முதல் திருத்தந்தை புனித பேதுரு முதல் திருத்தந்தை புனித பேதுரு 

23 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்திய திருத்தந்தை

திருத்தந்தைக்கும் மன்னருக்கும் இடையே நெருக்கமும் பாசமும் உருவாகி, அதன் பயனாக, திருஅவையும், சமுதாயமும் பயனடைந்தது, திருத்தந்தை ஏட்ரியன் காலத்தில்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, திருஅவைக்கு பெரிய அளவில் உதவிகளை ஆற்றிவந்த பிராங்க்ஸ் மன்னர் பெப்பின் 768ம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரின் மகன்களான Charlemagneம் Carlomanம் ஆட்சியைத் தொடர்ந்தது மட்டுமல்ல, திருஅவைக்கு பக்கபலமாகவும் இருந்தனர். இத்தகையை ஒரு பின்னணியில் 772ம் ஆண்டு, திருஅவையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், திருத்தந்தை முதலாம் ஏட்ரியன். முதல் திருத்தந்தை புனித பேதுருவுக்குப்பின், அதுவரையில், அதிகக்காலம், திருஅவையின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர், இத்திருத்தந்தைதான். ஆம், 23 ஆண்டுகள், 10 மாதங்கள், 24 நாட்கள், இவர், திருஅவையை வழிநடத்திச் சென்றார். இவரைவிட அதிகக்காலம் திருஅவையை வழிநடத்தும் ஒரு திருத்தந்தைக்காக மேலும் ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது, அதாவது, திருத்தந்தை 6ம் பயஸ் அவர்களின் காலம் வரை.

உரோம் நகரின் உயர் குடும்பத்தில் பிறந்த திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்கள், ஓர் அருள்பணியாளராக, திருத்தந்தையர்கள் முதலாம் பவுல், மற்றும் மூன்றாம் ஸ்தேவான் ஆகியோரின் கீழ் சிறப்புப் பணியாற்றியுள்ளார். இவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டபோது, இவரை திருத்தந்தையாக ஏற்றுக்கொள்ள லொம்பார்திய மன்னர் தெசிதேரியுசின் உரோமை பிரதிநிதி  Paul Afiarta அவர்கள் மறுத்தார். ஆனால், உரோமை மக்கள், மற்றும் அருள்பணியாளர்களின் ஒருமித்த குரலுக்கு முன்னால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்கள், தலைமைப் பதவியை ஏற்றவுடனேயே, லொம்பார்தியர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பினார். அதோடு, லொம்பார்திய பிரதிநிதி Afiartaவின் வன்முறைகளுக்கு உள்ளாகி, சிறையிலிருந்தவர்கள் அனைவரையும் விடுவித்தார், மற்றும் அவருக்குப் பயந்து வெளியிடங்களுக்கு தப்பிச்சென்றவர்களை திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். திருஅவைக்கு முழுபக்கபலமாக நின்று உதவிய கிறிஸ்டோபர், மற்றும் அவரின் மகன் செர்ஜியுஸ் குறித்து நாம் ஏற்கனவே நோக்கியுள்ளோம். இந்த செர்ஜியுஸை சிறையிலேயேக் கொல்லும்படி Afiarta கட்டளையிட்டு அதனை நிறைவேற்றினார் என்பதனை அறிய வந்த திருத்தந்தை ஏட்ரியன் அவர்கள்,  Afiartaவை கைது செய்யும்படி ஆணையிட்டார்.

