளம்' அல்லது, ‘முழு இதயம்’ என்ற சொற்றொடர், தாவீது உருவாக்கிய திருப்பாடல்களில் பதிவாகியிருப்பதில், வியப்பு ஏதுமில்லை.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 9 – நீதியின் கடவுளுக்கு நன்றி 1

9ம் திருப்பாடலில் நம் விவிலியத்தேடல் பயணம் இன்று துவங்குகிறது. இத்திருப்பாடலில் அடியெடுத்து வைப்பதற்குமுன், திருப்பாடல்கள் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள எண்களைப்பற்றிய ஒரு தகவலை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான, "ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை" (தி.பா.23:1) என்று துவங்கும் புகழ்பெற்ற திருப்பாடல், ஒரு சில விவிலியப் பதிப்புக்களில், 23ம் திருப்பாடல் என்றும், இன்னும் சில பதிப்புக்களில் 22ம் திருப்பாடல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எண் குறியீட்டில் காணப்படும் இந்த வேறுபாடு, நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 9ம் திருப்பாடலிலிருந்து ஆரம்பமாகிறது. எனவேதான், இன்று, அந்தத் தகவலை, இத்திருப்பாடலின் ஆரம்பத்தில், புரிந்துகொள்ள முற்படுகிறோம்.

திருப்பாடல்கள் நூலில் காணப்படும் எண் குறியீட்டின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதற்குமுன், விவிலியத்தில், எண்களின் பயன்பாடு, எப்போது, எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்ள முயல்வோம். துவக்கத்திலிருந்து, விவிலியம், அதன் அனைத்து நூல்களுடன் ஒரு முழுமையான நூலாக நம்மை அடையவில்லை. நாம் தற்போது பயன்படுத்தும் வடிவில், விவிலியம் உருவாக, பல நூற்றாண்டுகள் ஆயின. அந்நூலின் வெவ்வேறு நூல்கள், வெவ்வேறு காலக்கட்டங்களில் உருவாயின. பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான நூல்கள், துவக்கத்தில், வாய்மொழியாக, தலைமுறை, தலைமுறையாக வழங்கப்பட்டு வந்தன. பின்னர், அவை, எழுத்து வடிவம் பெற்றன. அவ்வாறு எழுதப்பட்ட வேளையில், ஒவ்வொரு நூலும், பிரிவுகள், இறைவாக்கியங்கள் என்ற எண்களுடன் எழுதப்படவில்லை. இந்த எண் குறியீடுகள், இன்னும் பல ஆண்டுகள் சென்றே பயன்படுத்தப்பட்டன.

மேலும், இந்நூல்களில் பல, முதலில், எபிரேய, மற்றும், அரமேய மொழிகளில், உருவாயின. இவ்விரு மொழி நூல்கள், கி.மு. 7ம் நூற்றாண்டில் பழக்கத்தில் இருந்தன. இவை, கி.மு. 2ம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. அதன்பின்னர், இலத்தீன் மொழியிலும், அதைத் தொடர்ந்து, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன.

விவிலியத்தின் மொழிபெயர்ப்புகள் (Bible translation) என்ற தலைப்பில், விக்கிப்பீடியா (Wikipedia) வழங்கும் இன்னும் சில குறிப்புகள் பயனுள்ளவை: விவிலியம், இவ்வுலகின் 704 மொழிகளில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும், 1551 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவையன்றி, மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவு, இயேசு கூறிய உவமைகள் போன்ற புகழ்மிக்க பகுதிகள், மேலும் 1160 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, முழுமையான விவிலியம், மற்றும், விவிலியத்தின் ஒரு சில பகுதிகள், உலகின் 3,415 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. (காண்க. விக்கிப்பீடியா)

திருப்பாடல்கள் நூலின் எண் குறியீடுகள் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவோம். எபிரேய மொழியில் உருவான பதிப்பிலும், கிரேக்க மொழியில் உருவானப் பதிப்பிலும் 150 திருப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை நாம் சிந்தித்துவந்த முதல் 8 திருப்பாடல்கள், இவ்விரு பதிப்புகளிலும் ஒரேவிதமான எண்களுடன் காணப்படுகின்றன. 9ம் திருப்பாடலிலிருந்து எண் குறியீட்டில் வேறுபாடுகள் துவங்குகின்றன. எபிரேய மொழிப்பதிப்பில், 9, 10 என்று பதிவாகியுள்ள இரு திருப்பாடல்கள், கிரேக்க மொழிப்பதிப்பில், 9ம் திருப்பாடல் என்ற எண்ணுடன், ஒரே பாடலாகப் பதிவாகியுள்ளது.

பின்னர், எபிரேயப் பதிப்பில் காணப்படும் 147வது திருப்பாடல், கிரேக்கப் பதிப்பில், 146, 147 என்ற இரு பாடல்களாகப் பிரித்து, பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திருப்பாடல்கள் நூலின் இறுதியில் இடம்பெறும், 148, 149 மற்றும் 150 ஆகிய மூன்று திருப்பாடல்களும், இரு மொழிப்பதிப்புகளிலும் ஒரேவிதமான எண்களைக் கொண்டு முடிவடைகின்றன. தமிழ் விவிலியப்பதிப்புகள், பெரும்பாலும், எபிரேயப் பதிப்பின் எண் குறியீடுகளைப் பின்பற்றுகின்றன. இனி, நாம் 9ம் திருப்பாடலில் அடியெடுத்து வைப்போம்.

