EU தூதர் Alexandra Valkenburg-Roelofs EU தூதர் Alexandra Valkenburg-Roelofs  

ஐரோப்பிய ஒன்றியம் – திருப்பீடம்: 50 வருட தூதரக உறவுகள்

ஐரோப்பிய நாள் சிறப்பிக்கப்படும் மே 09, வருகிற ஞாயிறன்று, உரோம் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், கர்தினால் Angelo di Donatis அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்திற்கும், EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், மே 09, வருகிற ஞாயிறன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 27ம் தேதி வரை நடைபெறும், இந்த கொண்டாட்டங்கள் பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, திருப்பீடத்திற்கெனப் பணியாற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் Alexandra Valkenburg-Roelofs அவர்கள், ஐம்பது ஆண்டு தூதரக உறவுகள் நிறைவுறுவதையொட்டி, "Iter Europaeum" எனப்படும் புதிய முயற்சி ஒன்று துவக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கினார்.

இந்த கொண்டாட்ட நாள்களில், ஒவ்வொரு ஞாயிறன்றும், உரோம் மாநகரிலுள்ள சில குறிப்பிட்ட பெருங்கோவில்கள் மற்றும், ஆலயங்களில் திருவழிபாடுகள், இசை நிகழ்வுகள், அந்த ஆலயங்கள் பற்றிய விளக்கங்கள் போன்றவை இடம்பெறும் என்று, Alexandra அவர்கள் கூறினார்.

உரோம் மாநகரில், ஏறத்தாழ ஒவ்வோர் ஆலயமும், டென்மார்க் மற்றும், எஸ்டோனியா நாடுகள் தவிர, EU ஒன்றியத்தின்  மற்ற நாடுகள் ஒவ்வொன்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன என்றும், ஒவ்வோர் ஆலயத்திலும், திருப்பீடத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே நிலவும் உறவுகள் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்றும், Alexandra அவர்கள் எடுத்துரைத்தார்.

இக்கொண்டாட்டங்கள், வரலாற்றில், திருப்பீடத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும் இடையே நிலவிய உறவுகள்பற்றி எடுத்துரைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்றும், Alexandra அவர்கள் கூறினார்.

ஐரோப்பிய நாள் சிறப்பிக்கப்படும் மே 09, வருகிற ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தில், திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் Angelo di Donatis அவர்கள், புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2021, 15:09