வேதனை, வருத்தங்களில் வெளிப்படும் அன்பு வேதனை, வருத்தங்களில் வெளிப்படும் அன்பு 

மகிழ்வின் மந்திரம் : ஆழமான அன்பிலிருந்து பிறக்கும் மகிழ்வு

புனித அகுஸ்தீனார் கூறுவதுபோல், யுத்தத்தின் ஆபத்து பெரிதாக இருக்கும்போது, வெற்றியின் மகிழ்வும் பெரிதாக இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலின் 4ம் பிரிவில், அன்பின் பண்புகள் குறித்து, புனித பவுல் கூறியுள்ளவற்றைச் சுட்டிக்காட்டி, விளக்கமளித்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின், தாம்பத்திய அன்பில் வளர்தல் குறித்தும், அந்த அன்பை பகிர்தல் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். அடுத்து, 'மகிழ்வும் அழகும்' என்ற தலைப்பில், 5 பத்திகளில் திருத்தந்தை, கூறியுள்ள கருத்துக்களில், இறுதி இரு பத்திகளில் நாம் காணும் கருத்துக்கள் இதோ:

ஆழமான அன்பிலிருந்து பிறக்கும் மகிழ்வு, உரமிட்டு வளர்க்கப்படவேண்டிய தேவை உள்ளது. கொடுத்து வாங்கு; மகிழ்ந்திரு (சீரா 14:16), என கூறப்பட்டிருப்பதற்கு ஏற்ப, நல்லவற்றை மற்றவர்களுடன் பகிர்வதைவிட, வேறு பெரிய மகிழ்வு இல்லை. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொணர்வது, நமக்கும், மகிழ்ச்சியையும், மனஆறுதலையும் தரவல்லது. உடன்பிறந்த நிலையின் அன்பால் பிறக்கும் இந்த மகிழ்வு, சுயநலமுடையதல்ல, மாறாக, தான் அன்புகூர்பவரின் நன்மைத்தனம் கண்டு, அதில் அடையும் மகிழ்வாகும். அதேவேளை, மகிழ்வு என்பது, வேதனை, மற்றும் வருத்தங்கள் வழியாகவும் பிறக்கிறது. புனித அகுஸ்தீனார் கூறுவதுபோல், யுத்தத்தின் ஆபத்து பெரிதாக இருக்கும்போது, வெற்றியின் மகிழ்வும் பெரிதாக இருக்கும். பல துயர்களை, மற்றும் போராட்டங்களை, தம்பதியர், ஒன்றிணைந்து சந்தித்தபின், அத்தகைய அனுபவம் தகுதியுடையதே என்பதை கண்டுகொள்கின்றனர். ஏனெனில், அவற்றின் வழியாக, அவர்கள் நல்லவை பலவற்றை பெற்றுள்ளனர், தம்பதியராக பலவற்றைக் கற்றுள்ளனர், அல்லது, தங்களிடம் இருப்பவற்றின் உண்மை மதிப்பைக் கண்டுகொண்டு பாராட்டத் துவங்கியுள்ளனர். ஒருவரையொருவர் அன்புகூரும் இருவர், தங்களால் பகிர்ந்து செய்யப்படும் முயற்சியின் பலனை அடையும் வேளையில் கிட்டும் மகிழ்ச்சிக்கு இணையானது, ஒரு சிலவே. (அன்பின் மகிழ்வு 129,130)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2021, 12:15