காங்கோ குழந்தைகள் காங்கோ குழந்தைகள் 

சிறார் தொழிலாளர் முறையை ஒழிக்கும் துறவுசபைக்கு விருது

காங்கோ குடியரசில், நவீனகால அடிமைத்தனத்திலிருந்து சிறாரை விடுவிப்பதோடு, அவர்களுக்கு, வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது, நல்லாயன் சகோதரிகள் துறவுசபை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அடிமைத்தனத்தையும், சிறார் தொழிலாளர் முறையையும், ஒழிக்கும் திட்டத்தை காங்கோ குடியரசில் செயல்படுத்திவரும் நல்லாயன் சகோதரிகள் துறவுசபைக்கு இவ்வாண்டின் Stop Slavery Hero விருது வழங்கப்பட்டுள்ளது.

கட்டாயப்பணி இடங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்குக் கொணரவும், சிறார் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், நல்லாயனின் துறவுசபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள், காங்கோ குடியரசில் தொடர்ந்து ஆற்றிவரும் சிறப்புப் பணிகளுக்கென இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இலத்தின் அமெரிக்கா, ஆசியா, மற்றும், ஆப்ரிக்காவைச் சேர்ந்த 73 நாடுகளில் பணியாற்றிவரும் நல்லாயனின் துறவுசபை சகோதரிகள், ஆப்ரிக்காவில், சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளச் சிறார்களை விடுவிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகின்றனர்.

கட்டாயப்பணிகளுக்கு எதிராக, உழைத்துவரும் நிறுவனங்களுக்கென இந்த விருதை உருவாக்கி வழங்கிவந்த தாம்சன் ராயிட்டர்ஸ் நிறுவனம், தற்போது, அரசுசாரா அமைப்புகளுக்கும் இந்த விருதை வழங்கத் தொடங்கியுள்ளதையடுத்து, இவ்வாண்டின் விருது, கத்தோலிக்க துறவு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நவீனகால அடிமைத்தனத்தால், உலகெங்கும், 4 கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டாயப்பணியில் அமர்த்தப்படும் சிறார்களை விடுவிப்பதில் பணியாற்றிவரும் நல்லாயனின் துறவு சபையினர், இச்சிறாரை விடுவிப்பதோடு, அவர்களுக்கு கல்வி வழங்குவதிலும், அவர்களின் குடும்பங்களுக்கு வருமானத்தை உருவாக்கும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2021, 14:25