மொசாம்பிக்கில் மனிதாபிமான நெருக்கடி மொசாம்பிக்கில் மனிதாபிமான நெருக்கடி 

உலகளாவிய பசியை அகற்ற நாடுகளுக்கு திறந்த மடல்

உலகில் நிலவும் பசிக்கொடுமை, மற்றும், மக்களின் உயிரிழப்புகள் மேலும் இடம்பெறுவதை தடைசெய்வதற்கென, போர் நிறுத்தம் அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும், பசி, பட்டினி, மற்றும், பஞ்சத்தால் வாடுகின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படுமாறு, உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் உட்பட, நூற்றுக்கணக்கான மத அமைப்புகள், நாடுகளின் தலைவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன.

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், 263 மத, மற்றும், சமுதாயநல அமைப்புக்களுடன் இணைந்து உலகத் தலைவர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடலில், உலகின் பல்வேறு பகுதிகளில், வறட்சி மற்றும், பசிக்கொடுமையை எதிர்நோக்கும், ஏறத்தாழ இருபத்தேழு  கோடி மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது உலகில், கடுமையான வறட்சியினால் துயருறும் 3 கோடியே 40 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் சென்றடைய, உலக நாடுகள், தங்களின் நிதியுதவியை 550 கோடி டாலர் கூடுதலாக வழங்குமாறும், அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

உலகில் நிலவும் பசிக்கொடுமை, மற்றும், மக்களின் உயிரிழப்புகள் மேலும் இடம்பெறுவதை தடைசெய்வதற்கென, ஆயுதமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில், போர் நிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் விடுத்துவரும் அழைப்பை, தாங்களும் மீண்டும் வலியுறுத்துவதாக, அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

பசி, அகற்ற முடியாதது அல்ல

ஏமன், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தென் சூடான், புர்க்கினா ஃபாசோ, காங்கோ சனநாயக குடியரசு, கொண்டூராஸ், வெனெசுவேலா, நைஜீரியா, ஹெய்ட்டி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, உகாண்டா, சிம்பாபுவே, சூடான், மற்றும், ஏனைய பகுதிகளில் பணியாற்றும் தங்களின் அமைப்புகள், ஒவ்வொரு நாளும், மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நேரில் பார்த்துவருகின்றன என்று அம்மடலில் கூறப்பட்டுள்ளது.

பசிப் பிரச்சனை, தீர்க்கப்பட முடியாதது அல்ல, மாறாக, அதற்கு, ஆயுதமோதல்கள், வன்முறை, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், நிலங்கள் இழப்பு, வேலையிழப்பு, கோவிட்-19 போன்றவையே காரணங்கள் என்று, அந்த அமைப்புகள், உலகத் தலைவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

உடனடி உணவு உதவி

பஞ்சம், மற்றும், பட்டினி நிலை உருவாவதற்கு மனிதரின் செயல்பாடுகளே காரணம் என்றும், இந்நிலை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்கு, நமது நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ள அந்த அமைப்புகள், தற்போதைய நெருக்கடிநிலைகளைக் களைவதற்கு, கூடுதலாக, 550 கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படுமாறு வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

உலகளாவிய போர் நிறுத்தம்

உலக அளவில் இடம்பெறும் ஆயுதமோதல்கள் மற்றும், வன்முறைகளின் அனைத்து வடிவங்களை முடிவுக்குக் கொணரவும், போர் நிறுத்தம் இடம்பெறவும், முயற்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ள அந்த அமைப்புகள், 2019ம் ஆண்டிலிருந்து உணவுப் பாதுகாப்பின்மையால் துன்புறும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளவேளை, உணவுப் பாதுகாப்பின்மை நீக்கப்படுவதற்கும் நடவடிக்கைகள் அவசியம் என்று, தங்களின் திறந்த மடலில் கூறியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2021, 15:21