பிலிப்பீன்ஸ் இராணுவமும் பொதுமக்களும் பிலிப்பீன்ஸ் இராணுவமும் பொதுமக்களும் 

மனித உரிமைகளில் மக்களின் ஈடுபாட்டை ஊக்குவித்தல்

மனித உரிமை நடவடிக்கையாளர்கள் விடுவிக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் என அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட விண்ணப்பிக்கும் பிலிப்பீன்ஸ் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு, அரசு துருப்புக்களால் சட்டத்திற்கு புறம்பே மரணதண்டனைகள் நிறைவேற்றல், மற்றும், பெருங்குற்றங்களில் ஈடுபடும் அரசு துருப்புக்கள் தண்டனையின்றி செல்லுதல் ஆகியவை குறித்து கத்தோலிக்கத் திருஅவை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிலிப்பீன்சில் மனித உரிமை மீறல்கள் குறித்து உற்று நோக்கிவரும் பல்வேறு அமைப்புக்கள் இணைந்து இணையதளம் வழியாக நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கமிலியன் துறவுச் சபையைச் சார்ந்த, பிலிப்பீன்ஸ் நாட்டு அருள்பணி Aris Miranda அவர்கள், மார்ச் மாதம் 7ம் தேதி, தென் பிலிப்பீன்ஸின் Luzon மாவட்டத்தில் 9 நடவடிக்கையாளர்கள், கம்யூனிச தீவிரவாதிகள் என குற்றம்  சாட்டப்பட்டு,  காவல்துறையால் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் தொடர்புடையவைகளில் மக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் பிலிப்பீன்ஸ் திருஅவை அமைப்பின் அங்கத்தினராகிய அருள்பணி மிராண்டா அவர்கள், கம்யூனிச தீவிரவாதிகள் என அரசு துருப்புக்களால் கொல்லப்பட்ட இந்த ஒன்பது பேரும் அப்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை நடவடிக்கையாளர்களே எனவும் எடுத்துரைத்தார்.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மனித உரிமை நடவடிக்கையாளர்களும் விடுவிக்கப்படுவதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் என்ற பெயரில், அப்பாவி மக்கள் கைது செய்யப்படுவதும் கொல்லப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த அருள்பணி மிராண்டா அவர்கள், நாட்டின் காங்கிரஸ் அவையும், மனித உரிமைகள் அவையும், பிலிப்பீன்ஸ் உச்ச நீதிமன்றமும், ஐ.நா அமைப்புக்களும் இதில் தலையிட்டு, நியாயமான தீர்வுகாண உதவவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்னர், பிலிப்பீன்ஸின் சான் கார்லோஸ் ஆயர் Gerardo Alminaza அவர்கள், குற்றம் செய்யும் காவல் துறையினர் தண்டனை பெறாமல் செல்லும் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளதுடன், Rodrigo Duterte அரசை விமர்சிப்போர், தீவிரவாதிகளாக நடத்தப்பட்டு கொல்லப்படுவதற்கு எதிராக சில பாராளுமனற அங்கத்தினர்கள் கொணர முயலும் சட்டம் குறித்து தன் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார் (Fides)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2021, 14:49