தன் வன்முறை நடவடிக்கைகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்திருந்த Afiarta, மன்னர் தெசிதேரியுசை சந்தித்து, திருத்தந்தை ஏட்ரியனை கைதுசெய்து கொண்டுவருவதாக வாக்குறுதியை வழங்கி திரும்பிய வழியில், ரிமினி நகரில்  கைது செய்யப்பட்டார். இவ்வேளையில், இத்தாலி முழுவதையும் லொம்பார்தியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பினார் மன்னர் தெசிதேரியுஸ். திருத்தந்தை ஏட்ரியன், மற்றும் பிராங்க்ஸ் மன்னர் Charlemagne ஆகியோர் மட்டுமே தனக்கு எதிராக உள்ளார்கள் என்பதை தெரிந்திருந்தார். ஏனெனில்  Charlemagneயின் சகோதரர்  Carloman, 771ம் ஆண்டிலேயே, அதாவது, அவரின் 20வது வயதிலேயே மரணமடைந்திருந்தார். அச்சகோதரரின் நிலங்களையும் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட மன்னர்  Charlemagne, தன் சகோதரரின் மனைவி  Gerberga, மற்றும் அவரின் இரு மகன்களுக்கும், ஆட்சியில் பங்கில்லை என அறிவித்ததால், அவர்கள் மூவரும் பவியா நகரில் அடைக்கலம் தேடியிருந்த நிலை. இதனை சரியாக பயன்படுத்த விரும்பிய மன்னர் தெசிதேரியுஸ், திருத்தந்தைக்கு தூது அனுப்பினார். அதாவது,  Carlomanன் நிலப்பகுதிகளில் அவரின் இரு மகன்களையும் நியாயமான வாரிசுகளாக முடிசூட்ட வேண்டும் என்பதே அந்த விண்ணப்பம். மன்னர் தெசிதேரியுஸ் குறித்து அதிகமாகவே அறிந்திருந்த திருத்தந்தை ஏட்ரியன் அவர்கள், இதில் தலையிடாமல், அமைதி காத்தார்.

திருத்தந்தை தன் விருப்பத்திற்கு பணியாததால் கோபம் கொண்ட தெசிதேரியுஸ், உரோம் நகர் நோக்கி படைகளை அனுப்பினார். திருத்தந்தையோ, தன் நிலப்பகுதிகளைச் சுற்றியிருந்த குறுநில மன்னர்களின் உதவியை நாடினார். அதேவேளை, இத்தாலிக்குள் நுழையும் ஆல்ப்ஸ் மலைப்பாதையை அடைத்திருந்த லொம்பார்தியர்களை முறியடித்து, Gerbergaவும் அவரின் இரு மகன்களும் அப்போது அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த வெரோனா நகரையும் கைப்பற்றி, பின் தெசிதேரியஸையும் முற்றுகையிட்டார் மன்னர்  Charlemagne. பவியா நகரை முற்றிலுமாக கைப்பற்றும்படி, தன் இராணுவத்தை அங்கேயே விட்டுவிட்டு, உரோம் நகர் நோக்கி பயணமானார் மன்னர். அங்கு உயிர்ப்பு ஞாயிறுக்கு முந்தைய புனித சனியன்று வந்து சேர்ந்த மன்னர் Charlemagne அவர்கள், திருத்தந்தையுடன் உயிர்ப்பு விழாவைக் கொண்டாடியபின், பல்வேறு பரிசுகளை வழங்கினார். பல்வேறு நிலப்பகுதிகளில் திருத்தந்தையின் அதிகாரத்தையும் அங்கீகரித்தார். இதற்குப் பின், இரண்டே மாதங்களில், லொம்பார்தியர்களின் ஆட்சி பீடமான பவியா நகர் பிராங்க்ஸ் மன்னரின் கைக்குள் வந்தது. இதனால் இத்தாலியப் பகுதியில் லொம்பார்தியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மன்னர்  Charlemagneயும் பெரும் நிலப்பகுதிகளை திருஅவைக்கு கொடையாக வழங்கினார். இதன் வழியாக, இத்தாலிய நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பகுதி திருத்தந்தையின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்தது.

திருத்தந்தை ஏட்ரியன் மீது அதிக மதிப்பையும் அன்பையும் கொண்டிருந்தார் மன்னர் Charlemagne. தன் அரசவை குறிப்புகளிலும், கடிதங்களிலும், திருத்தந்தை ஏட்ரியன் அவர்களை, 'என் தந்தை', 'நல்ல நண்பர்' என்றே குறிப்பிட்டுள்ளார். ஒரு திருத்தந்தைக்கும் மன்னருக்கும் இடையே நெருக்கமும் பாசமும் உருவாகி, அதன் பயனாக, திருஅவையும், மனிதகுல சமுதாயமும் பயனடைந்தது, திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்களின் காலத்தில்தான். ஆட்சி நிர்வாகத்தில் மட்டுமல்ல, ஆன்மீக விடயங்களிலும் அதிக ஆர்வம் காட்டி திருஅவைக்கு உதவினார் திருத்தந்தை ஏட்ரியன். ஆர்த்தடாக்ஸ் பேரரசி ஐரீன் அவர்களுடன் ஒத்துழைத்து, 787ல் கூட்டப்பட்ட Nicaeaவின் 7வது பொதுஅவைக்கு தன் பிரதிநிதிகளை அனுப்பி, உருவ வழிபாடு குறித்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டார். திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்கள், 795ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2021, 14:23