புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் (2018.01.03) புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் (2018.01.03) 

மகிழ்வின் மந்திரம்: தம்பதியர்க்காகச் செபிக்க திருத்தந்தை அழைப்பு

கிறிஸ்தவத் தம்பதியர், தங்களின் சிலுவைகளைச் சுமப்பதற்கும், ஒருவர் ஒருவரை மன்னிக்கவும், ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக்கொள்ளவும் வல்லமையைத் தருகிறவர், கிறிஸ்துவே (அன்பின் மகிழ்வு 73)

மேரி தெரேசா: வத்திக்கான் 

‘அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவில், 'திருமணம் எனும் அருளடையாளம்' என்ற மூன்றாவது துணை தலைப்பு, ஐந்து பத்திகளைக் கொண்டுள்ளது (71-75). இதில், 73ம் பத்தியில், திருமணமான தம்பதியர் மீது ஆண்டவர் தம் பேரன்பை அபரிவிதமாகப் பொழியுமாறு செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த 73ம் பத்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள கருத்துக்கள் இதோ: திருமணம் எனும் அருளடையாளத்தில், தம்பதியர் ஒருவர் ஒருவருக்கு தங்களையே வழங்குவது, திருமுழுக்கு எனும் அருளடையாளத்தில் பெற்ற திருவருளின் கொடையாகும். திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதியர், ஒருவர் ஒருவரை ஏற்பதில், ஒருவர் ஒருவருக்கு தங்களையே முழுவதும் வழங்குவதற்கும், பிரமாணிக்கம், மற்றும், புதிய வாழ்வுக்குத் திறந்தமனதாய் இருப்பதற்கும் கிறிஸ்துவின் அருளோடு, அவர்கள் உறுதி அளிக்கின்றனர். இந்த அம்சங்கள், உறுதியான திருமண வாழ்வுக்கு அவசியமானவைகளாக, கடவுளால் வழங்கப்பட்ட கொடைகளாக அவர்கள் ஏற்கின்றனர். இதனால், அவர்கள் தங்களின் திருமண அர்ப்பணத்தை, கடவுளின் பெயராலும், திருஅவையின் பிரசன்னத்திலும் உண்மையாகவே ஏற்கின்றனர். இவ்வாறு அவர்களில் ஏற்படும் நம்பிக்கை, திருமணத்தின் விழுமியங்களை, அர்ப்பணங்களாக ஏற்பதை, இயலக்கூடியதாக்குகின்றது. அவற்றை, அவர்கள், அருளடையாளத்தின் அருளின் வழியாக, இன்னும் சிறப்பாகப் பேணிக்காக்க முடியும். அதன்பயனாக, திருஅவையும், திருமணமான தம்பதியரை, முழுக் குடும்பத்தின் இதயமாக நோக்குகின்றது. அதைத் தொடர்ந்து, அந்தக் குடும்பமும் இயேசுவை நோக்கிப் பார்க்கிறது. திருமணம் எனும் அருளடையாளம், ஒரு “பொருளோ” அல்லது, ஓர் “அதிகாரமோ” அல்ல, ஏனெனில், அதில், கிறிஸ்துவே கிறிஸ்தவத் தம்பதியரைச் சந்திக்கிறார். அவர், அவர்களோடு குடியிருக்கிறார், அவர்கள் தங்களின் சிலுவைகளைச் சுமப்பதற்கும், அவரைப் பின்செல்லவும், வீழ்ந்துவிட்டபின் அவர்கள் மீண்டும் எழுந்திருக்கவும், ஒருவர் ஒருவரை மன்னிக்கவும், ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக்கொள்ளவும் வல்லமையைத் தருகிறார். கிறிஸ்தவத் திருமணம், சிலுவையில் முத்திரையிடப்பட்ட உடன்படிக்கையில் கிறிஸ்து, தம் திருஅவையை எவ்வளவு அன்புகூர்கிறார் என்பதன் அடையாளம். ஆயினும், அது, தம்பதியரின் ஒன்றிப்பில், அன்பு, பிரசன்னமாக உள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. தம்பதியர் ஓருடலாக மாறுவதன் வழியாக, இறைமகன், நம் மனித இயல்போடு தன்னையே இணைத்ததைக் குறித்துநிற்கின்றனர். இதனாலே, அவர்களின் அன்பு, மற்றும், குடும்ப வாழ்வின் மகிழ்வுகளில், இவ்வுலகிலேயே செம்மறியின் திருமண விருந்தின் ஒரு முன்சுவையை, அவர்களுக்கு அவர் அளிக்கின்றார். கணவன் மற்றும், மனைவி என்ற மனிதத் தம்பதியர்க்கிடையேயுள்ள, கிறிஸ்துவுக்கும், அவரது திருஅவைக்கும் இடையேயுள்ள ஒப்புமை நிறைவற்று இருந்தபோதிலும், திருமணமான ஒவ்வொரு தம்பதியர் மீது ஆண்டவர் தம் பேரன்பை நிரம்பப் பொழியுமாறு மன்றாட நாம் தூண்டப்படுகிறோம் (அன்பின் மகிழ்வு 73).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2021, 13:33