காலியான இயேசுவின் கல்லறை காலியான இயேசுவின் கல்லறை 

உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சாவே உன் வெற்றி எங்கே, சாவே உன் கொடுக்கு எங்கே என்று வீரமுழக்கமிட்டு, சாவை வென்று, வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்துவிட்டார்.

மேரி தெரேசா- வத்திக்கான்

உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி

வத்திக்கான் வானொலியின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சாவே உன் வெற்றி எங்கே, சாவே உன் கொடுக்கு எங்கே என்று வீரமுழக்கமிட்டு, சாவை வென்று, வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்துவிட்டார். ஆதலால், நாம் அனைவரும் அக்களிப்போடு இறைவனைப் போற்றுவோம். அல்லேலூயா பாடுவோம்

இயேசு கிறிஸ்து தம் உயிர்ப்பினால், மூன்று முக்கிய செய்திகளை இந்த உலகத்திற்கு உரக்க எடுத்துரைக்கின்றார். முதலாவது, இந்த உலகில் தீமை ஒருபோதும் வெற்றி பெறாது, நன்மைதான் வெற்றிபெறும், சாவல்ல வாழ்வே வெற்றிபெறும் என்பதாகும். இரண்டாவது செய்தி, கலங்கவேண்டாம், அஞ்சவேண்டாம், நான் என்றென்றும் உங்களோடு இருக்கிறேன் என்பதாகும். மூன்றாவது செய்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை, நாம் எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும் என்பதாகும். இத்தகைய செய்தியைத் தாங்கிய கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா பற்றிய தன் சிந்தனைகளை, வத்திக்கான் வானொலியில் இன்று வழங்குகிறார், அருள்பணி டோமினிக் சாமுவேல். இவர் தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் மரியதாஸ் அவர்களின் செயலராவார்.

கோவிட்-19 உலகப் பெருந்தொற்றின், இரண்டாவது அலையின் கடும் தாக்கத்தால் ஒவ்வொரு நாளும் உலக அளவில் பல உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. இந்நோய் உருவாக்கியுள்ள நெருக்கடிகளால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றது. தங்களின் குடும்பம், மற்றும், வாழ்வையும் பொருட்படுத்தாது, மருத்துவப் பணியாளர்கள், மற்றும், தன்னார்வலர்கள், 24 மணிநேரமும் பெருந்தொற்று நோயாளிகள் மத்தியில் பணியாற்றுகின்றனர். இக்காலக்கட்டத்தில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற்றை மனதில் வைத்து, சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தின், அருள்பணி இஞ்ஞாசிமுத்து ரீகன் மனுவேல் ராஜ் அவர்கள் உயிர்த்த ஆண்டவரிம் மன்றாடுகிறார். நாமும் அருள்பணி ரீகன் அவர்களோடு சேர்ந்து, செபிப்போம்.

இறைவேண்டல், உண்ணா நோன்பு, தர்மச் செயல்கள் ஆகியவை வழியாக பண்பட்டுள்ள நம் உள்ளங்களும், உலகமும், சாவை வென்ற இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வால் புத்தொளி பெற்று மகிழ்வதாக.  வாக்குமாறா நம் ஆண்டவர் இயேசுவுக்கு நம் இதயக் கதவைத் திறப்போம். இறைநம்பிக்கையில் வளர்வோம்! கொரோனா பெருந்தொற்று உருவாக்கியுள்ள மனவிரக்தியின் மத்தியில், ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு, நம்பிக்கை கீற்றுக்களைத் துளிர்விடச் செய்துள்ளது. இந்த உயிர்த்த ஆண்டவர் நம்மோடு உடனிருந்து வழிநடத்துவார். இது உறுதி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2021, 13:29