திருத்தந்தை  புனித மூன்றாம் லியோ திருத்தந்தை புனித மூன்றாம் லியோ 

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை புனித மூன்றாம் லியோ

திருத்தந்தை புனித மூன்றாம் லியோவைத் தாக்கிய குழு, அவரின் கண்களையும் நாவையும் பிடுங்க முயன்றதால், படுகாயமுற்ற திருத்தந்தை, சாலையில் இரத்தம் சிந்த துடிதுடித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்கள், 795ம் ஆண்டு, டிசம்பர் 25ம் தேதி இறந்து, அதற்கடுத்த  நாள் அடக்கம் செய்யப்பட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில், புதிய திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார், திருத்தந்தை, புனித மூன்றாம் லியோ. மறுநாளே, அதாவது, டிசம்பர் 27ம் தேதியே, அவர், திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார். திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்கள், திருத்தந்தை ஏட்ரியனின்  காலத்தில் திருப்பீடத்தின் கருவூலகக் காவலராக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இத்திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தை பேரரசர் Charlemagneக்கு தெரிவித்தபோது, அவரும் பல்வேறு பரிசுகளை திருத்தந்தைக்கு அனுப்பி வைத்தார். இந்த பரிசுப்பொருட்கள் மிகவும் விலைமதிப்பிட முடியாதவைகளாக இருந்தன. இவைகளைக் கொண்டுதான் திருத்தந்தை மூன்றாம் லியோ, பல்வேறு கோவில் சீரமைப்புப் பணிகளையும், உரோம் நகரில் பிறரன்புப் பணிகளையும் மேற்கொண்டார்.

795ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோவுக்கு, 799ம் ஆண்டு ஓர் ஆபத்து வந்தது. இதற்கு முந்தைய திருத்தந்தை முதலாம் ஏட்ரியனின் உறவினர்கள் சிலர் ஒன்று சேர்ந்து இவர்மீது கொண்ட பொறாமை மற்றும் பகைமையால், இவரை வன்மையாக எதிர்த்து வந்தனர். பாப்பிறைப் பதவியிலிருந்து தூக்கியெறிய சூழ்ச்சியும் செய்துக்கொண்டிருந்தனர். 799ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25ந்தேதி, ஒரு திருவழிபாட்டு பவனியில் கலந்துகொள்ள திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென, ஆயதம் தாங்கிய ஒரு குழு அவரைத் தாக்கியது. அவரை கீழே தள்ளி, அவரின் கண்களையும், நாவையும், பிடுங்கமுயன்றது. இதனால் படுகாயமுற்ற திருத்தந்தை, சாலையில் இரத்தம் சிந்த துடிதுடித்தார். இவரைக் கண்ட சிலர், அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு அருகிலிருந்த புனித Erasmus துறவுமடத்திற்குக் கொண்டு சென்றனர். இவரின் பார்வை பாதிக்கப்பட்டு, பேச்சுத்திறனையும் இழப்பார் என அனைவரும் அஞ்சிக்கொண்டிருக்க, அத்துறவு மடத்திலேயே அதிசயமாக முழுக்குணமடைந்தார் திருத்தந்தை மூன்றாம் லியோ. அத்துறவு மடத்திலிருந்து தப்பி, பல உரோமைய மக்களின் உதவியுடன், பேரரசர் Charlemagneயிடம் அடைக்கலம் புகுந்தார் திருத்தந்தை. திருத்தந்தையின் எதிரிகள் திருத்தந்தை குறித்து பொய்யான தகவல்களை பேரரசருக்கு கொடுத்திருந்தாலும், பெரும் மரியாதையுடன் Paderborn எனுமிடத்தில் திருத்தந்தையை வரவேற்றார், பேரரசர் Charlemagne. சில காலம், ஜெர்மனியில் தங்கியிருந்த திருத்தந்தை, பேரரசரின் படைப் பாதுகாப்புடன், உரோம் நகர் திரும்பினார். மக்களும், அவரது வருகையை, விழா எடுத்துக் கொண்டாடினர்.

