கர்தினால் Nicolas Cheong Jin-suk கர்தினால் Nicolas Cheong Jin-suk 

இறையடி சேர்ந்த தென் கொரிய கர்தினால் நிக்கோலஸ் சோங்

தன் அருள்பணித்துவ வாழ்வின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடிய கர்தினால் சோங் அவர்கள், கண் தானம் உட்பட, தன் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் தானமாக அளிப்பதற்கு முடிவு செய்திருந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் சோல் (Seoul) பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் நிக்கோலஸ் சோங் ஜின்-சுக் (Nicholas Cheong Jin-suk) அவர்கள், ஏப்ரல் 27, இச்செவ்வாயன்று, தன் 89வது வயதில் இறையடி சேர்ந்தார்.

மறைபரப்புப்பணியை தன் வாழ்வின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த கர்தினால் சோங் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலக சமுதாயத்திற்கு ஒளியாக, உப்பாகத் திகழவேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை காட்டினார் என்று, சோல் பெருமறைமாவட்டத்தின் தற்போதையப் பேராயர் கர்தினால் ஆண்ட்ரு யோம் சூ-ஜுங் (Andrew Yeom Soo-jung) அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

கர்தினால் சோங் அவர்களின் நிறையமைதிக்காக, ஏப்ரல் 27ம் தேதி, இரவு, கர்தினால் யோம் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார் என்றும், கர்தினால் சோங் அவர்களின் அடக்கத் திருப்பலி, ஐந்து நாள்களுக்குப் பின், Myeongdong பேராலயத்தில் நடைபெறும் என்றும், சோல் பெருமறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கர்தினால் சோங் – வாழ்க்கைக் குறிப்புகள்

1931ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி பிறந்த நிக்கோலஸ் சோங் அவர்கள், வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றபின்னர், அருள்பணித்துவ பயிற்சியில் ஈடுபட்டு, 1961ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

இவ்வாண்டு, மார்ச் 18ம் தேதி, தன் அருள்பணித்துவ வாழ்வின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடிய கர்தினால் சோங் அவர்கள், கண் தானம் உட்பட, தன் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் தானமாக அளிப்பதற்கு முடிவு செய்திருந்தார்.

உரோம் உர்பானியா பாப்பிறை பல்கலைக் கழகத்தில் திருஅவைச் சட்டங்களில் முது கலைப் பட்டம் பெற்ற சோங் அவர்கள், 1970ம் ஆண்டு தன் 39வது வயதில் Cheongju மறைமாவட்டத்தின் ஆயராக திருப்பொழிவு பெற்றபோது, தென் கொரியாவிலேயே மிகக் குறைந்த வயதில் ஆயராகப் பணியேற்ற பெயரைப் பெற்றார்.

Cheongju மறைமாவட்டத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றிய ஆயர் சோங் அவர்கள், சோல் பெருமறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் பணியாற்றிய வேளையில், 2006ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

2012ம் ஆண்டு, தன் 80வது வயதில், பணிஓய்வு பெற்ற கர்தினால் சோங் அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி மாதம் நோயுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஏப்ரல் 27, இச்செவ்வாயன்று, தன் 89வது வயதில், இறையடி சேர்ந்தார்.

கர்தினால் சோங் அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் தற்போது, 223 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில், 80 வயதுக்குட்பட்டு, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்றவர்கள் 126 என்பதும், 80வயதுக்கு மேற்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 97 என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2021, 16:02