இத்திருப்பாடலின் முன்குறிப்பும், அறிமுக வரிகளும், முதலில், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. இத்திருப்பாடலின் முன்குறிப்பில், இது, 'தாவீதின் புகழ்ப்பா' என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை நாம் சிந்தித்த 8 திருப்பாடல்களில், 4,5,6,8 ஆகிய நான்கு திருப்பாடல்களிலும், 'தாவீதின் புகழ்ப்பா' என்ற முன்குறிப்பைக் காண்கிறோம். ஆனால், இந்த 4 திருப்பாடல்களிலும், ஆண்டவரைப் ‘புகழ்வதாக’ தாவீது ஒரு வரியிலும் கூறவில்லை. 7ம் திருப்பாடலின் இறுதியில், “ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்; உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்” (தி.பா.7:17) என்று தாவீது கூறியுள்ளது, அவர் இறைவனுக்கு வழங்கும் புகழுரையாக ஒலிக்கிறது. 9ம் திருப்பாடலின் ஆரம்ப வரிகள், இது உண்மையிலேயே 'தாவீதின் புகழ்ப்பா' என்பதை பறைசாற்றுகின்றன. “ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.” (தி.பா.9:1-2)

என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன் என்று தாவீது கூறுவது, 'என் முழு இதயத்தோடும் உம்மைப் புகழ்வேன்' என்றும் ஒரு சில பதிப்புக்களில் கூறப்பட்டுள்ளன. 'முழு இதயம்' என்ற சொற்றொடர், விவிலியத்தில் இன்னும் சில இடங்களில் இடம்பெற்றுள்ளது.

“இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” (இணைச்சட்டம் 6:4-5) என்ற புகழ்மிக்க சொற்களை, இஸ்ரயேல் மக்களிடம் மோசே ஒரு கட்டளையாக வழங்கியுள்ளார். இதையே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை என்று, இயேசு, திருச்சட்ட அறிஞர் ஒருவரிடம் வலியுறுத்திக்கூறுவதை, நாம், மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் காண்கிறோம் (காண்க. மத்தேயு 22:35-37; மாற்கு 12:28-30; லூக்கா 10:25-28). முழு இதயம், முழு உள்ளம், முழு ஆற்றல் என்று மும்முறை வலியுறுத்திக் கூறப்படும் இந்தக் கட்டளை, இறைவனுக்கு நாம் காட்டும் அன்பு, குறைபாடுகள் ஏதுமற்ற, முழுமையான அன்பாக இருக்கவேண்டும் என்பதை, இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதித்தது.

ஆண்டவருக்கு செலுத்தப்படும் அன்பு மட்டுமல்ல, அவருக்கு செலுத்தப்படும் வழிபாடு, அவருக்கு ஆற்றப்படும் பணி என்று, அனைத்திலும், முழுமை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, முழு இதயம், முழு மனம் ஆகிய சொற்றொடர்கள், விவிலியத்தின் இன்னும் சில இடங்களில் காணக்கிடக்கின்றன.

தங்களுக்கு ஓர் அரசன் வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் சாமுவேலிடம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர், இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுலை உருவாக்கினார். (காண்க. 1 சாமு. 11) அவர்கள் இறைவனை அரசராக ஏற்றுக்கொள்ளாமல், சவுலை ஓர் அரசராக ஏற்றுக்கொண்டதை கண்டித்து, இறைவாக்கினர் சாமுவேல் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய அறிவுரையில், இறைவனை முழு உள்ளத்துடன், மனதுடன் வழிபட்டு, அவருக்கு பணியாற்றவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்: அக்காலத்தில் சாமுவேல் மக்களிடம் கூறியது: “ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்... ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி நடந்து, உங்கள் முழு மனத்தோடு உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்து பாருங்கள்.” (1 சாமுவேல் 12: 20,24)

மன்னன் தாவீது, தன் மகன் சாலமோனை அரசராக நியமித்த வேளையில், அவருக்கு வழங்கிய அறிவுரையில், முழுமையான, ஆர்வம் மிக்க உள்ளத்துடன், சாலமோன் ஆண்டவருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்: "என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்" (1 குறிப்பேடு 28:9)

எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார். (எரேமியா 29:1) அம்மடலில், ஆண்டவர் தன் மக்களுக்கு கூறுவதாக, எரேமியா பதிவுசெய்துள்ள அறிவுரை இதோ: "உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்." (எரேமியா 29:13)

முழு இதயத்தோடு இறைவனிடம் திரும்பி வருவதைக் குறித்து, இறைவாக்கினர் யோவேல் கூறும் அழகான வரிகளை நாம் தவக்காலத்தின் துவக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் கேட்டு வருகிறோம்: 'இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்' என்கிறார் ஆண்டவர் (யோவேல் 2:12)

இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்த 'முழு உள்ளம்' அல்லது, ‘முழு மனம்’ என்ற சொற்றொடர், தாவீது உருவாக்கிய இன்னும் சில திருப்பாடல்களில் பதிவாகியிருப்பதில், வியப்பு ஏதுமில்லை. "முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன் (தி.பா. 119:10) என்று 119வது திருப்பாடலிலும், "ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்" (தி.பா. 138:1) என்று 138வது திருப்பாடலிலும் தாவீது அறிக்கையிட்டுள்ளார்.

“ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்” (தி.பா.9:1) என்ற அறிக்கையுடன் துவங்கும் 9ம் திருப்பாடலில் தாவீது பதிவுசெய்துள்ள கருத்துக்களை, அடுத்தத் தேடலில், தொடர்ந்து சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2021, 14:19