திருத்தந்தையுடன் வந்த பேரரசரின் பிரதிநிதிகள், திருத்தந்தையைத் தாக்கிய எதிரிகளைக் கைப்பற்றி, பிரான்சுக்கு கைதிகளாக அனுப்பிவைத்தனர். மறு ஆண்டு, அதாவது 800ம் ஆண்டு பேரரசர் Charlemagne அவர்கள், உரோம்நகருக்கு வந்தார். திருத்தந்தைக்கு ஆதரவானவர்களையும் எதிரானவர்களையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்தார். அங்கு கூடியிருந்த ஆயர்களோ, திருத்தந்தைக்கு தீர்ப்பு வழங்க தங்களுக்கு அதிகாரமில்லை என அறிவித்தனர். ஆனால், திருத்தந்தையே முன்வந்து, தன் பக்க நியாயங்களை விளக்கி, தான் குற்றமற்றவர் என நிரூபித்தார். அதுமட்டுமல்ல, மரணதண்டனை விதிக்கப்பட்ட தன் எதிரிகளுக்காக பரிந்து பேசி, அவர்களின் மரணதண்டனையை, நாடு கடத்தல் தண்டனையாக மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

பேரரசர், அவ்வாண்டு, கிறிஸ்து பிறப்பு விழாவில், புனித பேதுரு பெருங்கோவிலில், திருப்பலியில் கலந்துகொண்டிருந்தபோது, நற்செய்தி வாசிப்பிற்க்குப்பின், பேரரசரை அணுகிய திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்கள், அவருக்கு தன்  கையால் மணிமகுடம் ஒன்றைச் சூட்டினார். மக்களும் ஒரே குரலில் ஆரவாரம் செய்தனர். இதன் வழியாக, திருஅவையின், இவ்வுலகப் பாதுகாப்பாளராக பேரரசர் அறிவிக்கப்பட்டார். அதாவது, திருஅவையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவேண்டியது, பேரரசரின் கடமையாயிற்று. அதேவேளை, கிழக்கு நாடுகளையும் மேற்கையும் இணைக்க விரும்பிய திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்கள், அப்போதைய கீழைநாடுகளின் பேரரசியான ஐரீனுக்கும், பேரரசர் Charlemagneக்கும் இடையே திருமணத்தை ஏற்பாடுசெய்ய விரும்பினார். பேரரசி, இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இத்திட்டம் நிறைவேறவில்லை. இருப்பினும், பல அரசியல் திட்டங்களில்கூட, ஏன், தன் மகன்களிடையே பேரரசின் பகுதியை பிரிப்பதில்கூட, திருத்தந்தை 3ம் லியோவின் வழிகாட்டுகல்களைக் கேட்டே நடந்தார் பேரரசர். 801ம் ஆண்டு, உரோம் நரை விட்டு, தன் சொந்த இடத்திற்குச்சென்ற பேரரசரைக் காண, 804ம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலையைத் தாண்டிச் சென்றார், திருத்தந்தை 3ம் லியோ.

எதிரிகள், கடல்வழியாக, திருத்தந்தையின் நிலப்பகுதிகளை தாக்காதிருக்கும்படியும், இஸ்லாமிய கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும், பேரரசர் Charlemagneயின் ஆலோசனைப்படி, ஒரு சிறு கடற்படையை வைத்திருந்தார் திருத்தந்தை மூன்றாம் லியோ. அக்கடற்படைக்கு பாதுகாப்பு பேரரசரால் வழங்கப்பட்டது. ஆனால், 814ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ந்தேதி, பேரரசர் காலமானபோது,  திருத்தந்தைக்கு துன்பகாலம் பிறந்தது. அவரின் எதிரிகள், மீண்டும் சூழ்ச்சியில் இறங்கினர். அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டாலும், இத்தாலியின் Campagnaவின் பிரபுக்கள் ஒன்றிணைந்து, நாட்டின்மீது போர் தொடுத்து, அதைச் சூறையாடினர். அவர்களின் அடுத்த இலக்கு உரோம் நகராக, அதாவது திருத்தந்தையின் நேரடி கண்காணிப்பு நிலப்பகுதியாக இருந்தது. இவர்களின் நோக்கத்தைப் புரிந்த இத்தாலிய மன்னரின் (Langobardia பகுதியின்) கட்டளையின் பேரில், Spoleto ஆட்சியாளர், அப்பிரபுக்களை முறியடித்தார். திருத்தந்தையின் நிலப்பகுதிகளும் தாக்குதல்களில் இருந்து தப்பின.

816ம் ஆண்டு ஜுன்மாதம் இறைபதம் சேர்ந்தார், திருத்தந்தை மூன்றாம் லியோ. ஜூன் மாதம் 12ம் தேதி புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்கள், 1673ம் ஆண்டு திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டார். பேரரசரின் உதவியுடன் பல பிறரன்பு அமைப்புக்களை உருவாக்கி உதவிய இத்திருத்தந்தை மூன்றாம் லியோ அவர்கள், கலை உலகுக்கும் மிகவும் சேவையாற்றியுள்ளார்.

நேயர்களே! திருத்தந்தை மூன்றாம் லியோவுக்குப்பின், 7 மாதங்களே திருஅவையை வழிநடத்திய, திருத்தந்தை 4ம் ஸ்தேவானுடன், நம் பயணத்தை, வரும் வாரம் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2021, 15:35