மியான்மார் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் மியான்மார் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் 

மியான்மாரில் குடிமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட..

ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, மியான்மார் விடயத்தில் உடனடியாக, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு கொரிய பல்சமய அமைப்பு வலியுறுத்தல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் அப்பாவி குடிமக்கள் கொலை செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று ஆசியக் கண்டத்தில் செயல்படும் பல்சமய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

கொரியாவில் பணியாற்றுகின்ற, பிரான்சிஸ்கன் சபையின், நீதி மற்றும் அமைதி குழுமம், இயேசு சபையினரின் தோழமை ஆய்வு மையம், சனநாயகம், மற்றும், நீதிக்கான ஆசிய புத்தமத கூட்டமைப்பு, மியான்மாருக்காகக் குரல் கொடுக்கும் புத்தமத மையம், ஆகியவை இணைந்து இந்த அழைப்பை, மியான்மார் இராணுவத்திற்கு விடுத்துள்ளன.

இந்த தங்களின் மனுவை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவைக்கும், அதன் உறுப்பினர்களுக்கும், குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், சீனாவுக்கும் அனுப்பியுள்ள, கொரிய பல்சமய அமைப்பு, மியான்மார் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, அந்நாட்டில், அப்பாவி குடிமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

மியான்மார் இராணுவத்தால் மனித உரிமைகள் மீறப்படுவது மிகத் தெளிவாகத் தெரிகின்றது என்று கூறியுள்ள, கொரிய பல்சமய அமைப்பு, ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, மியான்மார் விடயத்தில் உடனடியாக, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பல்சமய அமைப்பு, தென் கொரியாவிலும், மற்ற ஆசிய நகரங்களிலும் அமைந்துள்ள சீன, மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகங்களின் முன்பாக, அமைதியான போராட்டங்களையும், இறைவேண்டல் நிகழ்வுகளையும் நடத்தியுள்ளன. (Fides)

இதற்கிடையே, மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பெருந்துன்பங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் நெருக்கடிகள் ஆகிய இரண்டும், அந்நாட்டின் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர், கடும் வறுமையை எதிர்கொள்வர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2021, 15:26