புலம்பெயர்ந்தோருக்கு உணவு வழங்கும் அஸ்தால்லி மையத்தின் ஊழியர்கள் புலம்பெயர்ந்தோருக்கு உணவு வழங்கும் அஸ்தால்லி மையத்தின் ஊழியர்கள் 

நம்பிக்கையை வழங்கும் Astalli மையம் – கர்தினால் தாக்லே

தஞ்சம் புகுவோரை பிரச்சனைகளின் ஊற்றாகக் காணும் கண்ணோட்டத்தை மாற்றி, பகிர்வு, அக்கறை ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் மனிதர்களாக, அவர்களைக் காண்பதற்கு, Astalli மையம் உதவிசெய்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோருக்கென, உரோம் நகரில், இயேசு சபையினர் நடத்திவரும் அஸ்தால்லி (Astalli) மையம் சமர்ப்பித்துள்ள ஆண்டறிக்கை, வெறும் செயல்பாடுகளின் பட்டியல் அல்ல, மாறாக, மனிதாபிமானம், பிறரன்பு, கருணை ஆகிய மனித பண்புகளை வெளிக்கொணரும் ஒரு சாட்சியப் பகிர்வு என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புலம்பெயர்ந்தோருக்கென இயேசு சபையினர் ஆற்றும் பணிகளை ஒருங்கிணைக்க 1980ம் ஆண்டு நிறுவப்பட்ட அஸ்தால்லி மையம், தன் 40வது ஆண்டறிக்கையை, ஏப்ரல் 20, இச்செவ்வாயன்று, இணையவழி மெய்நிகர் கூட்டத்தின் வழியே சமர்ப்பித்த வேளையில், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றிவரும் கர்தினால் தாக்லே அவர்கள், இந்த மெய்நிகர் கூட்டத்தில் பேசிய வேளையில், நாடுவிட்டு நாடு துரத்தப்படும் புலம்பெயர்ந்தோர், கோவிட்-19 பெருந்தொற்று நேரத்தில் கூடுதலான துன்பங்களைச் சந்தித்து வருகின்ற வேளையில், அஸ்தால்லி மையம் போன்ற அமைப்புக்கள் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை வழங்குகின்றன என்று கூறினார்.

பொதுவாக வேற்று நாடுகளுக்குள் தஞ்சம் புகுவோரை பிரச்சனைகளின் ஊற்றாகக் காணும் கண்ணோட்டத்தை மாற்றி, பகிர்வு, அக்கறை ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் மனிதர்களாக அவர்களைக் காண்பதற்கு, அஸ்தால்லி மையம் உதவிசெய்கிறது என்று கர்தினால் தாக்லே அவர்கள் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்தோர் பணிக்கென இத்தாலி நாட்டில் இயேசு சபையினர் நடத்திவரும் எட்டு மையங்கள் வழியே, 2020ம் ஆண்டு, 17,000த்திற்கும் அதிகமானோர் பயனடைந்தனர் என்று, அஸ்தால்லி மையத்தின் 40வது ஆண்டறிக்கை கூறுகிறது.

ஏப்ரல் 20, இச்செவ்வாயன்று அஸ்தால்லி மையம் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கூட்டத்தில், கர்தினால் தாக்லே, ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சாஸ்ஸோலி, காங்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு பெண், மற்றும் அஸ்தால்லி மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணி கமில்லோ ரிப்பமோந்தி ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கோவிட்-19 நெருக்கடியால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் கடந்து, 2020ம் ஆண்டில் இத்தாலி நாட்டிற்கு கடல் வழியே வந்து சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 34,000த்திற்கும் அதிகம் என்றும், இந்த எண்ணிக்கை, 2018, மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளின் எண்ணிக்கையைவிட மிக அதிகம் என்றும் அஸ்தால்லி மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையே, 2020ம் ஆண்டு, உலகெங்கும் பல்வேறு வன்முறைகளிலிருந்தும், சமுதாய அடக்குமுறைகளிலிருந்தும் தப்பித்து சென்றோரின் எண்ணிக்கை, 8 கோடி என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2021, 14:28